தாழ்ச்சி அவளது வார்த்தைகளில் மட்டும் காணப்படுவதில்லை. அவளது செயல்களிலும் மிளிர்கிறது. இது குறித்து அவளது மடத்து சகோதரி ஒருவர் பின்வருமாறு கூறுகிறார்:
“ இவர் நாற்பதாண்டுகளாக எங்களது மடத்தின் தாயாராக இருந்துள்ளார். நோயாளிகள் மீது அவர் காட்டும் பரிவுக்கும் கவனத்திற்கும் குறைவே கிடையாது. ஒருதாய் தன் பிள்ளைகளோடு உறவாடுவதுபோல் அவள் எங்களிடம் உரையாடுவாள். எங்களுக்காக மிக தாழ்ந்த பணிகளையும் செய்வார். அவர்தான் தரையைப் பெருக்குவார். இவ்வேலையை நீண்ட நாள் தனிமையாக அவர் செய்தார். அவரது தாழ்ச்சி பிற சகோதரிகளை இப்பணியைச் செய்யத் தூண்டியது.”
இன்னொரு சகோதரி கூறுவதாவது :
“ அவர் வேதாகமத்தை நன்கு கற்றறிந்திருந்தார். மிகப்பெரிய ஞானிகளும் அவரது ஆலோசனைகளைக் கேட்பர். ஆனால் அவர் எல்லா காரியங்களிலும் பிறரது ஆலோசனைகளைக் கேட்க தயங்கமாட்டார். அதனை செயல்படுத்தவும் தயங்கமாட்டார். தன்னை விட பிறருக்கு நன்கு தெரியும் என்று நினைப்பார். பிறருடைய ஆலோசனையின் பேரில் தான் எடுத்த முடிவுகளை கைவிடவும் தயங்க மாட்டார். ஆனால் அதே வேளையில் தான் எடுத்த முடிவின்படியே செயல்படுவது தனது கடைமை என்று நினைக்கும்போது அதனை மிக தயக்கத்துடன்தான் செயல்படுத்துவார்.”
ஜெர்த்ரூத்துக்கு கிடைத்த ஏராளமான வரப்பிரசாதங்களை அவள் பிறரிடமிருந்து மறைக்கவில்லை. மாறாக அவற்றை அவளது ஆன்ம ஆலோசகர்களுக்கு மட்டுமின்றி பிறருக்கும் வெளிப்படுத்தினாள். ஆனால் இதனை மிகப்பரிசுத்த தாழ்ச்சியின் காரணமாகத்தான் செய்வாள். அவளுக்கு ஆண்டவர் அளித்த வரப்பிரசாதங்களுக்கு அவள் எவ்விதத்திலும் தகுதியுள்ளவள் அல்ல என்பதனை முழுமையாக தெரிந்து வைத்திருந்தாள். ஆனால் இந்த வரப்பிரசாத விதைகள் தன்னைவிட சிறந்த ஆன்மாக்களில் ஊன்றப்பட வேண்டும் என்று விரும்புவாள். ஏனெனில் தனது தகுதியற்ற ஆன்மாவுக்கு ஆண்டவர் அதிகப்படியாக தந்த வரப்பிரசாதங்கள் தன்னோடு முடிந்துவிடக்கூடாது; மாறாக இதனை அதிக பலனளிக்கும் நல்ல நிலத்தில் விதைக்க வேண்டும் என்பதற்காக அவளுக்கு கிடைத்த வரப்பிரசாதங்களை பிறருக்குத் தெரிவிப்பாள்.
முதலில் தாழ்ச்சியின் காரணமாக இச்செய்திகளை பிறருக்குக் தெரிவிக்க வேண்டாம் என்று நினைத்தாள். ஆனால் உத்தம தாழ்ச்சி அவளை வெற்றிகொண்டது. ஏனெனில் அவள் ஆண்டவரின் மகிமையையும், பிறருடைய இரட்சிப்பையும் அதிகமாக விரும்பினாள். அவளே எழுதுவதாவது :
“ நான் என் மரணத்திற்குப் பின் என் பாவங்களின் காரணமாக நரகத்தில் எரியப்பட்டாலும் எனக்கு ஒரு ஆறுதல் உண்டு. அது எனது எழுத்துக்களைப் படிப்போர் ஆண்டவரைப் புகழ்வார்கள் என்பதாகும். அவரது வரப்பிரசாதம் கட்டாந்தரை போன்ற என் உள்ளத்தில் பலனிக்காவிட்டாலும்கூட என் எழுத்துக்களைப் படிக்கும் நல்ல உள்ளங்களில் ஆண்டவரது வரங்கள் ஏராளமாக அழியாத பலன்களை தோற்றுவிக்கும்”.
இவ்வார்த்தைகள் தாழ்ச்சி, பிறர்சிநேகம் என்ற நறுமணங்களில் தோய்ந்தவை அல்லவா! அவளது தாழ்ச்சி ஒரே நாளில் உண்டானது அல்ல. ஆண்டவரது படிப்பினையின் படி ஒவ்வொரு நாளும் போராடித்தான் இந்த புண்ணியத்தைப் பெற்றுக்கொண்டாள்.
நன்றி : மாதா அப்போஸ்தலர்கள் சபை, தூத்துக்குடி. “ மாதா பரிகார மலர், சிறந்த கத்தோலிக்க புத்தகங்களுக்கு தொடர்பு கொள்க. சகோ. பால்ராஜ் Ph. 9487609983, சகோ. கபரியேல் Ph.no. 9487257479.
இயேசுவுக்கே புகழ் ! மரியாயே வாழ்க !