இயேசு சுவாமியும், குழந்தைகளும்!

"உறுதியாக உங்களுக்குச் சொல்லுகிறேன்: நீங்கள் குழந்தைகளாக மாறாவிடில், விண்ணரசில் நுழையமாட்டீர்கள். மத்தேயு 18:3

"குழந்தைகள் என்னிடம் வருவதைத்தடுக்க வேண்டாம். வரவிடுங்கள். ஏனெனில், விண்ணரசுஇத்தகையோரதே" மத்தேயு 19: 14

பின்னர் ஒரு குழந்தையை எடுத்துஅவர்கள் நடுவில் நிறுத்தி, அதைஅரவணைத்து,

"இத்தகைய குழந்தைகளுள் ஒன்றை என் பெயரால் ஏற்றுக்கொள்ளுகிற எவனும் என்னையே ஏற்றுக்கொள்ளுகிறான். என்னை ஏற்றுக் கொள்ளும் எவனும் என்னையன்று, என்னைஅனுப்பினவரையே ஏற்றுக் கொள்ளுகிறான்" என்றார். மாற்கு 9: 36-37

"என்னை விசுவசிக்கும் இச்சிறுவருள் ஒருவனுக்கு இடறலாய் இருப்பவன் எவனோ, அவனுடைய கழுத்தில் பெரிய எந்திரக்கல்லைக் கட்டிக் கடலில் தள்ளுவது அவனுக்கு நலம். மாற்கு 9 :42

"குழந்தைகளை என்னிடம் வரவிடுங்கள், தடுக்க வேண்டாம். ஏனெனில், கடவுளின் அரசு இத்தகையோரதே.

“உறுதியாக உங்களுக்குச் சொல்லுகிறேன்: கடவுளின் அரசைக் குழந்தைபோல் ஏற்றுக்கொள்ளாத எவனும் அதனுள் நுழையவே முடியாது" என்றார். மாற்கு 10 : 14-15

“ இக்குழந்தையைப் போலத் தன்னைத் தாழ்த்திக் கொள்ளுகிறவன் எவனோ, அவனே விண்ணரசில் பெரியவன். மத்தேயு 18: 4

மேலே உள்ள இயேசுவி சுவாமியின் திருவார்த்தைகள் இயேசு சுவாமி குழந்தைகள் மீது வைத்துள்ள அன்பையும், குழந்தைகளின் மன நிலை எப்பேர்பட்ட ஆசீர்வாதமானது என்பதையும் நமக்கு வெளிக்காட்டுகிறார். குழந்தைகள் போல் நாம் மாறினால் நாம் விண்ணரசில் சேர முடியும் என்கிறார். அதாவது நாம் மோட்சம் செல்ல வேண்டுமானால் குழந்தைகளைப்போல நாம் மாற வேண்டும்.

குழந்தைகளிடம் அப்படி என்ன ஸ்பெசல்:

1. மாசின்மை

2. கபடின்மை

3. மகிழ்ச்சி

4. சுறு சுறுப்பு

5. தன்னைப்பார்த்து சிரித்து அழைக்கும் அழகான ஆளாக இருந்தாலும், அழகில்லாத ஆளாக இருந்தாலும் வேறுபாடில்லாமல் உடனே சிரிக்கும் அவர்களிடம் செல்லும்

6. கள்ளமில்லாத தூய சிரிப்பு

7. தன்னை யாராவது அடித்தால் கூட உடனே மறந்து அவர்களைப்பார்த்து சிரிக்கும் (பகையை உடனே மறக்கும்; மன்னிக்கும் சுபாவம்)

8. தெளிவு

9. பசித்தால் அழும்; வயிறு நிறைந்தால் சிரிக்கும் மனதில் எப்படியோ அப்படியே பிரதிபலிக்கும், நடிக்காது ( உள்ளொன்று வைத்து வெளியே ஒரு சுபாவம் காட்டத்தெறியாது.

10. பயமின்மை

11. கவலையின்மை

12. எப்போதும் சிரிப்பு மகிழ்ச்சி

13. சும்மா இருக்காது. எதையாவது செய்து கொண்டே இருக்கும் அல்லது விளையாடிக்கொண்டே இருக்கும்.

14. தாழ்ச்சி

இப்படி சொல்லிக்கொண்டே இருக்கலாம். குழந்தைகளின் இருதயத்தை தொட்டு முத்தம் செய்யலாம். ஏனென்றால் அங்கு கடவுள் வாழ்கிறார்.

அதனால்தான் நம் அன்பு தெய்வம் இயேசு நம்மை குழந்தைகளாக மாறச்சொல்லுகிறார். மேலே உள்ள குழந்தைகளின் மனநிலை எத்தனை நம்மிடம் இல்லை. அல்லது எத்தனை அவற்றிற்கு எதிர்ப்பதமாக நம்மிடம் உள்ளது என்று பரிசோதிக்க வேண்டும்.

நாம் குழந்தைகள் போல் மாற; வாழ அல்லது குழந்தைகளாக மறுபடி பிறக்க முயற்சி செய்ய வேண்டும். அப்போது நம் இயேசு சுவாமி நமக்கு மிக அருகில் வந்துவிடுவார்; நம்மால் அவரைப் பார்க்ககூட முடியும். அனுபவிக்க முடியும். அதைத்தான் அவர் நம்மிடம் எதிர்ப்பார்க்கிறார்.

அதைவிட்டு “ நான்தான் பெரியவன் “ “ நான்தான் சிறந்தவன் “ “ நான் யார் தெறியுமா? என்று எத்தனையோ தேவையில்லாத சிந்தனைகளையும், மன நிலையையும், தீய பழக்க வழக்கங்கள், பேச்சுக்களையும் நாவிலும், மனதிலும் கொண்டிருந்தால் அதைக் கொஞ்சம் கொஞ்சமாக நன்மையை, நல்லவைகளை நோக்கி நகர்த்துவோம் அல்லது திருப்புவோம்.

அழகில்லாமல்; அறிவில்லாமல் கூட வாழ்ந்துவிடலாம் ஆனால் பாவத்தோடு வாழக்கூடாது; வாழவே கூடாது..

ஆகையால் நம்மை குழந்தைகளாக்குவோம்; மழலைகளோடு மழலைகளாவோம்; அந்த மகிழ்ச்சி நிலையானது; நிலையான மகிழ்ச்சிக்கு நம்மை அழைத்துச் செல்லக்கூடியது.. அதுதான் முக்கியம். அதுதான் வேண்டும் மற்றவரின் பேச்சுக்கள், விமர்ச்சனங்கள் நமக்குத் தேவையில்லை.மற்றவர்கள் நமக்கு எதுவுமே தெறியாது என்று நினைத்தால் கூட பரவாயில்லை; தாழ்ச்சியோடு வாழ்வோம்..

இயேசுவுக்கே புகழ் ! மரியாயே வாழ்க !