தேவநற்கருணை வாங்கும் ஆசையினால் நடந்த புதுமை!

இத்தாலியா தேசத்தில் பொலோஞ்ஞா பட்டணத்தில் புனித தோமினிக் சபையைச் சேர்ந்த கன்னியர் மடத்தில் பதினொரு வயதுள்ள இமெல்தா என்ற பெண் ஒருநாள் மற்ற பெண்கள் தேவநற்கருணை வழியாக ஆத்துமத்துக்கு நன்மை வருமென்று பேசிக் கொண்டிருப்பதைக்கேட்டு தானும் வாங்குவதற்கு ஆசைப்பட்டு குருவானவரிடம் அனுமதி கேட்டாள் . அவர் இந்தப் பெண்ணுக்கு வயது கொஞ்சமாய் இருக்கிறதென்று நினைத்து இனிமேல் வருகிற திருநாட்களில் நன்மை வாங்க அனுமதி தருகின்றேன் என்று சொல்லி தட்டிக்கழித்தார் . பரலோகத்துக்கு எழுந்தருளிய திருநாள் வந்தது . அந்தப் பெண் அன்று நன்மை வாங்க விரும்பி திரும்பவும் குருவானவரிடம் அனுமதி கேட்டாள் அதற்கு குருவானவர் சம்மதிக்கவில்லை.

   அன்று கன்னியர்கள் நன்மை வாங்குகிறதை அவள் கண்டு அந்தப் பாக்கியம் தான் அடையாததினால் மிகவும் மனம் நொந்து அழுதால் . குருவானவர் எல்லோருக்கும் தேவநற்கருணை கொடுத்து முடித்த பிறகு , நற்கருணை பாத்திரத்தை மூடி பீடத்தின் மேல் கொண்டுபோய் வைத்தார் . அப்போது தேவநற்கருணை உட்கொண்ட கன்னியர்கள்தங்கள் நெஞ்சில் எழுந்தருளின தேவனுக்கு நன்றி சொல்லுகிறபோது இமெல்தா கோவிலின் ஒரு மூலையிலிருந்து பீடத்தின் மேல் இருக்கிற தேவநற்கருணைப் பாத்திரத்தைப் பார்த்து , எப்போது இந்தப் பாக்கியம் கிடைக்குமோ என்று ஏங்கினாள் .அச்சமயத்தில் அற்புதமாக தேவநற்கருணைப் பாத்திரம் திறக்கப்பட்டு அதன் உள்ளேயிருந்த தேவநற்கருணை வெளியில் வந்து எல்லோரும் காண ஆகாயத்தின் வழியாக பறந்து போய் இமெல்தாவின் தலைக்கு மேல் நின்றது .இதைக் கண்டவர்கள் எல்லோரும் ஆச்சரியப்பட்டார்கள் . குருவானவர் உடனே பாத்திரத்தை எடுத்துக்கொண்டுஅந்தப் பெண்ணின் தலைக்கு மேல் நிற்கிற தேவநற்கருணையைப் பாத்திரத்திற்குள்ளே வைக்கிறதற்கு அங்கே போனார் . போனவுடனே , அவர்பரிசுத்த ஆவியினால் ஏவப்பட்டு , அந்தப் பெண்ணுக்கு நற்கருணை கொடுத்தார் . அதை வாங்கியவுடனே , அவள் அனுபவித்த சந்தோஷத்தின் மிகுதியால் அங்கேதானே பாக்கியமான மரணத்தை அடைந்தாள் .

   எனதருமை கிறிஸ்தவ நண்பர்களே ! அவரவருடைய ஆசைக்குக் தக்கபடி தேவநற்கருணை வழியாகப் பயன் அடையலாம் .ஒருவன் பசியோடு சாப்பிட்டால் அது உடலுக்கு நல்லது . அவ்வண்ணமே ஞானப்பசியோடு தேவநற்கருணையை மிகுந்த ஆசையோடு வாங்குகிறவனுக்கு மிகுந்தஞான நன்மை வரும் . இயேசுநாதர் தேவநற்கருணை வழியாக உங்களுடைய உள்ளத்தில் வருவது எவ்வளவு அவசரமாயிருக்கிறதென்றும், இயேசுநாதர் உங்கள் உள்ளத்தில் எழுந்தருளினால் எத்தனை நன்மை உங்களுக்குக்கொடுப்பாரென்றும் நீங்கள் நினைத்தால் மகா ஆசையோடு தேவநற்கருணை வாங்குவீர்கள் . இறைமகன் பூலோகத்தில் அவதரிதபோது பல வியாதிக்காரர்களைத் தொட்டதினால் அவர்கள் சுகம் அடைந்தார்கள் . இதைப் பெரும்பாடுள்ள ஒரு வியாதிக்கார பெண் அறிந்து , இயேசுவுடைய திருச்சட்டையின் விளிம்பை ஆசையோடு தொட்டவுடனே சுகம் அடைந்தாள் .  நீங்கள் பற்றுதலோடு தேவநற்கருணை வாங்கினால் , உங்கள் ஆத்துமத்தில் உண்டான வியாதியெல்லாம் நீங்கி போகுமென்பதற்குச் சந்தேகமில்லை .

   அந்தப் பெண்ணிடத்தில் புதுமை செய்த கர்த்தர் தாமே தேவநற்கருணை வழியாக உங்கள் ஆத்துமத்தில் வருகிறார் . அவருக்கு முன்பிருந்த புதுமை செய்யும் சக்தி இப்போதும் குறைந்துவிடவில்லை , தேவநற்கருணை வாங்குகிறபோது உங்களுக்கு இருக்கிற ஆவலுக்குத் தக்கபடி அவருடைய பலன் உங்களிடத்தில் விளங்கும் .