இயேசு தெய்வத்தை அவர் தாயார் மடியில் வளர்த்துகிறார்கள் : பலிப்பொருளின் மடியில் பரிகாரப்பலி..( பலி ஆன்மாக்கள் இரண்டு)

உலக மக்களின் பாவங்களுக்காக கடவுளே தன்னை பரிகாரப்பலியாக்கி விட்டார். அந்த பரிகாரப்பலியை பெற்றதெடுத்த பலிப்பொருள் நம் தேவ அன்னை. ஒருவர் உடலால் எண்ணற்ற வேதனைகளைத் தாங்கி தன் கடைசி சொட்டு துளி இரத்தத்தையும் நமக்காக சிந்தி உயிரக்கொடுத்து தன் அன்பை நீரூபித்துவிட்டார். இன்னொருவர் தன் உள்ளத்தால் தன் மகன் பட்ட அத்தனை வேதனைகளையும் அனுபவித்து மேலும் தன் அன்பை நிரூபித்துக்கொண்டிருக்கிறார். கடவுளின் மீட்புத் திட்டத்திற்காக தன்னையே அர்ப்பணித்து இயேசு சுவாமியின் பிறப்பிலிருந்து தன்னுடைய கேள்வியற்ற கீழ்படிதலினால் மானிட மீட்புக்காக எண்ணற்ற வியாகுலத்தை அணுபவித்தவர் இப்போது வியாகுலத்தின் சிகரத்தில் அமர்திருக்கிறார்..

நம் அன்புத்தாய்க்கு தன் மகன் மனுமக்களை பாவத்திலிருந்து மீட்க சாக வேண்டும் அதாவது பலியாக வேண்டும் என்பது முன்னமே தெறியும்.. நினைத்துப் பாருங்கள் தன் மகனின் கொடிய இறப்பை அறிந்த ஒரு தாயால் எப்படி நிம்மதியாக இருந்திருக்க முடியும்.. தன் மகனைப்பார்க்கும் போதெல்லாம், தன் மகன் சிரிக்கும் போதெல்லாம் தன் மகனின் இறப்பு அந்த தாய்க்கு நினைவு வருமே..” ஒரு நாள் என் மகன் உலக மக்களுக்காக பலியாக வேண்டும் என்று. எப்படி நிம்மதியாக இருக்க முடியும். ஆனால் அந்த நாள் என்றுவரும் என்பது அந்த தூய தாய்க்கு தெறியாது. கண்டிப்பாக இருந்திருக்கும் ஆண்டவராகிய இயேசு சுவாமி நற்செய்தி அறிவிக்க துவங்கியதிலிருந்து இன்னும் அது அதிகமாக ஒவ்வொரு நாளும் செத்து செத்துதான் பிழைத்திருப்பார்கள்.

எத்தனை முறை நம் ஆண்டவரைக் கொல்லத்தேடினார்கள்; எத்தனை முறை அவரை ஆலயத்தில் இருந்து வெளியே தள்ளியிருப்பார்கள். தன் மகன் பாடுபடும் நாள் இந்நாள்தானோ என்று எத்தனை முறை துடித்திருப்பார்கள்; தூங்காமல் இருந்திருப்பார்கள்.

உறவினர்,அண்டை வீட்டார்கள், “ மேரி ! தலமைக்குருக்கள் உன் மகனை கொலை செய்யத்

தேடுகிறார்கள். அவனைப் பார்த்து நடக்கச்சொல் “ என்று எத்தனை பேர், எத்தனை தடவை சொல்லியிருப்பார்கள். அதை ஒவ்வொரு முறை கேள்விப்படும்போதும் அந்த மாசற்ற இருதயம் எப்படி பயந்திருக்கும்; எப்படி துடித்திருக்கும்.

அன்று நம் தலைவரை; தன் குழந்தையை மகிழ்ச்சியோடு ஆலயத்தில் ஒப்புக்கொடுக்க சென்றபோது இறைவாக்கினர் சிமியோன் அன்பு அன்னையைப்

பார்த்து, “ உன் உள்ளத்தை ஒரு வாள் ஊடுறுவும் “ என்று ஒரு குண்டை தூக்கி போட்டுவிட்டார். அன்றிலிந்து தன் திருக்குமாரன் மரிக்கும் வரை அந்த மாமரித்தாய் எத்தனை நாட்கள் அதை நினைத்து துடித்திருப்பார்கள்.

