ஜெபமாலை சிந்தனைகள் 9 : குருக்களுக்கு கடிதம் எழுதுகிறார் புனித லூயிஸ் மரிய மோன்போர்ட்...

கடவுளின் உண்மையைப் போதித்து எல்லா மக்களுக்கும் சுவிசேஷத்தைப் படிப்பிக்கிற உன்னதரின் ஊழியரான என் சகோதர குருக்களே !

நீங்கள் ஜெபமாலைப் பழக்கத்தைக் கடைபிடித்து அதன் பலனை சுவையுங்கள். இது மட்டுமல்ல, இவ்வுண்மைகள் எப்போதும் உங்கள் வாயிலும் இருக்கட்டும். காரணம் நீங்களே எப்போதும் ஜெபமாலையைப் பற்றி பிரசிங்கித்து, இந்த புனித பக்தி முயற்சியின் உயர்வை மற்றவர்களுக்குக் கற்றுக் கொடுப்பதால் அவர்களை மனந்திருப்புவீர்கள்..

அறியாமையிலிருப்பவர்களும் பெரும் அறிவு இருந்தும் தற்பெருமை கொண்டவர்களும் செய்வது போல், ஜெபமாலையில் ஒரு முக்கியத்துவமும் இல்லை என்று நீங்கள் நினைத்துவிடாதபடி கவனமாயிருங்கள் என்று உங்களிடம் கேட்டுக்கொள்கிறேன். ஜெபமாலை முக்கியமற்ற ஒன்றல்ல மாறாக அது கடவுளின் ஏவுதல் பெற்ற விலை மதிப்பிடற்கரிய திரவியம் ஆகும்.

எல்லாம் வல்ல கடவுள் இதை ஏன் உங்களுக்குக் கொடுத்தாரென்றால் மிகக்கடினமான பாவிகளை நீங்கள் மனந்திருப்பவும் விடாப்பிடியாய் பதிதத்தில் இருப்பவர்களை மனந்திரும்பச் செய்யவும் நீங்கள் ஜெபமாலையை ஒரு துணையாகக் கொள்ள வேண்டுமென்று அவர் விரும்புகிறார். இவ்வுலகில் தம் வரப்பிரசாதத்தையும், மறு உலகில் நம் மகிமையையும் ஜெபமாலையுடன் இணைத்துள்ளார். புனிதர்கள் ஜெபமாலையைத் தவறாமல் செய்து வந்துள்ளார்கள். பாப்புமார்கள் (போப் ஆண்டவர்கள்) ஜெபமாலைப் பக்திக்கு ஆதரவு அளித்துள்ளார்கள்.

ஆன்மாக்களை வழி நடத்தும் ஒரு குருவுக்கு, பரிசுத்த ஆவியானவர் இந்த இரகசியத்தை வெளிப்படுத்தும் போது அந்தக் குரு எவ்வளவு ஆசி பெற்றவராகிறார் !. காரணம் மிகப் பெருந் தொகையான மக்கள் இந்த இரகசியத்தை அறியத்தவறி விடுகிறார்கள். அல்லது மிக மெலெழுந்தவாரியாகவே அறிய வருகிறார்கள்.

ஒரு குரு இந்த இரகசியத்தை உண்மையிலேயே அறிவாரானால் அவர் தினமும் ஜெபமாலை ஜெபிப்பார். மற்றவர்களும் அவ்வாறு செய்யுமாறு ஊக்கமளிப்பார். கடவுளும் அவர் திருமாதாவும் அவருடைய ஆன்மாவில் நிரம்ப வரப்பிரசாதங்களைப் பொழிவார்கள். அதனால் அவர் கடவுளின் மகிமையான கருவியாக அவர் விளங்குவார், அவருடைய வார்த்தைகள் எளியவனவாயிருந்தாலும் மற்ற போதகர்கள் பல ஆண்டுகளாக பிரசங்கிப்பதால் விளையும் நன்மையை விட ஒரே மாதத்தில் இவருடைய வார்த்தைகள் அதிக நன்மையை விளைவிக்கும்…

நன்றி : புனித லூயிஸ் மரிய மோன்போர்ட் எழுதிய ஜெபமாலையின் இரகசியம் என்ற நூல்..

ஜெபமாலை இராக்கினியாய் வந்து ஜெயம் தரும் மாமரி வாழியவே... ஜெபிப்போம் ஜெபிப்போம் ஜெபமாலை..

இயேசுவுக்கே புகழ் ! மரியாயே வாழ்க !