அர்ச்சியசிஷ்ட அந்தோனியாரிடம் மூன்று மன்றாட்டுகள்.

முதல் மன்றாட்டு.

பதுவைப்பதியரான அர்ச்சியசிஷ்ட அந்தோனியாரே, பரிசுத்த தனம் விளங்கும் லீலியே, விலை மதிக்கப்படாத மாணிக்கமே! திருச்சபையில் துலங்கும் நட்சத்திரமே, வாழ்க! மகா பேறு பெற்ற அர்ச்சியசிஷ்ட அந்தோனியாரே! பரலோகவாசிகளால் தெளிந்த மெய்ஞான ஞானாதித்தரே! தெய்வ நேச அக்கினியால் சுடர் விட்டு எரிகிற மெய்ஞான பக்தி சுவாலகரே! என் முழு இருதயத்தோடு உம்மை ஸ்துதித்து  வாழ்த்துகிறேன். சர்வேசுரன் உமக்கு ஏராளமாய்ப் பொழிந்த சகல உபகார சகாயங்களுக்காக உம்மை ஸ்துதிக்கிறேன். ஆ! என் நேச அர்ச்சியசிஷ்ட அந்தோனியாரே! உமக்கு என்  தோத்திரங்களை  ஒப்புக் கொடுக்கிறதற்காக உமது திருச்சுரூபத்திற்கு முன்பாக தாழ்ச்சி விநயத்துடன்  முழந்தாளிட்டு நிற்கிறேன்.

சர்வேசுரனுக்கு மிகவும் பிரியமான சினேகிதரே! நீர் செய்திருக்கிற வாக்குத்தத்தை நினைத்தருளும்.  அடுத்தடுத்து ஒன்பது செவ்வாய்க்கிழமை உமது சுரூபத்தைச் சந்தித்து வணங்குகிறவர்களுக்கு உமது தயையின் சக்தியைக் காண்பித்தருளுவீரென்று நீர் எங்களுக்கு வாக்கு கொடுத்திருக்கிறீரே! நீர் இதுவரையிலும் உமது வாக்குத்தத்தத்தைப் பிரமாணிக்கமாய் காப்பாற்றி வருகிறீர். தகுந்தபடி உமது உதவியை மன்றாடினவர்கள் எல்லாரும் வல்லபமுள்ள உமது சிபாரிசைத்  தடுக்க பெருத்த விக்கினங்கள்  இல்லாத போதெல்லாம் தாங்கள் கேட்ட உபகாரத்தை  அடைந்தார்களே!

ஆகையால் நானும் என் இருதயத்தை உமக்குத்  திறந்து காட்டவும்  என் அவசரங்களை உம்மிடத்தில் முழு நம்பிக்கையுடன்  சொல்லிக்  காட்டவும்  இந்த ஆலயத்தில்  வந்திருக்கிறேன். உமது சுரூபத்தை  உற்றுப்  பார்க்கும் போது எனக்குக்  கண்ணீர்  ததும்புகின்றது. ஆயினும் என் ஆத்துமம் பரலோகம் நோக்கித்  தாவுகின்றது.

இத்தருணத்தில் உமது மட்டில்  எனக்கு உண்டாயிருக்கிற நேச பாசத்துக்கு சரி யொத்த ஆசை அன்போடென்கிலும்  மாட்சிமை தாங்கிய அம் மேலான வாசஸ்தலத்தினின்று, நீர் என் பேரில் கிருபா நோக்கம் பாலித்தருளும். உமது கரத்தில் ஏந்திய திருக்குழந்தை இயேசுவின் மட்டில்  உமக்கு உண்டாயிருக்கிற நேசத்தைப் பார்த்து  நான் கெஞ்சிக் கேட்பது ஏதெனில் என் அவசரங்கள் எல்லாம் அத்திருப்பாலனுக்குச் சொல்லிக் காட்டி அவரிடத்தில் எனக்காக மனுப் பேச வேண்டும் என்பதாம்.