அன்னையின் வியாகுலம் மொத்தம் ஏழு...அதில் ஆறாவது வியாகுலம் மிகப்பெரியது; மிகக்கொடியது; அன்று எத்தனை பேர் நம் தாயை தூற்றியிருப்பார்கள்; “ இவள்தான் மரியாள்; இவள் பிள்ளைதான் இயேசு சிலுவையில் சாகப்போகிறான். அதுவும் அவமானமாக சாகப்போகிறான். என்று எத்தனை ஆண்கள், எத்தனை பெண்கள் பரிகாசம் செய்திருப்பார்கள்.. அதையெல்லாம் நமக்காக பொறுமையோடு தாங்கிக்கொண்டார்கள். ஏன் தன் மகன் மரிக்கும் முன் அவனை சந்தித்து திடனும் கொடுத்துள்ளார்கள் இந்த வீரத்தாய்..

வியாகுலத்தாய்.

பிரமானிக்கம் என்றால் அன்னைதான்; இதில் அவர்களை அடிக்க இதுவரை யாரும் பிறந்ததில்லை; இனி பிறக்கப்போவதும் இல்லை.

“ ஆதலின் பிறக்கும் இத்திருக்குழந்தை கடவுளின் மகன் எனப்படும் “

ஆனால் அவர் பிறக்க யாரும் இடம் தர மாட்டார்கள்.

“ அவர் மேன்மை மிக்கவராய் இருப்பார் “

ஆனால் அவர் மாட்டுத்தொழுவத்தில் தீவனத்தொட்டியில்தான் பிறப்பார்.

“ உன்னதரின் மகன் எனப்படுவார் “

அனேக மக்கள் அவரை ஏற்றுக்கொள்ள மறுப்பார்கள்.

“ அவருடைய தந்தையான தாவீதின் அரியணையை ஆண்டவராகிய கடவுள்அவருக்கு அளிப்பார் “

ஆனால் அவர் சிலுவையில் தொங்குவார்.

“ அவரது ஆட்சிக்கு முடிவே இராது”

ஆனால் சிலுவையில் அறையப்பட்டு கொல்லப்படுவார்..

“யார் என் தாய்? யார் என் சகோதரர்கள் என்று இயேசு சுவாமி கேட்டுவிட்டு கல்வாரியில் தன்னை தவிக்க விட்டு செல்லும் சீடர்களைப்பார்த்து ," இவர்கள்தான் என் தாயும் தாயும், சகோதரர்களும்" என்று சொல்வார்.. ஆனால் கடைசிவரை கல்வாரியில் தன் அன்பு மகனை பின் செல்ல இருக்கும் தாய் அதைக்கேட்டும் மவுனமாக இருப்பார்கள்..

இதுதான் பிரமானிக்கம், இதுதான் ஆழ்ந்த தாழ்ச்சி, இதுதான் அன்பு, இதுதான் கீழ்ப்படிதல், இதுதான் தூய்மை. இதுதான் விசுவாசம், இதுதான் அன்பின் நிறைவு, இதுதான் கடவுளின் உண்மையான சீடத்துவம், இதுதான் தாய்மை..

அத்தனைக்கும் கடவுள் கொடுத்த பரிசு.. “ அம்மா நீதான் இனி உலகத்திற்கே தாய் “ “ என் அன்புச்சீடனாய் இருக்க ஆசிக்கும் எவனும், எவளும் உன்னைத் தன் தாயாக ஏற்றுக்கொள்ள வேண்டும் “

“ பாருங்கள் என் அன்னையை.. உயிருள்ள விசுவாசம், கேள்வியற்ற கீழ்ப்படிதல், கடைசிவரை பிரமாணிக்கம் காத்த என் தாயைப்பாருங்கள்.. நான் இறக்கும் வரை மட்டுமல்ல இறந்த பின்னும் அவர்கள் விசுவாசம் இழக்கவில்லை (ஆண்டவர் இயேசுவை கல்லரையில் வைத்தபின் மூன்றாம் நாள் அவர் உடலுக்கு பரிமளத்தைலம் தடவ சென்ற பெண்கள் பட்டியலில் நம் அன்னை இல்லை.. இதுதான் அவர்கள் விசுவாசம்)

