அர்ச்சியசிஷ்ட அந்தோனியார் நவநாள் ஜெபம்.

கற்பில் மேன்மையான லீலி என்ற மலரின்  அடையாளமான அர்ச்சியசிஷ்ட அந்தோனியாரே! எளிமையின் ஆபரணமே, உபவாசத்தின்  கண்ணாடியே, தூய்மையின்  எடுத்துக்காட்டே, தூய தன்மையின்  ஒளிரும்  தாரகையே! ஆசார முறைமைகளின் சோடினையே, பரத்தின் வடிவே, திருச்சபையின் தூணே, திரு அருள் மறை உரையாளரே, காமாந்தகரை  அடக்குபவரே, புண்ணியங்களை  விதைக்கிறவரே! துயருற்றோருக்கு ஆறுதல்  தருபவரே, உம் திருக்கரங்களில் இறைவனின் திருமகனை ஏந்துகிறவருமாய், தேவநேசத்தால் எரியும்  அனலுமாய், பச்சாதாபத்தின் சீவிய சுவாலையாய், உம் பிரசங்கத்தால் பாவிகளை தேவ பயத்தின்  நெருப்பினால் பற்றி எரித்தவரே, வேத சாட்சியாக விரும்பியவரே, தூய தீர்க்கதரிசியே,

பாவிகளைத் திருத்துகிறவரே! நரகத்திற்கு  பயங்கரத்தை வருவிக்கிறவரே! எளிய பாவிகளாகிய நாங்கள் உம் அடைக்கலத்திலும் மன்றாட்டிலும் இருக்க எங்களைக் கையேற்று நடத்தியருளும். பாவிகளான எங்களுக்கு மெய்யான உத்தம மனஸ்தாபமும், அதனால் கண்ணீரும் உண்டாகும் அருளையும் ஞானமுள்ள தியாகத்தையும் இறைவன் எங்களுக்குத்  தந்தருளும்படி அவரை வேண்டிக்  கொள்ளும். மிகவும் எரிகிற அன்பினால் எங்களைக்  கொளுத்தி எரிக்கச் சித்தமாய் இருக்க வேண்டுமென்று மிகவும் தாழ்ச்சியுடன் உம்மை வேண்டிக்கொள்கிறோம்.

செபிப்போமாக.
தயை மிகுந்த இறைவா! உம் பிரிய அடியாரான தூய அந்தோனியாரைப் போல்  நானும் அழிந்து போகிற உலக செல்வங்கள்  மேல் எனக்குள்ள பற்றை அகற்றி, உமதண்டை வந்து உமக்கு ஊழியம் செய்து வருவதே  இப்பூவுலகில் எனக்கு உண்மையான  நன்மையே யொழிய, வேறு இல்லை என்று கண்டுபிடிக்கச் செய்வீர். உலக நாட்டங்களிலாவது செல்வம், பெருமை, வெகுமானத்தின் பேரிலாவது, உடல் இன்பங்கள் பேரிலாவது என்னில்  ஏற்படும்  ஆசையை முழுவதும் அகற்றிட எனக்கு அறிவைத் தந்தருளும். சத்தியத்  திருச்சபையின் உத்தம மைந்தனாக நான் என்றும் வாழ அருள் தாரும்.

ஆமென்.