என் ஆசைக்குரிய அர்ச்சியசிஷ்ட அந்தோனியாரே! எனக்கு உதவி செய்கிறது உமக்கு எவ்வளவோ எளிதாயிருக்கிறது. என் மன்றாட்டைத் தந்தருளுவதற்காக நீர் சர்வேசுரனிடத்தில் வாய் திறந்து பேசுவது ஒன்றே போதுமானது. உள்ளபடியே உமது கரங்களில் நீர் அன்போடு அரவணைத்த திருக் குழந்தை இயேசு உமது விண்ணப்பங்களைத் தள்ளிப் போடப்  போகிறதே இல்லை. நீர் இவ்வுலகில் சஞ்சரித்த காலத்தில் அவருக்கு உமது மட்டில் உண்டான நேசத்தால் பல தடவை அவர் உமக்கு தரிசனையானாரே! அவரைத் தொடவும் முத்தமிடவும்  தழுவவும் சித்தமானீரே!

மோட்சத்தில் அவரோடு அரசாண்டு வரும் இத்தினத்தில் உம்மை நேசிக்கவும், உம்மை மகிமைப்படுத்தவும் நீர் சொல்வதைக் கேட்கவும் அவர் ஆயிரம் மடங்கு ஆசையுள்ளவராய் இருக்க மாட்டாரோ? பூவுலகில் உமது திருக்கரங்களுக்கும், நேசத்துக்குரிய உமது இருதயத்திற்கும் ஒப்புவிக்கப்பட்ட திவ்விய பாலனாகிய இயேசு, பரலோகத்திலும் இந்த இணை பிரியாத பட்சத்தைப் பாராட்டி வருகிறாரென்று உலகம் தெரிந்து கொள்ள வேண்டி இருந்தது. இதைப் பற்றியல்லோ மதுர குணமுள்ள நமது இரட்சகர் உமது சுரூபம் சௌந்தரியம் நிறைந்த குழந்தை இயேசுவைக் கையில் ஏந்தின வண்ணமாய் எழுதப்படவும் சித்தரிக்கப்படவும் சித்தமானார்.

இயேசுவே! அர்ச்சியசிஷ்ட அந்தோனியாரே! என்றும் இணை பிரியாத நேசர்களே வாழ்க! இயேசுவே! அர்ச்சியசிஷ்ட அந்தோனியாரே! அன்னியோன்னிய நேசபந்தனமான இருதயங்களே! அடியேன் மட்டில் இரக்கம் புரிந்து பக்தி நேசத்தால் என் இருதயத்தை எரியச் செய்தருளும்படி உம்மைக் கெஞ்சி மன்றாடுகிறேன். இயேசுவே! உமது நேச அந்தோனியார் பேராலல்லோ நான் உம்மை மன்றாடுகின்றேன். அந்தோனியாரே! உமது நேச இயேசுவின் பெயராலே நான் உம்மைக் கெஞ்சிக் கேட்கிறேன்.

இயேசுவே! அர்ச்சியசிஷ்ட அந்தோனியாரே! பூலோகத்தில் உங்களை ஐக்கியப்படுத்தினதும் பரலோகத்தில் இப்பொழுது உங்களை ஐக்கியப்படுத்துகிறதுமான உருக்க நேசத்தையும், அன்னியோன்னிய பட்சத்தையும் பார்த்து உங்களுக்கு அதிக பிரமாணிக்கமுள்ள சிநேகிதர்களில் அடியேனையும் ஒருவனாக ஏற்றுக் கொள்ளும்படி மன்றாடுகிறேன்.

ஒ இயேசுவே! அர்ச்சியசிஷ்ட அந்தோனியாரே! என் இருதயத்தை உங்கள் பாதுகாவலில் வைக்கிறேன். ஓ இயேசுவே! அர்ச்சியசிஷ்ட அந்தோனியாரே! உங்கள் கரங்களில் என் சகல கிலேசங்களையும் எனது ஏக்க கலக்கங்களையும் ஒப்புக் கொடுக்கிறேன். இவ்வுலகில் உங்கள் பரிசுத்த சுரூபங்களை மேரை மரியாதையோடும், பக்தி வினயத்தோடும் நோக்கிப் பார்த்து வருகிற அடியேனுக்கு பரலோகத்தில் நித்தியத்திற்கும் உங்களை முகமுகமாய்த் தரிசிக்கிற மேலான பாக்கியத்தைத் தந்தருளுங்கள்.
ஆமென்.

