இயேசு தெய்வத்தின் மலைப்பொழிவு பாடம்!

கிறிஸ்தவர்களுக்கு மட்டுமல்ல உலக மக்களுக்கே இது ஒரு பாடம். காந்தியடிகள் தொடங்கி அநேக பிற மதத்தினரை கவர்ந்து இந்த மலைப்பொழிவு. நம் தெய்வத்தின் இந்த மலைப்பொழிவை கடைபிடித்துவிட்டால் நமக்கு மோட்சம் நிச்சயம். ஆன்மீக வாழ்க்கையின் அடிப்படை மலைப்பொழிவுதான். “எளிய மனத்தோர்” என்பதை தாழ்ச்சி நிறைந்த மனம் என்று பொருள் கொள்க. நம் இயேசு தெய்வத்தின் ஒவ்வொரு வார்த்தையும் அழகானது; ஆழமானது; கடைபிடிக்க சிறந்தது ; அப்படியே நம்பலாம்; கடைபிடிக்கலாம்.

இந்த மலைப்பொழிவில் பத்துகட்டளைகள் உள்ளே வந்துவிடும். உங்களுக்கு பிடித்த எந்த புனிதர் வாழ்க்கையை எடுத்துக்கொண்டாலும் மலைப்பொழிவு கடைபிடிக்கப்படாமல் அவர்களால் புனிதர்களாக ஆக முடியாது. நம் இயேசு தெய்வத்தின் இந்த மலைப்பொழிவு நம் உயிரோடு, நம் ஆன்மாவோடு, நம் உடலோடு கலக்க வேண்டும் கலந்தால்தான் நாம் இயேசுவாக மாற; இயேசுவாக வாழ முடியும். அட்லீஸ்ட் முதலில் இவற்றுள் ஒன்றையாவது கடைபிடிக்க வேண்டும். அது அடுத்தடுத்தவற்றையும் கடைபிடிக்க தூண்டும்..

தேனினும் இனிய தேந்தமிழில் இயேசுவின் இந்த மலைப்பொழிவை மத்தேயுவில் படிப்பதே ஆனந்தம்.

நற்செய்தி தொடர்கிறது :

இயேசு திரளான கூட்டத்தைக் கண்டு, மலைமீது ஏறி அமர, அவருடைய சீடர் அவரை அணுகினர். அவர் திருவாய் மலர்ந்து போதிக்கலானார்:

"எளிய மனத்தோர் பேறுபெற்றோர், ஏனெனில், விண்ணரசு அவர்களதே.

துயருறுவோர் பேறுபெற்றோர், ஏனெனில், அவர்கள் ஆறுதல் பெறுவர்.

சாந்தமுள்ளோர் பேறுபெற்றோர், ஏனெனில், மண்ணுலகு அவர்களது உரிமையாகும்.

நீதியின்பால் பசிதாகமுள்ளோர் பேறுபெற்றோர், ஏனெனில், அவர்கள் நிறைவு பெறுவர்.

இரக்கமுடையோர் பேறுபெற்றோர், ஏனெனில், அவர்கள் இரக்கம் பெறுவர்.

தூய உள்ளத்தோர் பேறுபெற்றோர், ஏனெனில், அவர்கள் கடவுளைக் காண்பர்.

சமாதானம் செய்வோர் பேறுபெற்றோர், ஏனெனில், அவர்கள் கடவுளின் மக்கள் எனப்படுவர்.

நீதியினிமித்தம் துன்புறுத்தப்படுவோர் பேறுபெற்றோர், ஏனெனில், விண்ணரசு அவர்களதே.

என்பொருட்டுப் பிறர் உங்களை வசைகூறித் துன்புறுத்தி, உங்கள்மேல் இல்லாதது பொல்லாதது எல்லாம் சொல்லும்போது, நீங்கள் பேறுபெற்றோர்.

அகமகிழ்ந்து களிகூருங்கள். ஏனெனில், வானகத்தில் உங்கள் கைம்மாறு மிகுதியாகும். உங்களுக்கு முன்னிருந்த இறைவாக்கினர்களையும் இவ்வாறே துன்புறுத்தினர். மத்தேயு 5 : 1-12

குறிப்பு :

1. ஏழையாக இருந்து எளிய உள்ளம் பெறுவது எளிது. ஆனாலும் எழை உள்ளமும் எளிய உள்ளமும் ஒன்றல்ல. ஏழையாக இருந்து ஒருவன் பாவத்திற்கு அடிமையாக இருந்தால் அவரை எப்படி “ ஏழை உள்ளத்தோன் பேறுபெற்றவன் “ என்று சொல்ல முடியும்.

2. மலைப்பொழிவுக்கே அப்படியே எதிராக நடந்தால் நரகமும் உறுதி.

இயேசுவுக்கே புகழ் ! மரியாயே வாழ்க !