⛪ மூன்று இராஜாக்கள் திருநாள் செபம்.

மூன்று உலகங்களையும் இழுதனதாட்ட வல்லமையுடைத்தான திவ்விய இயேசுவே! உமது திருப்பாதத்தினருகில் மூன்று இராஜாக்களின் இதயத்தில் நீா் பொழிந்த வரப்பிரசாதங்களினாலும், அவா்கள் கண்காண வானத்தில் தோன்றச் செய்த நவமான நட்சத்திரத்தினால் வரச் செய்த தயவைப் பாா்த்து, என் இருதய ஆணவம் தீருமட்டு்ம் என் மனதில் உமதருளை ஊற்றி நானும் உமது  தெய்வீகத்தின் இனிப்பைக் கண்டடையச் செய்தருளும் சுவாமி. திருச்சபையில் நீா் ஏற்படுத்திய நட்சத்திரங்களைப் போலிருக்கின்ற போதகா்கள் எனக்கு உமது பேரால் காட்டும் வழியை விட்டகலாமலிருக்கப் பண்ணியருளுஞ் சுவாமி.

ஏரோதென்பவன், மூன்று ராஜாக்களைக் கபடமாய் மோசம்போக்க எண்ணின எண்ணத்தில் நின்று அவா்களை ஒரு வான தூதனுடைய மொழியால் வேற வழியில் திருப்பியதுபோல, இவ்வுலகத்தில் பதிதர்கள் பிரிவினைக்காரர்கள் எனக்குச் செல்லும் துர்ப்புத்தியைக் கேளாமல் உமது திருவிவிலியம் பிரகாரம் நான் நடக்க அனுக்கிரகித்தருளும் சுவாமி.  பசாசுக்களுடைய தந்திரங்களிலும் சரீரத்தின் தொந்தரைகளிலும் பூலோகத்திற் காணப்பட்ட வஸ்துக்களுடைய மாய்கைகளிலும் நான் சிக்கிப்போகாமல், மூன்று இராஜாக்கள் கொண்டஞான வெளிச்சப் பிரகாரம் அவா்கள் நடந்ததுபோல, நானும் பிரமாணிக்கனாய் நடக்க செய்யும் சுவாமி.

பரலோகத்தில் அருட்பிரவாகம் உமதன்பின் மிகுதியினாலே பூலோகத்தில் வந்து பாயவும், பாவங்களினுடைய விஷமற்று, புண்ணியங்களினுடைய கனிகள் காய்க்கவும் செய்த மதுரம் பொருந்திய இயேசுவே! உம்மை இராஜாவென்றும். பூலோகத்தை ஈடேற்ற வந்த தேவனென்றும், மனித சரீரத்தைக்கொண்டு, மனிதர்களுக்காக மரித்து பலியளிப்பவரென்றும், கஸ்பார், மெல்கியோ, பல்தாசர் என்ற மூன்று இராஜாக்கள் ஏற்றுக்கொண்டு; பொன், தூபம், மீறை என்னப்பட்ட காணிக்கைகளைக் கொடுத்தது போல், நானும் உம்மை என்னுடைய இராசாவென்றும், நித்தியத்தில் நான் சாகாமல் எனக்காக உயிர்விட்டவரென்றும் ஏற்றுக்கொண்டு, என் புத்தி, மனது, நினைவு முழுமையும் உமக்குப் பாதகாணிக்கையாக தருகின்றேன் சுவாமி.

பூலோகம், பசாசு, சரிரமெனப்பட்ட மூன்று சத்துருக்களுடைய கையிலகப்படமாலும், பாவத்தின் விஷயங்களாலும் என் சரீரத்தின் நாட்டங்களாலும் உம்முடைய நெருக்கமான வழியைவிட்டு நான் அகலாமலுமிருக்க மூன்று இராஜாக்களுக்கு நீா் காட்டின காட்சிகளை எனக்குங்காட்டி, நீா் அவர்களுக்குக் கொடுத்த ஏராளமான வரங்களை எனக்குங்கொடுத்து, நானும் நித்திய பதவியில் வந்து சேரத்தக்கதாக அனுக்கிரகஞ் செய்தருளும் சுவாமி. ஒரு நட்சத்திரத்தினாலே பிற தேசத்தாரை நடத்தி அவா்களுக்கு உம்முடைய திருக்குமாரனை வெளிப்படுத்தின சா்வேசுரா! இப்பொழுது விசுவாசத்தால் உம்மையறிந்திருக்க நாங்கள் இச்சீவனுக்குப் பின்பு மகிமையுள்ள உமது தேவத்துவத்தைத் தரிசிக்கிற ஆனந்தமடையும்படி எங்கள் கா்த்தராகிய இயேசுக்கிறிஸ்துவைப் பற்ற எங்களுக்குக் கிருபை செய்தருளும். ஆமென்.