ஜெபமாலை சிந்தனைகள் 7 : பரிசுத்த வேதாகமத்தில் ஜெபமாலை...

மாதா அருள் நிறைந்தவள்; அமல உற்பவி என்பதற்கு பிதாவின் நேரடி தீர்க்கதரிசன வார்த்தைகள் ஆதியாகமம் 3:15

“ உனக்கும் பெண்ணுக்கும், உன் வித்துக்கும் அவள் வித்துக்குமிடையே பகையை உண்டாக்குவோம்; அவள் உன் தலையை நசுக்குவாள்; நீயோ அவளுடைய குதிங்காலைத் தீண்ட முயலுவாய் “ என்றார்.

மேலே உள்ள வசனத்தில் பிதாவாகிய சர்வேசுவரன் சூசகமாக ஒரு விசயத்தைச் சொல்லுகிறார். அது என்னவென்றால் மாதாவை வெறுப்பவர்கள் பிசாசுகளின் தோழர்கள் ஆகின்றார்கள்..என்று..

நமது பாரம்பரிய பாடல் தோன்றியதும் இந்த வசனத்திலிருந்தே…

“ மாசில்லாக் கன்னியே மாதாவே உன் மேல் நேசமில்லாதவர் நீசரே ஆவார்… வாழ்க … வாழ்க… வாழ்க.. மரியே…! “

ஜெபமாலையின் வல்லமை.. ஜெபமாலையின் சக்தி.. கோலியாத்தை அழிக்க தாவீது பொறுக்கிய ஐந்து கூழாங்கற்கள் ஒரு ஜெபமாலையில் வரும் ஐந்து தேவ இரகசியங்களைக் குறிக்கிறது… ஆனால் கோலியாத்தை ஒழிக்க தேவைப்பட்டது ஒரு கூழாங்கல் மட்டுமே அதாவது ஒரு பத்துமணிகள். 1சாமுவேல் 17 : 40

“எப்பொழுதும் கையில் வைத்திருக்கும் தன் தடியைப் பிடித்துக்கொண்டு ஓடையில் ஐந்து கூழாங்கற்களைப் பொறுக்கி எடுத்துத் தன் மேலிருந்த இடையனுக்குரிய சட்டைப் பையில் போட்டுக் கவணையும் கையில் எடுத்துக் கொண்டு பிலிஸ்தியனுக்கு எதிராகப் புறப்பட்டான் “. 1சாமுவேல் 17 : 49

“தன் பையில் கையைவிட்டு ஒரு கல்லை எடுத்துக் கவணில் போட்டு அதைச் சுழற்றிப் பிலிஸ்தியன் நெற்றியில் எறிந்தான். கல் அவன் நெற்றியில் பதிந்து போனதால், அவன் தரையில் முகங்குப்புற விழுந்தான் “

(அலகைத் தலையை உருட்ட அன்னை அணியைத் திரட்டுவோம்… ஜெபமாலை மணியை உருட்டி நாமே பேயை விரட்டுவோம்…)

மேலும் லூக்காஸ் முதல் அதிகாரத்தில் வரும் ஜெபமாலை ஜெபங்கள் மற்றும் அதன் ஆசிரியர்கள். அருள் நிறை மந்திரத்தை இயற்றியவர்கள் பிதாவும், பரிசுத்த ஆவியானவரும்… லூக்காஸ் 1 : 26,28

26 ஆறாம் மாதத்திலே, கபிரியேல் தூதரைக் கடவுள் கலிலேயாவிலுள்ள நாசரேத்து என்னும் ஊரிலிருந்த ஒரு கன்னிகையிடம் அனுப்பினார்.

28 தூதர் அவளது இல்லம் சென்று, " அருள் நிறைந்தவளே வாழ்க, ஆண்டவர் உம்முடனே " என்றார்.

42 எலிசபெத்து பரிசுத்த ஆவியால் நிரப்பப்பெற்று, "பெண்களுக்குள் ஆசீர்வதிக்கப்பட்டவள் நீரே. உம்முடைய வயிற்றின் கனியும் ஆசீர்வதிக்கப் பட்டதே..

பரலோக மந்திரத்திரத்தை இயற்றியவர் சுதனாகிய சேசு கிறீஸ்து.. மத்தேயு 6 : 9-15

தமத்திருத்துவத்தால் இயற்றப்பட்ட வல்லமை வாய்ந்த ஆயுதம்தான் ஜெபமாலை…

ஜெபமாலையின் மொத்த மணிகள் 153 அவைகள் ஆன்மாக்களை மீட்க வல்லவை… அந்த புதுமையைச் செய்தவர் ஆண்டவராகிய இயேசு கிறீஸ்து. பிடிக்கப்பட்ட மீன்கள் 153.. அது ஜெபமாலையின் முன்னடையாளம்.. மாதாவின் பரிந்துரையில் செயலாற்றுபவர் நம் ஆண்டவர் இயேசு.. அருளப்பர் 21:11

“சீமோன் இராயப்பர் படகேறி வலையைக் கரைக்கு இழுத்து வந்தார். அதில் பெரிய மீன்கள் நிறைந்திருந்தன. அவை நூற்றைம்பத்து மூன்று. இத்தனை மீன்கள் இருந்தும் வலை கிழியவில்லை “

நாமும் ஜெபமாலை ஜெபித்தால் நம்மாலும் ஆன்மாக்களை மீட்க முடியும். மாதாவின் பரிந்துரையால்..

