பாவசங்கீர்தனத்தின் இரகசியம்! சங்.பவுல் ஓ சலைவன்.

பாவத்திற்கு எதிராக நம் ஆண்டவர் விட்டுச் சென்ற அந்தத் தீர்வு பாவசங்கீர்த்தனம் ஆகும். அதில் பாவியானவன் தனது குற்றத்திலிருந்து மன்னிக்கப்படுவது மட்டு மல்ல, (இதை நன்கு குறித்துக் கொள்ளுங்கள், அன்புள்ள வாசகர்களே), மாறாக, அவன் எதிர்காலத்தில் பாவத்தை விலக்கத் தேவையான பலத்தையும் வல்லமையையும் கூட பெற்றுக்கொள்கிறான்.

"உன் பாவங்கள் உனக்கு மன்னிக்கப்பட்டன சமாதானமாய்ப் போ, இனி பாவம் செய்யாதே" என்று பாவியான அந்தப் பெண்ணுக்குத் தாம் சொன்ன அதே வார்த்தைகளைத்தான் பாவசங்கீர்த்தனம் செய்ய தம்மிடம் வரும் ஒவ்வொரு மனஸ்தாபமுள்ள பாவியிடமும் குருவானவர் வழியாக ஆண்டவர் சொல்கிறார். பாவம் செய்யாதிருக்கும்படி அவர்களுக்கு அவர் கட்டளையிடுவது மட்டுமல்ல, அப்படிப் பாவம் செய்யாதிருக்கத் தேவையான பலத்தையும் விருப்பத்தையும் ஆண்டவரே அவர்களுக்குத் தருகிறார்.

வரலாற்றை சற்று பார்ப்போம்

கிறீஸ்தவ மக்களினங்கள் அனைத்தும், எல்லாக் காலங்களிலும் பாவசங்கீர்த்தனம் கிறீஸ்துநாதராலேயே ஏற்படுத்தப்பட்டது என்று உறுதியாக ஏற்று, நம்பி வந்துள்ளன. இந்த நம்பிக்கை மிகவும் ஆணித்தரமான தாகவும், அசைக்கப்பட முடியாததாகவும் இருந்தது. திருச்சபையின் வரலாற்றின் ஏதாவது ஒரு கால கட்டத்தில் பதிதர்கள் ஏதாவது ஒரு சத்தியத்தை மறுதலித்துத் தப்பறையைப் பரப்பியபோது, திருச்சபையானது அதை மறுத்து எண்ணற்ற வேத சத்தியப் பிரகடனங்களை அல்லது மிகக் கவனமாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட வார்த்தைகளில் விளக்கங்கள், வரையறைகளை வெளியிட்டது. இதன் மூலம் அது தப்பறைகளை விலக்கி, விசுவாச சத்தியங்களைப் பாதுகாத்தது. ஆனால் பாவசங்கீர்த்தனம் தொடர்பான ஒரு பிரகடனத்தையோ, விளக்கத்தையோ, வரையறையையோ தர வேண்டிய கட்டாயம் அதற்கு ஒருபோதும் ஏற்படவே யில்லை.

திருச்சபையால் இன்னும் வரையறுக்கப்பட்டு, பிரகடனம் செய்யப்படாத சத்தியங்களைப் பற்றிப் பல்வேறு பல்கலைக்கழகங்களைச் சேர்ந்த வேதசாஸ்திரிகள் மிக தாராளமாக விவாதிப்பது திருச்சபையின் வரலாற்றில் மிக அடிக்கடி நிகழ்ந்துள்ளது. அதன்பின் மிகச் சரியான நேரத்தில் திருச்சபை தலையிடும், அந்தக் குறிப்பிட்ட சத்தியத்தைத் தெளிவான வார்த்தைகளில் வரையறுத்து, அதை விசுவாச சத்தியமாகப் பிரகடனப்படுத்தும். அத்துடன், "உரோமை பேசிவிட்டது, காரியம் முடிந்துவிட்டது" (Roma locuta est; causa finita est.) என்ற அர்ச். அகுஸ்தீனாரின் வார்த்தைகளுக்கேற்ப, அந்த சத்தியத்தைப் பற்றிய எல்லா விவாதங்களும் நின்றுபோகும். ஆனால் பாவசங்கீர்த்தனத்தைப் பொறுத்த வரை, வேதசாஸ்திரிகளின் கருத்து எப்போதுமே ஏகமனதாகத்தான் இருந்து வந்துள்ளது. திருச்சபையின் தவறாவரமுள்ள அதிகாரம் அதில் தலையிட வேண்டிய அவசியம் ஒருபோதும் ஏற்பட்டதில்லை. பரிசுத்த திருச்சபைத் தந்தையர்கள் இதுபற்றிக் கூறியவை