இரண்டாம் மன்றாட்டு.

உபத்திரவப்படுகிறவர்களுக்கு ஊக்கமுள்ள சிநேகிதருமாய், கச்திப்படுகிரவர்களுக்கு உமது ஆறுதல் உதவிகளை ஏராளமாய்ப் பொழிகிறவருமாகிய பேறு பெற்ற அர்ச்சியசிஷ்ட அந்தோனியாரே! இத்தேவாலயத்தில் உம்மைத் தேடி வணங்க வருகிற நிர்பாக்கிய பாவியின் பேரில் நீர் வீற்றிருக்கும் மாட்சிமை தாங்கிய மேலான சிம்மாசனத்தினின்று கிருபா நோக்கம் பாலித்தருளும். நீர் ஒரு நாள் போலோனியா பட்டணத்து வங்கிஷபதியான ஓர் பெண் பிள்ளைக்கு கேள்வியுற அருளிய ஆறுதல் நிறைந்த வார்த்தைகளை ஞாபகப்படுத்திக்கொள்ளும். தொடர்ச்சியாய் ஒன்பது செவ்வாய்க்கிழமை நமது சுரூபத்தைச் சந்தித்து வருவாயானால் உன் மன்றாட்டு கையேற்றுக் கொள்ளப்பட்டது என்று நீ அறிந்து கொள்ளுவாய் என்று திருவுளம் பற்றினீரே! இந்தக் கட்டளையை நிறைவேற்ற வேண்டி உமது சுரூபத்தை இக்கோவிலில் சந்திக்க வந்து அதன் முன்னால் சாஷ்டாங்கமாக விழுந்து உமக்கு என் அவசரங்களைச் சொல்லிக் காட்டுகிறேன்.

மகா பேறு பெற்ற அர்ச்சிஷ்டவரே! கிருபை தயாபத்தின் விலை மதிக்கப்படாத பாத்திரமே! பரிசுத்தத்தனம் முதலிய சகல புண்ணியங்களும் விளங்கும் மாணிக்கமே! அடியேன் உம்மை வணங்கி உமது சுரூபத்தைத் தோத்தரிக்கிறேன். இச்சுரூபத்திற்கு முன் முழந்தாழ்ப்படியிட்டு என் ஆத்துமத்தைத் தாழ்த்தி என் அவசரங்களை உமக்குச் சொல்லிக் காட்டி, இரக்கமுள்ள உமது இருதயத்தின் தயாளத்தைக் கெஞ்சி மன்றாடுகிறேன். உமது சுரூபத்திலல்லாமல் வேறெங்கே நான் உம்மைக் கண்டடைவேன்? உமது பீடத்திற்கு அருகாமையிலன்றி வேறெங்கே நான் உமது அருகில் நெருங்குவேன்? பரிசுத்தராகிய நீர் என் கண்முன்னே நிற்பதைக் காண்பேனாகில் உம்மைக் கனப்படுத்த நான் எவ்வளவோ தீவிரத்துடன் ஓடி வருகிறேன். உமது திருப்பாதங்களைத் தாழ்ச்சியுடன் வணங்கி முத்தம் செய்ய எவ்வளவோ ஆசிப்பேன். உம்மைக் கட்டி முத்தமிடவும், உம்மிடத்தில் பேசவும் என் ஆவல் எவ்வளவோ பெரிதாய் இருக்கும். இவ் விஷேசித்த கிருபை எனக்குக் கிடையாததினாலல்லோ, உம்மையே பார்க்கும் பாக்கியம் எனக்குக் கிடைத்தால் நான் உமக்கு எவ்வித மகிமைகளைச் செலுத்துவேனோ, அந்த மகிமைகளையே உமது சுரூபத்திற்குச் செலுத்த ஆசிக்கிறேன்.