. அதனால்தான் நான் “ இதோ உன் தாய் “ என்று மனுக்குலத்திற்கு பரிசாக அளித்தேன். ஏவாளை மாற்றினேன். பழைய ஏவாள் சாத்தானுக்கு கீழ்படிந்தாள். புதிய ஏவாளான என் அன்னை பரமனுக்கு மட்டும்தான் கீழ்படிந்தாள். அதனால்தான் அவளை இந்த உலகத்துக்கே தாயாக தருகிறேன் ஏற்றுக்கொள்ளுங்கள்... ஏற்றுக்கொள்ளாதவர்கள் என் அன்புச்சீடர்கள் அல்ல”

வியாகுலத்தாய் புலம்பலின் சிறு பகுதி : என் அன்பு பிள்ளைகளே ! என் மகனின் உடலைப்பாருங்கள். அதில் ஒரு சிறு இடம் கூட காயமில்லாமல் இல்லை. உச்சி முதல் உள்ளங்கால் வரை காயமில்லாத இடமே இல்லை. அவன் குழந்தையாய் இருக்கும்போது தூக்கி நான் தோலில் போட்டு தட்டி கொடுத்த முதுகில் எவ்வளவு கீறல்கள், சதை கிழியும் அளவுக்கு அடித்துள்ளார்கள் அதுவும் எத்தகைய ஒரு கொடூர சாட்டையைக் கொண்டு அடித்திருக்க வேண்டும். அவன் குழந்தையாய் இருந்த போது என் மடியில் அவன் தவளும் போது அந்த பிஞ்சுகால்களையும், கரங்களையும் தொட்டு வருடியிருக்கிறேன். அந்த கால்களும் கைகளும் ஆணிகளால் துளைக்கப்பட்டு அது கிழிக்கப்பட்டிருக்கிறது. அதை என் கரங்கள் தொட்டு வருடும்போது உடல் நடுங்குகிறது..

இன்னும் வயிற்றுப்பகுதி, கால்கள், கைகள், தலை, முகம், மார்புப்பகுதி என்று எல்லாமே காயங்கள்தான்.. மனிதனில் காயங்களை பார்த்திருக்கிறேன். ஆனால் முதன் முறையாக காயங்களில் மனிதனை அல்ல கடவுளை பார்க்கிறேன்.. அத்தனையும் யாருக்காக.. என் மகனே.. என் மகளே.. உனக்காகத்தானே..இதுவரை நான் பெற்றெடுத்த என் மகனுக்காக துடித்தேன்;அழுதேன்;கண்ணீர்விட்டேன்; என் இதயத்தை ஊடுறுவிய இந்த வாளால் கதறுகிறேன்..

ஆனால் இப்போது நான் பெறாமல் பெற்றெடுத்த உங்களுக்காக அதிகமாக இன்னலுகிறேன். என் வியாகுலம் தொடர்கிறது. தீர்ந்தபாடில்லை.

கண்ணீர் வடிக்கின்றேன் அதுவும் இரத்தக்கண்ணீர்.. எங்கெங்கோ கண்ணீர் விடுகிறேன் இரத்தக்கண்ணீர் வடித்து உங்களுக்கு அடையாளம் தருகிறேன். ஆனால் அதைவும் வேடிக்கை பார்க்கும் கூட்டமாகத்தான் இருக்கிறீர்களே ! தவிர "நான் இப்போதாவது மனம் மாற வேண்டும் “ என்று யாரும் நினைப்பதில்லை..

எங்கள் கண்கள் குளமாகின்றன.. பிதா, என் குமாரன், தூய ஆவியானவர் மற்றும் புனிதர் கூட்டம் எல்லாருமே கண்ணீர் சிந்துகிறார்கள் உங்கள் பாவங்களுக்காக... ஆனால் நீங்களோ திருந்த மனமில்லாமல் திரும்ப திரும்ப பாவத்தில் விழுகிறீர்கள் அதில் உழல்கிறீர்கள்..

“ எங்கள் கண்ணீருக்கு பதில் சொல் என் மகனே ! என் மகளே ! தயவு செய்து மனம் திரும்புங்கள் “

எங்கள் பெயரில் தயவாயிரும் ஸ்வாமி.. தயவாயிரும்...

இயேசுவுக்கே புகழ் ! மரியாயே வாழ்க !