எதற்கெடுத்தாலும் பைபிளில் இருக்கிறதா? என்று கேட்போரின் கவனத்திற்கு!

பைபிள் கடவுளுடைய அன்பை அறிந்து கொள்ளவும், அவரின் கட்டளைகளை கடைப்பிடிக்கவும், நம் இயேசு தெய்வத்தின் பிறப்பு, அவரின் போதனைகள், சிலுவைப்பாடுகள், மரணம், உயிர்ப்பு இவைகளை தியானித்து இயேசு தெய்வமாக நாம் மாறி அவரை பின் செல்வதற்காக இயேசு சுவாமியின் சீடர்களாலும், அவருடைய சீடர்களின் சீடர்களாலும் பரிசுத்த ஆவியின் தூண்டுதலால் எழுதப்பட்டு கத்தோலிக்க திருச்சபையால் அலசி ஆராயப்பட்டு தொகுக்கப்பட்டு ( தேவைப்படாதைவைகள் என்பன நீக்கப்பட்டு) அங்கீகரிக்கப்பட்டு ஏக பரிசுத்த கத்தோலிக்க திருச்சபையால் இந்த உலகுக்கு தரப்பட்டதே பைபிள்..

புதிய ஏற்பாடு தரப்பட்ட ஆண்டு கி.பி.393 அதை அதே ஆண்டு கூடிய ஹிப்போ சங்கமும், கி.பி.397-ல் கூடிய கார்த்தேஜ் சங்கமும் அதை உறுதிப்படுத்தின.

பழைய ஏற்பாடு ஆண்டராகிய இயேசு சுவாமி படித்த நூல்… நாமும் படிக்க வேண்டும்..

புதிய ஏற்பாடு சீடர்களால் எழுதப்பட்டாலும் பரிசுத்த ஆவியானவரின் பங்கு அதில் அதிகம்…

ஆக பைபிள் கடவுளையும், பிறரையும் நேசித்து ஆண்டவராகிய இயேசு சுவாமியைப்போல் வாழ நமக்கு கத்தோலிக்க திருச்சபையால் தரப்பட்டது..

நற்செய்தி சுவிசேசங்கள் ஆண்டவர் இயேசு நாதர் உயிர்த்த சில ஆண்டுகளில் எழுதப்பட்டிருக்கலாம்.. கடைசி நற்செய்தியான அருளப்பர் நற்செய்தி எழுதயிய ஆண்டு கி.பி.95.. அதற்கு முன்பே புனித சின்னப்பரின் திருமுகங்கள், புனித இராயப்பரின் திருமுகங்கள் எழுதப்பட்டுவிட்டன..

புதிய ஏற்பாட்டை கத்தோலிக்க திருச்சபை நமக்கு தந்தது நான்காம் நூற்றாண்டின் இறுதி..

ஏன் இத்தனை கால தாமதம்?

ஏனென்றால் முதல் மூன்று நூற்றாண்டுகள் வேத கலாபனையின் காலம்.. கி.பி. 65-ல் ஆட்சி செய்து புனித இராயப்பர் (புனித பேதுரு), புனித சின்னப்பரைக் (புனித பவுல்) கொலை செய்த மன்னன் நீரோ முதல் மூன்றாம் நூற்றாண்டில் புனித பிலோமினா, புனித செபஸ்தியாரைக் கொலை செய்த மன்னன் தியோக்ளேசியன் வரை பத்து மன்னர்கள் வேத கலாபனை செய்துள்ளார்கள்..

கிட்டத்தட்ட 60 லட்சம் கிறிஸ்தவர்கள் நம் ஆண்டவர் இயேசுவை ஏற்றுக்கொண்டதற்காக கொல்லப்பட்டுள்ளார்கள்.. (இப்படி இரத்தத்தில் வளர்ந்த சபைதான் கத்தோலிக்க திருச்சபை)

புனித முடியப்பர் (புனித ஸ்தோவான்) புனித சந்தியாகப்பர் (பெரிய யாகப்பர்- பெரிய யாக்கோபு) வேத சாட்சி மரணங்கள் தவிர வேறு எந்த அப்போஸ்தலர்கள் மரணமும் பைபிளில் இல்லை. புனித அருளப்பர் (புனித யோவான்) மரணம் தவிர அத்தனை அப்போஸ்தலர்களும், புனிதர்களும் வேத சாட்சியானார்கள். (புனித அருளப்பரும் கொதிக்கின்ற தார்க்கொப்பரையில் இறக்கப்பட்டார்). அதற்காக மற்ற அப்போஸ்தலர்கள், பல புனிதர்கள் இயேசு சுவாமிக்காக கொல்லப்படவில்லை என்று அர்த்தமாகுமா?

சுவிசேஷசம் எழுதியர்கள் தங்கள் மரணத்தை பைபிளில் அவர்கள் எழுத முடியுமா?

முதல் நூற்றாண்டுக்குப் பின் கத்தோலிக்க திருச்சபையில் நிகழ்ந்தவைகளையும், கத்தோலிக்க திருச்சபையால் விசுவாசக் கோட்பாடுகளாக அறிவித்தவைகளை மீண்டும் பைபிளில் எழுத முடியுமா?

பைபிள் நமக்குத் தரப்பட்ட நோக்கங்கள் மறக்கப்பட்டு உயிருள்ள கடவுளின் உயிருள்ள வார்த்தைகளை விவாதப்பொருளா மாற்றலாமா? மேலும் நிறைய பேர் அவ்வார்த்தைகளை திரித்துக் கூறுவதும் அவர்கள் சொந்த புத்தியில் உதிப்பவைகளையெல்லாம் அர்த்தமாக கூற முடியுமா?

