இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

ஆராதனைப் பிரகரணம் 24.

நித்திய மகிமைக்கு இருப்பிடமான கன்னித்தாயின் திருக்குமாரனாகிய இயேசுவே! அத்தியந்த பக்தி வணக்கத்துடனே தேவரீரை ஆராதிக்கிறேன். ஆராதனைக்குரிய பரம திருவருட்சாதனமாகிய தேவ நற்கருணையைத் தேவரீர் உண்டாக்கின நாள் முதற்கொண்டு அதிலே மனுமக்களால் தேவரீருக்குச் செய்யப்பட்ட சகல நிந்தை அவமான துரோகங்களுக்கும், இயன்றமட்டும் பொதுப் பரிகாரம் செய்யும்பொருட்டு, அடியேன் சகல பாவிகளுக்குத் திடமான அடைக்கலமும் தேவரீருக்குப் பிறகு அவர்களுக்குப் பிரதான நம்பிக்கை ஆதரவுமாகிய உம்முடைய திரு மாதாவின் உதவி அநுக்கிரகத்தை இரந்து கேட்கிறேன் சுவாமி.

மனுக்குலத்தின் நம்பிக்கையும், பரலோகத்துக்கும் பூலோகத்துக்கும் அரசியும், உம்முடைய திருக்குமாரனை இடைவிடாது ஆராதிக்கிறவளுமாகிய அன்புள்ள தேவதாயே! நீர் அன்போடே ஏற்றுக்கொண்ட பிள்ளைகளில் அடியேன் ஒருவனாயிருக்க மகிமைப் பாக்கியம் பெற்றவனாகையால் அனந்த பக்தி நம்பிக்கை நேசத்துடனே உம்முடைய பாதத்திலே விழுந்து பாவிகளாகிய எங்களுக்கு நீதித் தீர்வையிடும் நித்திய கர்த்தாவினிடத்தில் நீரே மனுப்பேசி, எங்களுக்காகவும் எங்கள் பேராலேயும் உம்முடைய புண்ணிய பலன்களால் உத்தரிக்கவும், எங்களாற் செலுத்த முடியாத அனந்த நமஸ்காரக் கடமைகளைத் தீர்த்து நிறைவேற்றவும் வேணுமென்று உம்மை மன்றாடுகிறோம் ஆண்டவளே. ஆமென்.

நித்திய ஸ்துதிக்குரிய பரிசுத்த பரம திவ்விய நற்கருணைக்கு, சதாகாலமும் ஆராதனையும் துதியும் தேத்திரமும் நமஸ்காரமும் உண்டாகக் கடவது.

ஆமென்.