இயேசு சுவாமியின் வளர்ப்பு தந்தையாக புனித வளனாரை தேர்ந்தெடுத்தார் இறைவன். புனித சூசையப்பரும் கடவுளால் தேர்ந்துகொள்ளப்பட்டவரே !
புனித சூசையப்பரை பற்றி விவிலியத்தில் இரண்டு இடங்களில் சொல்லப்படுகிறது. சூசையப்பர் ஒரு நீதிமான்.
நீதிமானாய் வாழ்வது சாதாரண விசயமல்ல.
இவருக்கு இயேசு சுவாமியை வளர்க்கும் பொறுப்பும் தேவ மாதாவை பாதுகாப்பாக இருக்கும் பொறுப்பும் கடவுளால் தரப்பட்டது. அந்த தூய பணியை மிகவும் பிரமாணிக்கமாக செய்தவர் புனித சூசையப்பர்..
அதிலும் குறிப்பாக தேவமாதாவுக்கு அடுத்தபடியாக இயேசு சுவாமியை கரங்களில் சுமந்தவர் புனித சூசையப்பர்தான்.
இவருக்கும் இயேசுவை அள்ளி அனைக்க, கொஞ்ச எந்த வித கட்டுப்பாடுகளையும் கடவுள் கொடுக்கவில்லை. புனித சூசையப்பர் எந்த அளவுக்கு பரிசுத்தமாகவும் கடவுளுக்கு பிரமாணிக்கமாகவும், கடவுளின் திட்டத்திற்கு உதவியாகவும், கீழ்படிந்தும் இருந்திருந்தால் நித்திய பிதா புனித சூசையப்பருக்கு இப்பேர்ப்பட்ட பாக்கியமான நன் மரணத்தை தந்திருப்பார். இவர் உயிர்விட்டது இயேசு சுவாமியின் மடியில், தேவமாதாவின் கரங்களை பற்றிக்கொண்டே உயிர் விட்டார். சுதனாகிய கடவுளின் மடியில் மரிக்கும் பேறு பெற்றவர். தன் இயேசு சுவாமி கடவுள் என்பதை அறிந்து இருந்ததால்தான் அவரால் இயேசுவை முழுமையாக உணர முடிந்திருந்தது.
புனித சூசையப்பர் எவ்வளவு உன்னதமான மனதை பெற்றிருந்தார் என்பதற்கு இன்னொரு உதாரணம்,
“ சூசை நீதிமானாகவும் அவளை காட்டிக்கொடுக்க மனமில்லாதவராகவும் இருந்ததால் அவளை மறைவாக விலக்கிவிட வேண்டும் என்றிருந்தார் “ மத்தேயு 1: 19
இதே சூழ்நிலை நம்மவர்களுக்கு வந்திருந்தால் என்ன செய்திருப்பார்கள்?ஊரையே கூட்டி தன் மனைவியாக வர இருந்தவளை எவ்வளவு முடியுமோ அவ்வளவு அசிங்கப்படுத்தியிருப்பார்கள்.
புனித சூசையப்பர் அவ்வாறு செய்யவில்லை. பொறுமையாக இருந்தார். மறைவாக விலக்கிவிடலாம் என்றிருந்தது அவரின் பெருந்தன்மையையும், அவரின் நீதிமான் தன்மையையும் காட்டியது.
தேவமாதா இயேசுவை பெற்றெடுத்த நாளில் புனித சூசையப்பரும் எவ்வளவு கஷ்ட்டப்பட்டிருப்பார். மாதாவை கூட்டிக்கொண்டு சத்திரங்கள், சாவடிகள், வீடுகள் என்று எங்கெல்லாம் கூட்டி அலைந்திருப்பார். எத்தனை வீட்டுக் கதவுகளை தட்டியிருப்பார். எவ்வளவு துடித்திருப்பார். கடைசியில் அவருக்கு கிடைத்த மாட்டுத்தொழுவத்தை கொஞ்சம் செய்து செய்து கொடுத்திருப்பார் தேவமாதாவுக்கு பாலன் இயேசு பிறக்க. அப்போது அவர் பட்ட வேதனையையும், இயேசு சுவாமியை கொலை செய்ய எரோது துடிக்க கனவில் எச்சரிக்கப்பட்டு மாதாவையும், பாலகன் இயேசுவையும் கூட்டிக்கொண்டு எகிப்துக்கு ஓடிப்போன போது அவர் அடைந்த இன்னல்களையும் நினைத்துப்பார்ப்போம்.. அதை தியானிப்போம்..
புனித சூசையப்பர் ஒரு நீதிமான். அவர் இயேசுவின் வளர்புத் தந்தை என்பதில் அவர் வாழ்க்கையே அடங்கிவிடுகிறது.
புனித சூசையப்பர் இயேசு சுவாமியை கண்டு கொண்டது போல நாமும் இயேசுவை கண்டு கொள்கிறோமா?
ஜெபம் : தாவீதின் மகனே ! பாலகன் இயேசுவை கரங்களில் தாங்கியவரே ! நீதிமானே ! புனித தூய சூசையப்பரே உம்மை போல எங்களுக்கும் இயேசுவை முழுமையாக கண்டு கொள்ள வரம் தாரும்.
மேலும் எத்தனையோ இல்லங்களில் சந்தேகம் என்ற கண்களுக்கு புலப்படாத ஜந்து எத்தனை கணவன்மார்களின் உள்ளங்களிலும், மனைவிமார்களின் உள்ளங்களிலும் புகுந்து குடும்ப நிம்மதியை குலைத்து, சமாதானத்தை குலைத்து, குழந்தைகளின் வாழ்வை சிதைத்து கடைசியில் குடும்பத்தை மயானமாக்கி விடுகிறது.. அது போன்ற குடும்பங்கள் மேல் மனமிரங்கும்.
குடும்ப ஜெபமும், குடும்ப ஜெபமாலையும் இருக்கும் குடும்பத்தில் இது போன்ற சாத்தான்கள் நுழைய முடியாது என்பதை அந்த குடும்பங்களுக்கு உணர்த்துங்கள்.
எங்கள் உள்ளங்களும் உம்முடைய உள்ளம் போல் தூய்மையாக தெள்ளந்தெளிவாக மாறி தூய பாலகன் இயேசு எங்கள் உள்ளங்களில் பிறக்க எங்களை தகுதியானவர்களாக மாற்றும் - ஆமென்
புனித சூசையப்பரே ! எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்!
இயேசுக்கே புகழ்! மரியாயே வாழ்க!