உயிர்கள் பிரியும் உடல்கள் அழியும் உயிரே எனை நீ பிரியாதே

♫ பாடலைக் கேட்க / பதிவிறக்கம் செய்ய... 


உயிர்கள் பிரியும் உடல்கள் அழியும்

உயிரே எனை நீ பிரியாதே

துயர்கள் மூடும் தூளியாய் ஆடும்

உறவே எனை நீ பிரியாதே

இரவின் மடியில் ஆ இதயம் உடையும்

இறைவா துணை நீ மறவாதே

சிறகின் நிழலில் உறவின் தணலில்

தலைவா தழுவிட மறவாதே


1. தனிமையில் இதயம் அழுதிட விழிகள்

துடைத்திட தாய் நீ மறவாதே

தரிசனம் தா எனத் திருவடி அமர்ந்தால்

கொடுத்திட தந்தை நீ மறவாதே

தளர்ந்திடும் கால்கள் சோர்ந்திடும் உடலோ

தாங்கிட சேய் எனை மறவாதே

சருகென உதிர்ந்தே சாய்ந்திட விண்ணில்

வாங்கிட என் பெயர் மறவாதே


2. வேலியில் பூத்தும் கோவிலில் சேர்க்கும்

வேந்தனே உன் மனம் ஆகாயம்

வேலையில் களைத்தேன் தோளினில் சேர்க்கும்

தேவனே உன் நிழல் கூடாரம்

கழிந்த என் நாட்களில் கிழிந்த என் வாழ்வை

கிருபையால் நனைத்தால் ஆதாயம்

இனிய உன் வார்த்தை இனியது வாழ்க்கை

அனுதினம் எனக்கது ஆகாரம்


3. விண்ணெழில் சோலையில் மின்னிடும் தாரகை

மன்னவா என்னிசை ஆகாதோ

உன்னிசை வெள்ளம் ஒளியெனப் பாய்ந்தால்

என்னவா என் இருள் தேயாதோ

குறைகளால் உடைந்த யாழ் எனை அருளே

நிறைகளால் நிறைத்தால் வாடாதோ

கறைகளைக் கழுவி கனிவுடன் தழுவி

மீட்டிட என் மனம் பாடாதோ