கிறிஸ்துமஸ் கால சிந்தனைகள் 12 : “மனந்திரும்பாவிடில் நீங்கள் எல்லோரும் அவ்வாறு அழிவீர்கள் “. லூக்காஸ் 13:3

இதுமட்டுமல்ல இயேசு சுவாமி பல இடங்களில் “ மனம்திரும்பி நற்செய்தியை நம்புங்கள் “ என்று அடிக்கடி நமக்கு அழைப்பு விடுக்கிறார். நாம் மனம் திரும்ப முதலில் செய்ய வேண்டியது தவமும் ஒறுத்தல் முயற்சியுமே.

இந்த மாதத்தில் குழந்தை இயேசுவை வரவேற்க இருக்கிற நாம் நம்மால் முடிந்த தவம் ஒறுத்தல் முயற்சிகள் செய்து நம் பரிசுத்த தேவபாலனை வரவேற்போம். சரி எப்படி ஒறுத்தல் முயற்சிகள் செய்வது,

1. பெரியவர்கள், சிறியவர்கள், அதிகாரிகள், இளைஞர்கள், இல்லறத்தார், துறவறத்தார் என்று ஒவ்வொருவரும் அவரவர் அந்தஸ்தஸ்துக் குறிய கடமைகளை சரியாக நிறைவேற்றுவதன் மூலமாக, இதில் வரக்கூடிய கஷ்ட்டங்களை பாவப்பரிகாரமாக ஒப்புக்கொடுத்தல், அடிக்கடி தேவதிரவிய அனுமானங்களை (பாவசங்கீர்த்தனம், திவ்ய நற்கருணை) பெறுதல்.

2. நமக்கு வரக்கூடிய நோயின் வேதனைகளை தேவசித்தத்திற்கு அமைந்த மனதோடும், பொறுமையோடும் ஏற்று ஒப்புக்கொடுத்தல் மூலமாக.

3. வெயிலின் களைப்பை, மழை, குளிரின் சிரமங்களை, வேலையின் பளுவை, அதனால் வரும் கஷ்ட்டங்களை, முறுமுறுக்காமல் மனமுவந்து ஏற்றுக்கொண்டு ஒப்புக்கொடுத்தல் மூலமாக,

4. கணவன், மனைவி இருவரும் ஒருவர் மற்றவரின் குறைகளோடு அவர்களை முழுமையாக ஏற்றுக்கொண்டு, ஆண்டவர் பெயரால் ஒருவரை ஒருவர் பொறுத்துக்கொண்டு, சுபாவத்திற்கு மேற்பட்ட விதமாக ஒருவரை ஒருவர் நேசிப்பதன் மூலமாக ( இது குடும்பங்களில் சமாதானத்தை வளர்க்கும்.)

5. உறவினர்களாலும் நண்பர்களாலும், நமக்கு தெறிந்தவர்களாலும் நமக்கு வரக்கூடிய வேதனை, அவமானம், மனத்துயரம், மனக்கஷ்ட்டங்களை பொறுமையோடு ஏற்றுக்கொண்டு அவற்றை பரிகாரமாக ஒப்புக்கொடுப்பதன் மூலமாக.

6. பிரயாணங்களில் ஏற்படும் அசௌகரீகங்கள், மற்றும் இயற்கை சீற்றத்தினால் வரும் கஷ்ட்டங்கள், சிரமங்களை பொறுமையோடு ஏற்றுக்கொண்டு அவற்றைப் பரிகாரமாக ஒப்புக்கொடுப்பதன் மூலமாக.

7. நம் அனுதின உணவில் சுவைக்கு முதலிடம் கொடுக்காமல், குறைகள் இருந்தாலும், முறுமுறுக்காமல் உண்ணுதல் மூலமாக, தேவையற்ற, அளவுக்கு அதிகமான பதார்தங்களின் எண்ணிக்கையைக் குறைத்து, தேவையான அளவு மட்டும் உண்ணுவதன் மூலம் பரித்தியாகம் செய்யலாம்.

8. வேலைத்தளங்களில் கண்காணிக்க அருகில் மேலதிகாரிகள் யாருமில்லாத நிலையிலும் தன் வேலையைக் கடமையுணர்வோடும், நிறைவாகவும் செய்து முடிப்பதன் மூலமாக.

9. பாத்திமாவின் பிரான்சிஸ்கோவைப்போல, பிறர் தன் பொருளை வஞ்சகமாக தன்னிடமிருந்து பறித்துக்கொள்ளும்போது, அதைத் தாராளமான, பற்றற்ற மனதோடு விட்டுவிடுதல், அப்படிப்பட்டவர்களுக்காகவும், நம்மை மனம் நோகச் செய்பவர்களுக்காகவும் ஜெபித்தல்.

10. சில ஒறுத்தல்களைச் செய்தாவது ஒவ்வொரு நாளும் நற்கருணை நாதரையும், நம் மகா பரிசுத்த மாதாவையும் சந்திக்க முயற்சி செய்தல்.

11. கோவிலில் அவசியமில்லாத போதும் முழந்தாழிட்டு ஜெபமாலை முதலிய ஜெபங்களை ஜெபிப்பதன் மூலமாகவும், ஜெபமாலையின் துக்க இரகசியங்களை கைகளை விரித்து ஜெபிப்பதன் மூலமாகவும், கோவிலையே ஒரு சிறைபோல நாம் உணரும்படி பசாசு நம்மை சோதிக்கும்போது நம் விருப்பத்தையும் மீறி அதிக நேரம் ஆண்டவருக்கும், மாதாவுக்கும் முன் இருந்து ஜெபிப்பதன் மூலமாகவும் பரித்தியாகம் செய்யலாம்.

12. தூங்குவதற்கும், அமர்வதற்கும் சொகுசான பஞ்சு மெத்தைகளை தவிர்த்து சாதாரண மரக்கட்டில், நாற்காலிகளைப் பயன்படுத்துவது, A.C, Fan முதலியவற்றை உபயோகிப்பதை சிறிது நேரம் தவிர்ப்பது.

இதுபோன்ற ஒறுத்தல்கள் பாலன் இயேசுவுக்காக செய்து இயேசு சுவாமியின் வருகைக்காக நம்மை நாம் தயார் செய்வது...

நன்றி : ஆன்ம இரட்சணியத்திற்குரிய எளிய பக்தி முயற்சிகள் புத்தகம்,

குறிப்பு : முன்பு சொல்லியது போல், மாதா பரிகார மலர், கடவுள்-மனிதனின் காவியம், பாத்திமா செய்திகள் உட்பட பல நல்ல கத்தொலிக்க புத்தகங்கள் கிடைக்கும் இடம்

மாதா அப்போஸ்தலர்கள், தூத்துக்குடி, Ph.9487609983, 0461-23619989

இயேசுவுக்கே புகழ் ! மரியாயே வாழ்க !