ஆகையால் அர்ச்சியசிஷ்ட அந்தோனியாரே! நான் உம்மை வணங்குகிறதுமல்லாமல் நான் உமக்குச் செலுத்த வேண்டிய மரியாதையோடு குற்றம் நிறைந்த என் சிரசை உமக்கு முன்பாகத் தாழ்த்தி பாவக்கறைபட்ட என் கண்களை உமது பேரில் நோக்குகிறேன். கஸ்திப்படும் என் இருதயம் உம்மை நோக்கித் தாவுகிறது. ஆத்துமங்களுக்கு உண்மையான ஆறுதல் தரும் உன்னத அர்ச்சியசிஷ்ட அந்தோனியாரே! என் துன்மார்க்கங்களை முன்னிட்டு உமது ஆதரவை அடைய நான் அபாத்திரவானென்பது உண்மையிலும் உண்மை. தெய்வ மகத்துவத்திலும் உமது மன்றாட்டின் உதவியினாலும் நீதிமான்களை மாத்திரமல்ல, மெய்யான பக்தியோடும், உறுதியான நம்பிக்கையோடும் உம்மை நாடி வரும் பாவிகளையும் ஆறுதல் படுத்த சித்தமாய் இருக்கிறீர். ஆகையால் என் நெருக்கடியான அவசரங்களில் நான் உம்மை அண்டி வந்து என் முழு இருதயத்தோடு உமது தாள நெருக்கத்தை நோக்கி அபயமிடுகிறேன். என் வேண்டுதல் உமது சன்னதி மட்டும் வரக்கடவது. இரக்கமுள்ள இருதயமே! எனது பெருமூச்சுகளைக் கேட்கக்கக் கடவது.

ஒ என் அன்புக்குரிய தந்தையே! என் இக்கட்டு ஏக்க கலக்கங்களை நீர் அறிவீர். நான் கேட்பதைக் கடவுளிடத்தினின்று நீர் எளிதில் அடைந்து கொடுப்பீர். உமது கைகளால் தழுவப்பட சித்தமான நேசத்திற்குரிய இயேசு உமது ஆசைக்கு இணங்காதிருப்பாரோ?  உலக எத்திசையிலும் அதிசயிக்கப்படும் உமது இரக்கப் பெருக்கத்தை நான் கொண்டாட விடை கொடுத்தருளும். நிர்பாக்கியப் பாவிகளின் மட்டில் நீர் காட்டும் உதாரத்துவத்தையும் உருக்கமுள்ள விசுவாசத்தோடு உம்மை மன்றாடுகிற நிர்பாக்கியங்களை ஆறுதல்படுத்த நீர் எடுத்துக் கொள்ளும் கவலையையும், உமது ஒத்தாசையைக் கேட்ட ஏறக்குறைய அனைவரும் ஏற்கனவே கண்டறிந்து இருக்கிறார்கள். ஆகையால் என் மன்றாட்டை உமது கரங்களில் ஒப்புவித்து உமது பாதுகாவலில் வைக்கிறேன். என் ஆசை விருப்பங்களை உமது நல்ல இயேசுவுக்கு ஒப்புக்கொடும். அவர் அவைகளைத் தமது திருச்சித்தத்தின்படியே கேட்கக் கடவாராக!
ஆமென்.

மூன்றாம் மன்றாட்டு.

மகா பேறு பெற்ற அர்ச்சியசிஷ்ட அந்தோனியாரே! துன்பப்படுவோருக்கு நேசமுள்ள ஆறுதலானவரே! எவ்வித பிணிகளையும் நிவிர்த்தி செய்யும் சோர்வடையாத பண்டிதரே! உலகமெல்லாம் உம்மைப் புகழ்ந்தேற்றுகிறது. எப்பக்கங்களிலும் உமது புதுமைகளைப் பிரபல்லியமாய்ப் பேசி வருகிறார்கள். உள்ளபடியே உமது வல்லமையின் பெருமையே பெருமையாம். நீர் உயிரோடிருக்கையில் அநேகமாயிரம் ஆத்துமங்களைத் திருப்ப கடவுள் உம்மைத் தெரிந்து கொண்டார். பரலோகத்தில் அவரோடு நித்தியத்திற்கும் அரசாளும் இத்தினத்தில் சர்வ வல்லமையுள்ளவர் கரத்தில் ஏராளமான புதுமைகளைச் செய்யும் கருவியாக விளங்குகிறீர். நீர் அவரை மன்றாடுகையில், அவர் மனிதர்களை நன்மை வரப்பிரசாதங்களினால் நிரப்பச் சித்தமாகிறார்.