பைபிளில் ஏன் பரிசுத்த ஆவியானவர் ஒரு சில விசயங்களை முழுமையாகமலோ..அல்லது அப்படியே விடப்பட்டும் அல்லது ஒரு சில வார்த்தைகள் முரன்பாடாகவோ விடப்பட்டிருந்தால் அது நம் விசுவாசத்தால் முழுமை பெற வேண்டும் என்பதற்காகத்தான்..

“ கண்டு விசுவசிப்பவனை விட காணாமல் விசுவசிப்பவனே பேறுபெற்றவன் “ என்கிறார் நம் ஆண்டவர்…

நம் கடவுளை நாம் இன்னும் முழுமையாக அறியவில்லை ( பத்து சதவீதம் கூட இல்லை ). மாதாவையும் நாம் இன்னும் முழுமையாக அறியவில்லை..( 20% கூட இல்லை). சேசு சுவாமியை 30% கூட அறிய வில்லை

பைபிளை நான் கரைத்து குடித்துவிட்டேன் என்று சொல்பவர் கூட பைபிளை முழுமையாக அறியவில்லை..(40% மேல் அறியவில்லை )

ஆண்டவர் நமக்கு தன்னைப்போல் சிந்திக்கும் ஆற்றலை ஒரு புள்ளி அளவை விடவும் குறைவான அளவே தந்துள்ளார்… அதை வைத்து நான் அதைக்கண்டு பிடித்துவிட்டேன்…இதைக்கண்டு பிடித்துவிட்டேன்..அதுதான் உண்மை…இதுவல்ல.. என்று சொல்வது உண்மைக்கு எதிரானது ..

இப்படி எதையோ சொல்லிக்கொண்டு கத்தோலிக்க விசுவாசத்தை துறந்து எதன் பின்னாலோ அல்லது யார் பின்னாலோ ஓடுகிறவர்கள் கடைசியில் கண்டிப்பாக அதிர்சியடைய நேரிடும்…

கத்தோலிக்க திருச்சபையே மெய்யான திருச்சபை..

ஓ மெய்யான திருச்சபைக்குள்ளிலிருந்தும் நான் வெளியே போய்விட்டேனே..

“ எனக்கு முதல்லே தெறியாமல் போய் விட்டதே… ஆரம்பத்திலேயே தெறிந்திருந்தால் இன்னும் அதிகமாக புண்ணியங்கள் பேறு பலன்கள் சம்பாதித்திருப்பேனே..கடவுளின் தாயும் நம் தாயுமான மாதாவை மறந்து விட்டேனே.. அவர்கள் அன்பையும், ஆற்றலையும் தெறியாமல் போனேனே..போச்சே… எல்லாம் போச்சே.. என்று கடைசியில் புலம்பி பிரயோஜனம் இல்லை..

மேலும்..கடவுளை ஆராய்ச்சி செய்வதை விட அன்பு செய்யத்தான் வேண்டும்.. அந்த அன்பே அவரை அறியச்செய்யும்…ஞானத்தை நமக்குத் தரும்…அதற்கு நம்முடைய சின்னப்புத்தியையும், குறுக்குப்புத்தியையும், துர்புத்தியையும் விட்டுவிட்டு கடவுளின் ஞானத்தை தேட வேண்டும்…

அதற்கு நாம் பரிசுத்தமாய் வாழ வேண்டும்… முக்கியமாக கடவுளையும், பிறரையும் நேசிக்க வேண்டும்…

கடவுளை அறியாமல் எதற்கெடுத்தாலும் பைபிளின் வசனத்தை தனியே எடுத்துக்கொண்டு சந்தேகப்புத்தியில் அப்படி ஏன் எழுதியிருக்கிறது? இப்படி ஏன் எழுதியிருக்கிறது? என்று ஆராய்ச்சி செய்பவர்களுக்கும்…கடவுள் இல்லை என்று சொல்லும் நாத்தீகர்களுக்கும் அதிக வித்தியாசம் இல்லை…

பைபிள் வாசிப்பது எந்த அளவுக்கு முக்கியமோ அதே அளவு முக்கியம் பைபிளை எப்படி வாசிப்பது என்பது…

தி.பா 119:105, சங்.118:105, எசாயா 55:10-11, எபி.4:12, 2 திமோ. 3:16

வாசிப்பதில் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள்…

எசாயா 34:16, 2 திமோ.4:3, 2 பேதுரு 1:20, 2 பேதுரு 3:16

பைபிள் வசன குறிப்புகளுக்கு நன்றி : கத்தோலிக்கம் நம் பெருமை நூல்.

நாம் கடவுளை தன் உயிருள்ள விசுவாசத்தாலும், ஆழ்ந்த தாழ்ச்சியாலும், கேள்வியற்ற கீழ்ப்படிதலாலும் நம் தூய அன்னை எப்படி அவரை முழுமையாக கண்டு கொண்டார்களோ அப்படி நாமும் கண்டு கொள்வோம்….

அதற்குத் தேவையான உயிருள்ள விசுவாசத்தை நம் அன்னையிடமும் நம் பரிசுத்த திவ்ய நற்கருணை நாதரிடம் கேட்போம் .. .. மன்றாடுவோம்…

(இது கத்தோலிக்கத்திற்குள் இருந்து கொண்டு ஆற்றில் ஒரு கால் சேற்றில் ஒரு கால் வைப்போருக்கான பதிவு)

இயேசுவுக்கே புகழ் ! மரியாயே வாழ்க !