திருவெளிப்பாடு பரிசுத்த வேதாகம் பகுதி-6

விபச்சாரமும், வேசித்தனமும் பெருகிவிட்டது. உடல் சுகமே வாழ்க்கையில் முக்கியம் என்று வாழ்வோர் பலர். வேசித்தனத்திற்காக நடக்கும் கொலைகள் அதிகம். இன்றைய கால கட்டத்தில் ஆன்மாக்களை எளிதாக வீழ்த்த சாத்தான் கையில் எடுத்துள்ள ஆயுதம் காமமும், வேசித்தனமே. உடலால், உள்ளத்தால் வேறு பெண்ணிடமும், வேறு ஆணிடமும் வாழ்வோர் பெருகிவிட்டனர். திருமணம் என்ற பந்தம், திருமணம் என்ற திருவருட்சாதனத்தின் புனிதத்துவம் மதிக்கப்படவில்லை. வேசித்தனம், உடல் இச்சை என்பது ஆன்மாக்கொல்லும் கொடியபாவம் என்னும் விஷம்.

அப்படி வாழ்வோருக்கு எச்சரிக்கை. உடல் சுகத்திற்காக ஆன்மாவை இழந்து நாளை எரி நரகத்திற்கு தள்ளப்பட இருப்போரே ! உடனே விழித்து ஆண்டவரிடம் வந்து மனம்திரும்பி மன்னிப்பு கேட்டால் எரி நரகத்திலிருந்து தப்ப முடியும். இல்லையென்றால் முடிவில்லா நரகத்திலிருந்து தப்பமுடியாது. (குறிப்பு : இப்போது பெண்கள் தங்கள் கால்களில் அணியும் மெல்லிய துணி ஆடையைப்பற்றியும் திருவெளிப்பாட்டில் வருகிறது கவனிக்கவும்)

திருவெளிப்பாட்டிற்க்கு செல்வோம்.

ஏழு கலசங்களையுடைய ஏழு வானதூதர்களுள் ஒருவர் என்னைப் பார்த்து, 'வா, நீர்த்திரள் மேல் அமர்ந்திருக்கும் பேர்போன வேசி தண்டனைத் தீர்ப்புக்குள்ளாவதை உனக்குக் காட்டுவேன்.

மண்ணக அரசர்கள் எல்லாரும் அவளோடு விபசாரம் செய்தார்கள். மண்ணில் வாழும் மக்கள் எல்லாரும் அவளுடைய விபசார மதுவினால் வெறிகொண்டார்கள்" என்று சொன்னார்.

தேவ ஆவி என்னை ஆட்கொள்ளவே, வானதூதர் என்னைப் பாலைவனத்திற்குக் கொண்டு சென்றார். அங்கே செந்நிற விலங்கின்மேல் அமர்ந்திருந்த பெண் ஒருத்தியைக் கண்டேன். அந்த விலங்கின் உடலெல்லாம் தூஷணப்பெயர்கள் நிறைந்திருந்தன. அதற்கு ஏழு தலைகளும் பத்துக் கொம்புகளும் இருந்தன.

அப்பெண் இரத்தாம்பரமும் செந்நிற ஆடையும் அணிந்து பொன்னாலும் இரத்தினங்களாலும் முத்துகளாலும் அலங்கரிக்கப்பட்டிருந்தாள். கையில் அவளது விபசாரத்தின் அருவருப்பும் அசுத்தமும் நிறைந்த பொற்கிண்ணம் இருந்தது.

மறைவான பொருள் கொண்ட பெயர் ஒன்று அவளது நெற்றியில் எழுதியிருந்தது. பாபிலோன் மாநகர் வேசிகளுக்கும், மண்ணகத்தில் அருவருப்பான யாவற்றிற்கும் தாய் என்பதே அப்பெயர்.

அப்பெண், பரிசுத்தர்களின் இரத்தத்தையும், இயேசுவின் சாட்சிகளது இரத்தத்தையும் குடித்து வெறி கொண்டிருப்பதைக் கண்டேன்; அவளைக் கண்டபோது மிகவும் வியப்படைந்தேன்.