ஜெபமாலை ஏன் ஜெபிக்க வேண்டும்? அன்னையை நாம் ஏன் புகழ வேண்டும்?

அதற்கும் விவிலியம் கூறும் ஆதாரம்…

“ இதோ! இந்நாள் முதல் எல்லாத் தலைமுறைகளும் என்னைப் பேறுடையாள் எனப் போற்றுமே.” லூக்காஸ் 1: 48

தலைமுறைகள் உள்ளவர்கள் மனிதர்கள் மட்டுமே.. நாம் மனிதர்கள் என்றால் அன்னையை புகழ்ந்துதானே ஆக வேண்டும்..மாதாவைப் புகழாதவர்கள் மனிதத் தன்மையிலிருந்து விலகுகிறார்கள் என்ற பொருளும் வருகிறது. கத்தோலிக்கர்களாகிய நாம் நம் தேவ அன்னையை எப்படிப் புகழ்கிறோம். மாதாவைப் புகழ எத்தனையோ வார்த்தைகள் இருந்தாலும் தூய தமத்திருத்துவம் புகழ்ந்த வார்த்தைகள் அடங்கிய மங்கள மொழியான அருள் நிறை மந்திரமே மிகச் சிறந்தது.

மேலும் மாதா அமல உற்பவி என்பதற்கும்… அருள் நிறைந்தவள் என்பதற்கும் மேலும் ஒரு ஆதாரம்..

மாதாவுக்கு கடவுள் எவ்வளவு பெரிய வல்லமையை கொடுத்துள்ளார் என்பதற்கும் ஆதாரம் இதுவே… திருவெளிப்பாடு 12 :1

“விண்ணகத்தில் அரியதோர் அறிகுறி தோன்றியது; பெண் ஒருத்தி காணப்பட்டாள். அவள் கதிரவனை ஆடையாக அணிந்திருந்தாள்; நிலவின் மேல் நின்று கொண்டிருந்தாள்; தலையின் மீது பன்னிரு விண்மீன்களை முடியாகச் சூடியிருந்தாள்.”

மேலும் மாதாவின் எஞ்சிய பிள்ளைகாகிய நாம் யார் ? நம்முடைய பணி என்ன? திருவெளிப்பாடு 12 : 17

“ ஆகவே பறவைநாகம் பெண்மீது சினங்கொண்டு, எஞ்சிய அவள் பிள்ளைகளோடு போர் தொடுக்கச் சென்றது. அவர்கள் கடவுடைய கட்டளைகளைக் கடைப்பிடித்து இயேசு தந்த சாட்சியத்தை ஏற்றுக்கொண்டவர்கள்.”

நம்முடைய பணி என்ன ? சாத்தானோடு போர் புரிவதே…அதுவும் அன்னையின் துணையோடு… பசாசுகளுக்கு எதிரான போர் என்றால் பாவத்திற்கு எதிரான போர்…. அதை எப்படிச் செய்ய முடியும்? அனுதினமும் ஜெபமாலை ஜெபிப்பதன் மூலமாகவே…அப்போது அன்னைக்கும் பலம் கிடைக்கும்… நமக்கும் பலம் கிடைக்கும்.. அந்த பலத்தை வைத்தே எதிரியோடு போர் புரிய வேண்டும்…

அந்தப்போர் புரிய அனுதினமும் நாம் 53 மணி ஜெபமாலையாவது சொல்ல வேண்டும்.. அதுவும் குடும்ப ஜெபமாலையாக அது இருக்க வேண்டும்….

ஒரு பழைய பாடல்… ஆனால் அது அன்னையை போற்றுகிறது…

“ஆதி.. அந்தமும்.. அவள்தான் நம்மை ஆளும் நீதியும் அவள்தான்… அகந்தையை (பசாசு) அழிப்பாள்… ஆற்றலைக் கொடுப்பாள்… அவள்தான் அன்னை மகா சக்தி ( நம் தேவ தாய்)… அந்தத் தாயில்லாமல் நாமில்லை… தானே எவரும் ( நம் சேசு கூட) பிறந்ததில்லை… நமக்கொரு தாய் இருக்கின்றாள்… என்றும் நம்மைக் காக்கின்றாள்..

ஜெபிப்போம்….ஜெபிப்போம்…ஜெபமாலை…

நன்றி : வாழும் ஜெபமாலை இயக்கம்..

குறிப்பு : மாதாவின் பெருமைகள், ஜெபமாலையின் இரகசியம், கத்தோலிக்க திருச்சபையின் பெருமைகள் விவிலிய வசனங்களின் அடிப்படை மூலமாக அறிய அதாவது மாதா, கத்தோலிக்க திருச்சபை பற்றிய தியானம் உங்கள் பங்கிலும் வேண்டுமென்றால் தொடர்பு கொள்ளுங்கள். சகோதரர் தன்ராஜ் ரொட்ரிகஸ், உலகளாவிய வாழும் ஜெபமாலை இயக்கம் (Universal Living Rosary Association) காமராஜபுரம், கிழக்கு தாம்பரம், சென்னை. Phone.9094059059, 9790919203

இயேசுவுக்கே புகழ் ! மரியாயே வாழ்க !