மரணத் தருவாயில் ஜெபம்

தயாபரராயிருக்கிற சேசுவே!  என் தயாபர விசுவாசமே, என் சத்துவமே, என் நம்பிக்கையே, என் சிநேகமே, என் அன்பனே, சுவாமி, இந்த மரணத் தருவாயிலே எனக்கு உம்முடைய திருக்கை கொடுத்து இரட்சியும்.  என்னுடைய நடத்தையைப் பார்த்தால் மிகவும் பொல்லாத நடத்தைதானே, அநேக தோஷ பாவங்களைச் செய்தேனே,  மெய்தான். இப்போது அந்தப் பாவங்களினாலே வந்த கஸ்தி மாத்திரம் இருக்கிறதல்லாமல் வேறு ஒன்றும் காணேன். உமது அளவற்ற நன்மைத்தனம் என் குற்றத்தைப் பொறுத்துக் கொள்ளுமென்றும், ஒரு சிலுவை மரத்திலே நீர் ஜீவனைக் கொடுத்து மீட்ட என் ஆத்துமத்தை நரகத்திலே விழ விட மாட்டீரென்றும் நம்பி யிருக்கிறேன்.  எனது பிரிய சேசுவே!  நீர் என்னைப் புறக்கணித்துத் தள்ளிவிட்டீரென்று நான் நினைக்க மாட்டேன்.  ஏனென்றால் நான் உம்முடைய தசையின் தசையுமாய், எலும்பின் எலும்புமாயிருக் கிறேன்.  நீர் மனுமகனாயிருக்கிறீர்.  என்னை உம்முடைய பிள்ளையயன்று அழைக்கச் சித்தமானீரே. ஆகையால் நானும் உம்மை என் தகப்ப னென்று அழைப்பதிலே சோர்வடையாதபடிக்குப் பலத்த தைரியத்தைக் கொடும்.  என் சர்வேசுரனின் தாயே!  இந்த மட்டும் எனக்கு இத்தகைய உபகாரி யாயிருந்த நீர் இத்தறுவாயிலே என்னுடைய நன்மை யும், தின்மையும், பாக்கியமும், நிர்ப்பாக்கியமும், இரண்டிலொன்று கண்டு தீர்வையிடப்போகிற இவ்வேளையிலே உம்முடைய தயாப இரக்கத்தைக் காட்டும். தேவ நீதிப் பத்திராசனத்துக்கு முன் ஆத்துமங்களைக் கொண்டுபோய் விட்டு, சத்துருக் களிடத்திலிருந்து காத்து தயாபரிக்கும் பணியில் உள்ள அர்ச். மிக்காயேலே!  என் ஆத்துமத்தை உம்முடைய ஆதரவிலே வைக்கிறேன்.  எனக்குக் காவலான சம்மனசானவரே!  எனக்குச் சகாயமா யிரும்.  பரலோக இராச்சியத்தில் வாழ்ந்திருக்கிற சகல அர்ச்சியசிஷ்டவர்களே, எனக்கு உதவியாக வாருங்கள்.  உங்கள் சகாயத்தினாலே நானும் இந்த மண்ணுலகத்தை விட்டு பரலோகத்தில் சேர்ந்து உங்களோடு கூட ஆண்டவரைச் சிநேகித்து வாழ்த்தும்படிக்கு வழிபாருங்கள்.  

ஆமென்.