“ ஒரு பூசைக்கு முன், உலகின் சகல நற்செயல்களும் மலைக்கு முன் சிறு மணற்துகளைப் “ போலிருக்கும் என்றால், சேசுவின் பாவப்பரிகாரம் போதாதா? நம் செயல்களால் என்ன பெரிய பலன் விளைந்து விட முடியும்? இதற்கு எப்படி பதில் கூறுவோம்: உண்மைதான் ! சேசுவின் பரிகாரச் செயலுக்கு முன், நம் பரிகாரம் அற்ப தூசி மட்டுமே. ஆயினும் நாமும் பரிகாரம் செய்ய வேண்டியது எனெனில், உண்மையில், இதை விரும்புவது நம் ஆண்டவரேதான் ! தவம் செய்து பாவங்களுக்குப் பரிகாரம் செய்ய அவரே நமக்கு கற்பிக்கிறார்.
சேசு நாதர் கானாவூர்த் திருமணத்தில், ஆறு கற்சாடிகளைத் தண்ணீரால் நிரப்பும்படி ஏன் உத்தரவிட்டார்? தண்ணீர் இன்றியே அந்தச் சாடிகளைத் திராட்சை இரசத்தால் நிரப்ப அவரால் இயலாதா? லாசரை உயிர்ப்பிக்கும் முன் கல்லறையை மூடியிருந்த கல்லை அகற்றும்படி ஊழியர்களுக்கு அவர் உத்தரவிடாமல், “ லாசரே, வெளியே வா” என்று மட்டும் அவர் கட்டளையிட்டிருந்தால், அந்தப் பெரும் கல் தானாகவே நகர்ந்து லாசருக்கு வழிவிட்டிருக்காதா? ஐயாயிரம் ஆண்கள் அடங்கிய பெருங்கூட்டத்திற்கு உணவளிக்க, ஐந்து அப்பங்களும் இரண்டு மீன்களும் உண்மையாகவே அவருக்கு தேவையாக இருந்தனவா?
எவ்வளவு அற்பமாயினும் பரிகாரத்திற்கு நமது பாகமும் நமது பலியோடு இணைய வேண்டும் என்று அவர் விரும்புவதை இவை காட்டுகின்றன. இதனால்தான் அவர், “ தவஞ்செய்யுங்கள், ஏனெனில் மோட்ச இராட்சியம் சமீபித்திருக்கிறது” என்று கூறி நம்மை அழைக்கிறார். இதனால்தான் தம் சிலுவையைச் சுமக்க அவர் சீரேனேயனாகிய சீமோனை அனுமதித்தார்.
தினமும் பூசை கண்டு நன்மை வாங்குவது மட்டுமல்ல, தேவ வழிபாடு நம் அன்றாட வாழ்வில் பிரதிபலிப்பதும் மிக முக்கியமானது.
"என்னைப் பின்செல்ல விரும்புகிறவன், தன்னையே மறுத்துத் தன் சிலுவையை நாள்தோறும் சுமந்துகொண்டு என்னைப் பின்தொடரட்டும்.” (லூக்.9 : 23)
இவ்வாக்கியத்தில் 'நாள்தோறும்'என்ற வார்த்தையை நன்றாக நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். சிலர் சில துன்பங்களுக்குப் பிறகும், சிலர் சில துன்ப நாட்கள் துன்பம் அனுபவித்த பிறகும் அது பற்றி கடவுளைத் தூஷணிக்கத் தொடங்கி விடுகிறார்கள். “ எனக்கு மட்டும் ஏன் இந்தத் துன்பங்கள்? “ கடவுளுக்குக் கண்ணில்லையா? “ என்ற வார்த்தையைப் பயன்படுத்துவோர்,
“ தம்மையே வெறுமையாக்கி, அடிமையின் தன்மை பூண்டு மனிதருக்கு ஒப்பானார். மனித உருவில் தோன்றி,
தம்மைத் தாழ்த்திச் சாவை ஏற்கும் அளவுக்கு, அதுவும் சிலுவைச் சாவையே ஏற்கும் அளவுக்குக் கீழ்ப்படிபவரானார். “ (பிலிப் 2 : 7-8)
இந்த வார்த்தைகளை மறந்து ஆண்டவரை எளிதில் மறந்து விடுகிறார்கள். இவர்களுக்கு நாம் சொல்வது :
“ நீங்கள் துன்பங்களை அனுபவிப்பதற்கு உங்கள் கடந்த காலப் பாவங்கள் காரணமாக இருக்கலாம்; அல்லது இவ்வுலகிலேயே உங்கள் பாவங்களை பரிகரிக்கவோ, உங்கள் துன்பங்களின் வழியாகப் பிறரை மனம் திருப்பவோ, உங்களைச் சோதனைகளிலிருந்து காப்பாற்றவோ வேண்டுமென்ற கடவுளின் விருப்பம் காரணமாக இருக்கலாம் “
ஆனால் பாவமே அறியாத கடவுள் ஏன் துன்பம் அனுபவித்தார்? நமக்காகத்தானே? இதனால் அவர் அடையும் இலாபம் என்ன? எதுவுமில்லையே! தம் அன்பினால் மட்டும்தானே அவர் துன்பங்களை ஏற்றுக்கொண்டார்? அவர் நிமித்தமாகவும், வரவிருக்கும் மாபெரும் சம்பாவனைக்காகவும் நமக்கு அன்றாடம் வரும் ஒரு சில துன்பங்களை நாம் ஏற்றுக்கொண்டு, பாவப்பரிகாரத்திற்காக அவற்றை அவருக்கு ஒப்புக்கொடுக்கக் கூடாதா?
எனவே அவரைப் பின் செல்ல விரும்புவீர்கள் என்றால், உங்கள் வாழ்வு சிலுவையோடு ஒன்றிக்கப்பட்டதாக இருந்துதான் ஆக வேண்டும். ஏனெனில் இது நம்மீது அவரே சுமத்திய நிபந்தனையாக இருக்கிறது :
"என்னைப் பின்செல்ல விரும்புகிறவன், தன்னையே மறுத்துத் தன் சிலுவையைச் சுமந்துகொண்டு என்னைப் பின்தொடரட்டும். (மத். 16:24)
நன்றி : மாதா பரிகார மலர், மாதா அப்போஸ்தலர்கள் சபை, தூத்துக்குடி. மாதா பரிகார மலர் இதழ் ( இருமாதங்களுக்கு ஒருமுறை) விரும்புவோர், தொடர்பு கொள்க சகோ.பால்ராஜ், Ph. 9487609983, பிரதர் கபரியேல், ph. 9487257479,
கிறிஸ்தவ வாழ்வில் சிலுவைகள் இல்லையென்றால் அது கிறிஸ்தவமே இல்லை…
இயேசுவுக்கே புகழ் ! மரியாயே வாழ்க !