மருதமடு மாதாவிற்குச் செபம்.

மருதமடுத் திருப்பதியிலே பேருதவி புரிகின்ற பரிசுத்த செபமாலை மாதாவே, பரலோக பூலோக அரசியே! கஸ்திப்படுகிறவர்களுக்கு ஆறுதலே! பாவிகளின் தஞ்சமே உம்முடைய இன்பமான சந்நிதானம் தேடி வந்தோம். உம்முடைய கருணையை வேண்டி வந்தோம் தாயே! உலகில் எங்கள் ஆண்டவள் நீரல்லவோ, எங்கள் தஞ்சம் நீரல்லவோ! எங்கள் அன்பான அன்னை நீரல்லவோ! எங்கள் ஆதரவும், எங்கள் சந்தோசமும், எங்கள் நம்பிக்கையும் நீரல்லவோ! நீர் எங்களுடைய தாயார் என்பதை எங்களுக்கு காண்பியும். பிள்ளைகள் செய்த குற்றங்களைத் தாய் பாராட்டுவாளோ? உம்மைத்தேடி வந்த நிர்ப்பாக்கியர்கட்கு உதவியாயிரும். அழுகிறவர்களை அரவணையும். அல்லல் படுகிறவர்களுக்கு ஆறுதலாயிரும். நீர்; இரங்காவிட்டால் எங்களுக்கு வேறார் இரங்குவார்? நீர் உதவாவிட்டால் எங்களுக்கு வேறார் உதவுவார்? நீர் ஆதரியாவிட்டால் எங்களை வேறார் ஆதரிப்பார்? நீர் நினையாவிட்டால் எங்களை வேறார் நினைப்பார்? தஞ்சமென்று ஓடிவரும் அடியார் மேலே தயவாயிரும் தாயே! தயைக்கடலே! தவித்தவர்களுக்கு தடாகமே! தனித்தவர்களுக்கு தஞ்சமே! உம்முடைய சந்நிதானம் தேடிவந்தோம்! காடுகளைக் கடந்து ஓடிவந்தோம்! துன்பம், பிணி, வறுமை முதலிய கேடுகளால் வாடிவந்தோம்! எங்கள் நம்பிக்கை வீண் போகுமோ? எங்கள் மன்றாட்டு மறுக்கப்படுமோ? எங்கள் யாத்திரை பலனற்றதாய்ப் போகுமோ? எங்கள் அழுகைக் கண்ணீர் உம்முடைய இருதயத்தை உருக்காது போகுமோ? அப்படியாகுமோ அம்மா? அடியோர்க்கு அன்பான அம்மா, செபமாலை அம்மா எங்களை முழுவதும் உமக்கு ஒப்புக்கொடுக்கிறோம். எங்களை ஏற்று ஆசீர்வதித்தருளும்.

ஆமென்.