மாதா கடவுளின் தாய் : இன்றைய திருநாளை தியானிப்போம்.. ஜனவரி 1.

"பரலோகமும், பூலோகமும் அனுதினமும் ஆயிரக்கணக்கான தடவை “ உம்முடைய திருவயிற்றின் கனியாகிய இயேசுவும் ஆசீர்வதிக்கப்பட்டவரே “ என்று கூறுகிறபடி, சேசு அன்றுபோல் இன்றும் மரியாயின் திருஉதிரக் கனியாகவே இருக்கிறார். இதிலிருந்து ஒரு காரியம் உறுதியாகிறது. அதாவது உலகம் முழுவதிற்கும் சேசு மரியாயின் கனியும் அவர்களின் வேலைப்பாடுமாயிருப்பது போலவே, அவரை உடமையாகக் கொண்டுள்ள ஒவ்வொரு மனிதனுக்கும் அவர் இருக்கிறார்.

இதனால் எந்த ஒரு விசுவாசியும் தன் இருதயத்தில் இயேசு கிறிஸ்து உருவாக்கப் பெற்றிருப்பானாகில் அவன் இவ்வாறு தைரியமாகச் சொல்ல முடியும்:

“ மாமரிக்கு நன்றி! நான் என் உடமையாகக் கொண்டிருப்பது அவ்வன்னை அவர்களின் கனியும் பொருளுமே, அவர்கள் இல்லாமல் சேசுவை நான் பெற்றிருக்க முடியாது ”. அர்ச்.சின்னப்பர் தம்மைப்பற்றி கூறியதை விட அதிக உண்மையுடன்

மாதாவைப்பற்றி இவ்வாறு கூறலாம்:

“கிறிஸ்து உங்களில் உருவாகும் வரை நான் மீண்டும் பேறுகால வேதனைப்படுகிறேன் (கலா.4:19). கடவுளின் பிள்ளைகள் அனைவரிடத்திலும், என் குமாரனாகிய சேசு கிறிஸ்து நிறைவாக உருவாகும் வரையிலும் மீண்டும் நான் பேறுகால வேதனைப்படுகிறேன் “.

அர்ச்.அகுஸ்தினார் இதுவரை கூறிய யாவற்றையும் தாண்டி, தம்மையும் மீறி உரைப்பது என்னவென்றால்:

“ முன் குறிக்கப்பட்ட யாவரும் தேவ குமாரனின் சாயலுக்கு ஒத்தவர்களாகும் பொருட்டு இவ்வுலகிலிருக்கையில் கன்னிமரியாயின் நெஞ்சுக்குள்ளே மறைத்து வைக்கப்படுகிறார்கள். அங்கு அவர்கள் இத்தாயினால் பாதுகாக்கப்பட்டு, உணவூட்டப்பட்டு, பேணப்பட்டு, வளர்க்கப்படுகிறார்கள். திருச்சபை நீதிமான்களின் பிறந்த நாள் என்று குறிப்பிடும் மரணத்திற்குப்பின், மகிமையின் வாழ்வுக்குப் பிறக்கும் வரையிலும் அவ்வாறு இருக்கிறார்கள்.

ஆ! தீர்ப்பிடப்பட்டவர்களுக்குத் தெரியாததும் முன் குறிக்கப்பட்டவர்களுக்கும் கூட முழுவதும் அறியப்படாததுமான வரப்பிரசாதத்தின் பரம இரகசியமே “

பரிசுத்த ஆவியாகிய சர்வேசுவரன் தெரிந்தெடுக்கப்பட்டவர்களை மாதாவிலும் மாதா வழியாகவும் தனக்கென தயாரிக்க விரும்பி மாதாவிடம் கூறுகிறார்:

தெரிந்தடுக்கப்பட்ட என்னுடையவர்களிடம் வேரூன்று. என் மிகுந்த அன்பிற்குறியவளே! என் பதியே! உன் எல்லாப் புண்ணியங்களின் வேரையும் தெரிந்தெடுக்கப்பட்டவர்களிடம் ஊன்றுவாயாக! அதனால் அவர்கள் புண்ணியத்தின் மேல் புண்ணியத்திலும் வரப்பிரசாதத்தின் மேல் வரப்பிரசாதத்திலும் வளர்வார்களாக!

மகா உந்நதமான புண்ணியங்களைச் செய்துகொண்டு நீ உலகில் வாழ்ந்த காலத்தில் உன் மீது நான் எவ்வளவு மகிழ்ச்சி கொண்டிருந்தேனென்றால் இப்பொழுதும் நீ பரலோகத்தில் உன் வாழ்வைத் துறக்காமலே உன்னைப் பூலோகத்தில் காண விரும்புகிறேன்.

ஆதலால், தெரிந்தெடுக்கப்பட்ட என்னுடையவர்களில் உன்னுடைய அசைக்க முடியாத விசுவாசம், ஆழ்ந்த தாழ்ச்சி, எல்லாம் தழுவிய பரித்தியாகம், உந்நத ஜெபம், எரியும் ஸ்நேகம், திடமான நம்பிக்கை இவற்றின் வேர்களையும், உன் எல்லாப் புண்ணியங்களையும் நான் காணும்படி அவர்களில் நீ உன்னையே பிறப்பிப்பாயாக! என்றென்றும் நீ என் பதியாயிருக்கிறாய்.

எப்போதும் போலவே உண்மையும், தூய்மையும், பிறப்பிக்கும் வளமும் உள்ளவளாயிருக்கிறாய். உன்னுடைய விசுவாசம் விசுவாசிகளையும், உன் தூய்மை கன்னிகளையும், உன் பிறப்பிக்கும் வளமை ஆலயங்களையும், தெரிந்துகொள்ளப் பட்டவர்களையும் எனக்கு அளிக்குமாக!

நன்றி : மரியாயின் மீது உண்மை பக்தி நூல், மாதா அப்போஸ்தலர்கள் சபை, ரோசா மிஸ்திக்கா, சகாயமாதாப்பட்டனம், தூத்துக்குடி-628 002, Ph. 0461-2361989, 9487609983

பிறந்திருக்கி இருக்கிற புத்தாண்டை பாத்திமா அன்னைக்கு அர்பணிப்போம்.. பாத்திமா மாதா கேட்ட ஜெபம்,தவ பரிகாரத்திற்கு இந்த ஆண்டை ஒப்புக்கொடுப்போம் ..

இயேசுவுக்கே புகழ் ! மரியாயே வாழ்க !