சிறு பிள்ளைகளின் ஜெபம்

ஓ! சுவாமி! நான் இருக்கிற பூலோகத்தையும், பார்க்கிற வானத்தையும் நீரே செய்தீரென்றும், உம்முடைய மனதுக்கு மீறிப் பாவம் செய்தால் எப்போதும் நரகத்தின் நெருப்பிலே வேக வேண்டுமென்று தாய் தகப்பன் எனக்கு சொன்னார்களே! அதனாலே எனக்குப் பயம் பிடித்திருக்கிறதே சுவாமி.  உம்மைச் சரீரக் கண்ணாலே காணக் கூடாதென்றும், கொஞ்ச நாள் மாத்திரம் பூலோகத்திலிருந்து இறந்து தேவரீர் கிட்டே வர வேணுமென்றும், பூலோகத்திலே சில காலமிருந்து அதையும் பசாசுக்களின் தந்திரங்களையும் ஜெயித்து முன்னுக்கு வருவது வெகு கஷ்டமென்றும் கேள்விப்பட்டேன்.  இதனால் விசனமாயிருக்கிறேன்.  இம்மாத்திரம் ஆபத்துக்களை ஜெயித்து, சிறு பிராயம், முதுமைப் பிராயம், இவைகளில் எவ்விதமாய் பாவமில்லாமல் நடந்து உமது கிட்டே வருகிறதென்று அதைரியப்பட்டு நிற்கிறேன் சுவாமி. ஆகையால் நீர் தயவு செய்து எனக்கு நல்ல புத்தி கொடும். நல்ல அறிவு கொடும். உமது கட்டளையை நான் மீறாமல் நடக்கப் பண்ணும்.  நல்ல படிப்பு படித்து பூலோகத்தில் நான் செய்ய வேண்டிய தொழிலை நன்றாய்ச் செய்யப் பண்ணும் சுவாமி. காலை மாலை செபம் பண்ணி ஞாயிற்றுக்கிழமை தவறாமல் திவ்விய பூசை கண்டு நான் செய்யும் கிரியைகளை சரியாய் செய்து உமக்குப் பிரியப்பட நடக்கப் பிரயாசைப்படுவேன் சுவாமி. கெட்ட நினைப்புக்கு இடங்கொடுக்க மாட்டேன்.  என்னைச் சகலமான ஆபத்துக்களில் நின்று இரட்சிப்பது உமது பேரில் விழுந்த பாரம் சுவாமி. 

ஆமென்.