ஆகையால், கச்திப்படுகிரவர்களுக்கு ஆறுதலானவரே! முழு நம்பிக்கையுடன் உம்மை மன்றாடுகின்றேன். கடவுளிடத்தில் உமக்கு உண்டாகிய பெருத்த செல்வாக்குகளைக் கொண்டு திடன் கொள்ளுகிறேன். துன்பப்படுகிறவர்களுக்கு மனுப்பேசுகிரவராக அவரால் நியமிக்கப்படுகிறீர். நீர் என் வேண்டுதலுக்கு இரங்கி நான் உம்மிடத்தில் சொல்லிக் கொள்ளும் என் நெருக்கடியான இடறுகளில் எனக்கு ஆறுதல் கொடுக்கும்படி உம்மைக் கெஞ்சிக் கேட்கிறேன். திவ்விய பாலன் இயேசுவின் முன் நீர் உமது கற்புள்ள இருதயத்தில் அனுபவித்த சொல்ல முடியாத பாக்கியத்தையும், அத்திருப்பாலன் தமக்கு, உமது மட்டிலுள்ள நேச நம்பிக்கையின் அடையாளங்களை காட்டுகையில் நீர் அனுபவித்த பேரானந்தங்களையும் பார்த்து உமது கரங்களில் ஏந்திய அந்த நல்ல இயேசுவுக்கு முன், என் ஆவலுள்ள ஆசைகளை எடுத்துக் காட்டும்படி உம்மை மன்றாடுகின்றேன். இரட்சகர் இவ்வுலகில் உம்மை சகலவித நன்மை வரப்பிரசாதங்களினாலும்  நிரப்பினாரே! அவைகளைப் பார்த்து நீர் என்னை உம்முடைய பேறு பலன்களுக்குப் பங்காளியாகவும் நான் ஆசிக்கும் சலுகைகளை எனக்கு உறுதியாய் அடைந்து தந்தருளவும் தயை புரியும் படி உம்மைப் பிரார்த்தித்துக் கொள்கிறேன்.

ஒ மேலான அர்ச்சியசிஷ்ட அந்தோனியாரே! உதார குணமுள்ள உம்மைப் பார்த்து நான் வேண்டிக் கொண்டது வீண் போகவில்லை என்று நான் உணரச் செய்தருளுவீராக. உமது பேரில் எனக்குள்ள பக்தி பற்றுதல் இதனால் அதிகரிப்பதுடன் உமது திரு நாமத்தை சகலருக்கு முன்பாக நான் புகழ்ந்து கொண்டாடுவேன்.

நமது ஆண்டவராகிய இயேசுக்கிறிஸ்து நாதர் ஒலிவேத்து தோட்டத்தில் அவஸ்தையாய் இருக்கையில் அவர் துவங்கி முடித்த மூன்று மன்றாட்டுகளுக்கு உண்டாயிருந்த நம்பிக்கையோடும் அமைந்த மனதோடும் நான் இதோ உமது திருச் சுரூபத்துக்கு முன்பாக, உமக்கு ஒப்புக்கொடுத்த மூன்று மன்றாட்டுகளையும் முடிக்க ஆவலாயிருக்கிறேன். அவரது வாயினாலும், அவரது இருதயத்தினாலும் பிதாவை நோக்கி அடியேன் அபயமிட்டு சொல்கிறதாவது: என் பிதாவே, சகலமும் உம்மால் கூடியது. கஸ்திக்குரிய இப்பாத்திரத்தை என்னிடத்திநின்று அகலச் செய்து நான் கேட்கும் காரியத்தை தயவோடு எனக்கு அளித்தருளும். ஆகிலும் இப்பொழுதும் எப்பொழுதும் என் மனதல்ல, உமது சித்தமே நிறைவேறக்கடவது.

ஆமென்.