சேசுவின் இரக்கப் படத்தின் பக்தி

1931-ஆம் ஆண்டு பிப்ரவரி 22-ம் நாள் சங்  சகோதரி பவுஸ்தீனா தனது அனுபவத்தைத் தானே விளக்குகிறாள். “வெண்ணாடையணிந்தவராக சேசுவைக் கண்டேன்.  ஒரு கரத்தை ஆசீரளிக்கும் பாவனையாக உயர்த்தியிருந்தார்.  மறு கரத்தால் மார்பிலிருந்த ஆடையைத் தொட்டுக் கொண்டிருந்தார். அந்த ஆடையின் உள்ளிருந்து சிவப்பும், வெண்மையுமான ஒளிக்கதிர்கள் வீசின.” அப்போது அவளிடம் நமது ஆண்டவர்: “நீ காணும் காட்சியைப்போல் ஒரு படம் வரை.  அதற்கடியில் “சேசுவே, உம்மை நம்புகிறேன்” என்று எழுது. இந்தப் படம் முதன்முதலில் உங்கள் மடத்துக் கோவிலிலும் பிறகு உலக முழுவதிலும் வணங்கப்பட விரும்புகிறேன்” என்றார்.

சிவப்பு வெண்மை ஒளிக்கதிர்களின் விளக்க மென்னவென்று ஆண்டவரிடம் கேட்ட பவுஸ்தீனாவுக்கு சேசு சொன்னார்: “சிலுவையின் மீது வேதனை மிகுந்த என் இருதயத்தைக் குத்தித் திறந்த போது என் இரக்கத்தின் ஆழத்திலிருந்து பீறிட்ட இரத்தத் தையும் நீரையும் அவை குறிக்கின்றன. நீரின் அடையாளமாக வெண்கதிர்.  இரத்தத்தின் அடையாளமாக செங்கதிர். வெண் கதிர் ஆன்மாவையும் செங்கதிர் ஆன்மாவின் உயிரையும் குறிக்கின்றது.  இந்தக் கதிர்கள் எனது தந்தையின் கோபத்திலிருந்து ஆன்மாவைப் பாதுகாக்கின்றன.  இதன் அடைக்கலத்தில் வாழ்பவன் பேறுபெற்றவன். ஏனெனில் இறைவனின் நீதிக் கரங்கள் அவனை ஒருபோதும் தீண்டாது” என்றார்.  இந்தப் படம் எல்லோராலும் வணங்கப்பட விரும்பிய நமதாண்டவர் ஒரு வாக்குறுதியையும் இதோடு சேர்த்தார். “இந்தப் படத்தை வணங்கும் ஆன்மா மீட்படையாமல் போகாது. மேலும் அந்த ஆன்மாவுக்கும் இவ்வுலகிலும், சிறப்பாக மரண வேளையிலும் தனது சத்துருக்கள்மீது வெற்றியை வாக்களிக்கிறேன்.  எனது சொந்த மகிமையைப் போல அந்த ஆன்மாவை நானே பாதுகாப்பேன்” என்றார்.

சேசு இன்னும் சொன்னார்: “இப்படம் உள்ள குடும்பங்களையும் நகரங்களையும் பாதுகாப்பேன்.” இவ்வாக்குறுதி நிறைவேறியதின் அடையாளமாக நாம் தெரிந்து கொள்ளும் சம்பவங்கள்:

இரண்டாவது உலக மகாயுத்தத்தில் ராணுவத் தாக்குதலிலிருந்து சேசு குறிப்பிட்ட படம் வைத்து வணங்கிய கிராக்கோ, வில்நோ என்ற இரு நகரங்கள் மட்டும்தான் போலந்து தேசத்தின் அழிவிலிருந்து பாதுகாக்கப்பட்டன.