வானதூதர் என்னை நோக்கிக் கூறியதாவது; "நீ வியப்படைவதேன்? அந்தப் பெண்ணைப் பற்றிய மறைபொருளையும், ஏழு தலைகளும் பத்துக் கொம்புகளும் கொண்டதாய் அவளைத் தூக்கிச் செல்லும் விலங்கின் மறை பொருளையும் உனக்குச் சொல்லுகிறேன்.

நீ கண்ட விலங்கு முன்பு இருந்தது; தற்போது உயிரோடு இல்லை. பாதாளக் குழியிலிருந்து எழப்போகிறது; ஆனால் அழிந்துபோகும். வாழ்வு நூலில் உலகத் தொடக்கமுதல் பெயர் எழுதப்படாத மண்ணுலகினர், அந்த விலங்கைக் காணும்போது வியப்படைவார்கள். ஏனெனில் முன்பு உயிரோடு இருந்து தற்போது இல்லாத அந்த விலங்கு திரும்பவும் உயிர்பெற்று வருவதைக் காண்பார்கள்.

இங்கே நுண்மதியும் அறிவுக் கூர்மையும் தேவை: ஏழு தலைகளும் அப்பெண் அமர்ந்திருக்கும் ஏழு மலைகளைக் குறிக்கும்; ஏழு அரசர்களையும் குறிக்கும்.

அவர்களுள் ஐவர் ஒழிந்தனர். இப்போதுள்ளவன் ஒருவன்; ஒருவன் இன்னும் தோன்றவில்லை. அவன் தோன்றியபின் சிறிது காலமே இருப்பான்.

முன்பு இருந்து, தற்போது உயிரோடில்லாத விலங்கே எட்டாவது அரசனைக் குறிக்கும். அவன் ஏழு அரசர்களுள் ஒருவன். அவனும் அழிந்துபோவான்.

நீ கண்ட பத்துக் கொம்புகளும் பத்து அரசர்களைக் குறிக்கும். அவர்கள் இன்னும் ஆட்சிக்கு வரவில்லை. ஆனால் அவர்கள் விலங்கோடு ஒரு மணியளவு அரசாள அதிகாரம் பெறுவார்கள்.

அவர்கள் ஒரு மனத்தவராய், தங்கள் வல்லமையையும் அதிகாரத்தையும் அவ்விலங்கினிடம் ஒப்படைப்பார்கள்.

செம்மறிக்கு எதிராக அவர்கள் போரிடுவார்கள். செம்மறியோ அவர்களை வெல்வார். ஏனெனில் அவரே ஆண்டவர்க்கெல்லாம் ஆண்டவர், அரசர்க்கெல்லாம் அரசர். அழைக்கப்பெற்றுத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களாய் அவரோடு இருக்கும் உண்மை ஊழியர்களும் அவரோடு வெற்றி கொள்வர்."

மேலும் அவர் எனக்குச் சொன்னதாவது: "அந்த வேசி, நீர்த்திரள்மேல் அமர்ந்திருக்கக் கண்டாயே, அந்த நீர்த்திரள் பல இனங்கள், பல நாடுகள், பல மொழிகளைச் சார்ந்த மக்கள் திரளைக் குறிக்கும்.

நீ கண்ட பத்துக் கொம்புகளும் விலங்கும் வேசியின்மேல் வெறுப்புக்கொண்டு, அவள் ஆடைகளைப் பறித்து. அவளைப் பாழாக்கிவிடும். அவளது தசையைத் தின்னும்; அவளை நெருப்பினால் சுட்டெரித்துவிடும்.

கடவுள் தமது எண்ணத்தை நிறைவேற்றும் பொருட்டே இங்ஙனம் அந்நாட்டினரின் உள்ளங்களை ஏவிவிட்டார். கடவுள் கூறியது நிறைவேறுமட்டும், அவர்கள் ஒரு மனத்தவராய்த் தங்கள் ஆட்சியை விலங்கினிடம் ஒப்படைத்தது அதே ஏவுதலால்தான்.

நீ காட்சியில் கண்ட பெண் மண்ணுலக அரசர்கள்மேல் ஆட்சி செலுத்தும் பெரிய நகரம்.

திருவெளிப்பாடு 17

இயேசுவுக்கே புகழ் ! மரியாயே வாழ்க !