இன்று காவல் சம்மனசுக்கள் திருவிழா... தந்தை பியோவும் அவர் காவல் சம்மனசும்!

பாத்ரே பியோ தம் குழந்தை பருவத்திலிருந்தே தமது காவல்தூதரைத் தம் கண்களால் பார்த்து வந்தார். அவரைப் பியோ “ தமது குழந்தைப் பருவத்தின் சின்ன நண்பர் என்று அழைத்தார். மேலும், “ சின்ன சம்மனசு, நண்பர், சகோதரர், செயலாளர், பரலோகத்தூதர்” என்னும் பெயர்களாலும் தந்தை பியோ அழைத்து வந்தார்.

“ ஒரு போதும், நாம் நம் பாவத்தால் கடவுளுக்கு அருவருப்பானவர்களாக இருக்கும்போதும் கூட நம்மை விட்டு விலகாத ஒரு பரலோக பாதுகாவலரின் பாதுகாப்பில் இருப்பது நமக்கு எவ்வளவு பெரிய ஆறுதல்!” என்று பியோ அடிக்கடி கூறுவார். மேலும்

“ நாம் நம் காவல் தூதரை அடிக்கடி நினைக்கவேண்டும். இந்த பரலோக அரூபி தொட்டில் முதல் கல்லறை வரை நம்மை ஒரு போதும் தனியாக விடுவதில்லை. அவர் குறிப்பாக நம் துயரமான சமயங்களில் நம்மை வழி நடத்திப் பாதுகாக்கிறார். கடவுள் நமக்குத் தந்துள்ள இந்த மாபெரும் கொடையை மனிதர்கள் மதித்துப் போற்ற அறிந்திருக்க வேண்டும். நம் மரண சமையத்தில் நம் ஆன்மா இந்த இனிய தோழரை நேரடியாக காணும் வாய்ப்பைப் பெற்றுக்கொள்ளும்.

“ எனக்குக் காவலாயிருக்கிற சர்வேசுவனுடைய சம்மனசானவரே…. “ என்ற ஜெபத்தை ஒரு நாளில் பல தடவைகள் சொல்லுங்கள்.. அவர் உங்கள் அருகில் இருக்கிறார் என்பதை அடிக்கடி நினைவுபடுத்திக்கொள்ளுங்கள். அவருக்கு நன்றி செலுத்துங்கள். அவருக்கு மரியாதையும் வணக்கமும் செலுத்துங்கள். அவரது மாசற்றதாகிய பார்வையை உங்கள் பாவத்தால் நோகச் செய்வது பற்றி எப்போதும் பயப்படுங்கள் “ என்று அவர் கற்பித்தார்.

பாத்ரே பியோ தம் காவல்தூதரைத் தம் அறையின் இரவு நேரக் காவலராகவும், தம் தந்தி நிலையமாகவும், தம் செய்திகளை தாம் விரும்புபவர்களுக்குக் கொண்டு போய்ச் சேர்க்கும் தபால்காரராகவும், கார் ஓட்டுனராகவும், தமக்கு வரும் அந்நிய மொழி கடிதங்களை மொழிபெயர்க்கும் மொழிபெயர்ப்பாளராகவும், தம் பேச்சுத்துணைவராகவும் கூட பயன்படுத்தி வந்தார்.

நன்றி : “புதுமைப் புனிதர் தந்தை பியோ” – வாழ்க்கை வரலாறு நூல், கிடைக்குமிடம் மாதா அப்போஸ்தலர் சபை, தூத்துக்குடி. புத்தக தொடர்புக்கு சகோ.பால்ராஜ் Ph: 9487609983, சகோ. கபரியேல் Ph: 9487257479

புனித தந்தை பியோவின் ஆலோசனைகளைக் கேட்டு நாமும் நமது காவல் சம்மனசுக்களை அடிக்கடி நினைப்போம், அவர்களுக்கு உண்டான ஜெபத்தையும் அடிக்கடி ஜெபிப்போம்.. முதலில் அவர்களுக்கு நன்றி கூறுவோம்.. நாம் கண்டு கொள்ளாமல் இருக்கும்போதே நமக்கு இவ்வளவு பாதுகாப்பு தருகிறார்கள் என்றால் கண்டு கொண்டால்...?

இயேசுவுக்கே புகழ் ! மரியாயே வாழ்க !