அர்ச். பெசில் பாவசங்கீர்தனம் பற்றிப் பின்வருமாறு எழுதுகிறார்: “கடவுளின் பரம இரகசியங்களைப் பகிர்ந்தளிக்க நியமிக்கப் பட்டுள்ளவர்களிடம் நாம் பாவசங்கீர்த்தனம் செய்ய வேண்டும் என்பது அவசியமானது.''

அர்ச். அமிர்தநாதர்:

"பாவம் விஷமாயிருக்கிறது.

பாவசங்கீர்த்தனமோ, ஒருவன் தன் பாவங்களைப் பற்றித் தன்னையே குற்றஞ்சாட்டிக் கொள்வதாக இருக்கிறது. அக்கிரமம் விஷமாயிருக்கிறது, பாவசங்கீர்த்தனமோ பாவத்தில் மீண்டும் விழாதிருக்கத் தேவையான மருந்தாயிருக்கிறது. ஆனால் பாவசங்கீர்த்தனம் செய்ய நீ வெட்கப் படுகிறாயா? இந்த வெட்கம் சர்வேசுரனுடைய நீதியாசனத்திற்கு முன்பாக உனக்கு எந்த விதத்திலும் உதவாது. உடனே இந்த வெட்கத்தின்மீது வெற்றிகொண்டு உடனே பாவசங் கீர்த்தனம் செய்யப் போ."

அர்ச். அகுஸ்தீனார்:

"நாம் மறுவுலகில் குழப்பத்திற்கு ஆளாகாதபடி. இந்த உலகில் நாம் பாவசங்கீர்த்தனம் செய்ய வேண்டுமென்று நம் இரக்கமுள்ள ஆண்டவர் விரும்புகிறார்.''

அர்ச். க்றீசோஸ்தோம் அருளப்பர் :

"தபசுகாலத்தின் முடிவை அடைந்துள்ளோம். இப்போது நம் பாவங்களை முழுமையாகவும், துல்லியமாகவும் நாம் சங்கீர்த்தனம் செய்ய வேண்டும்." "தேவதூதர்களுக்கும், அதிதூதர்களுக்கும் கூட கொடுக்கப்படாத ஒரு வல்லமை கத்தோலிக்கக் குருக்களுக்குக் கொடுக்கப்பட்டுள்ளது. ஏனெனில், “எவர்களுடைய பாவங்களை மன்னிப்பீர்களோ, அவர்களுக்கு அவை மன்னிக்கப்படும்; எவர்களுடைய பாவங்களை மன்னியாதிருப்பீர்களோ, அவர்களுக்கு அவை மன்னியாது விடப்படும்" என்று சேசுநாதர் அப்போஸ்தலர்கள் வழியாகத் தம் குருக்கள் அனைவரிடமும் சொல்கிறார்."

அர்ச். எரோணிமுஸ்:

"மேற்றிராணியாரோ, அல்லது குருவோ நமது பல வகையான பாவங்களைக் கேட்டபின், தமது கடமைப்படி, கட்டுகிறார், அல்லது கட்டவிழ்க்கிறார்; யார் கட்டப்பட வேண்டும், யார் கட்டவிழ்க்கப்பட வேண்டும் என்பதை அவர் புரிந்து வைத்திருக்கிறார்.''

இந்தத் திருச்சபைத் தந்தையரின் கருத்துக்களை வாசிக்கும்போது, அவர்கள் பாவசங்கீர்த்தனம் கேட்கும் குருவிடம் தனிமையில், இரகசியத்தில் செய்யப்படுகிற பாவசங்கீர்த்தனத்தைப் பற்றியே பேசுகிறார்கள் என்பது முற்றிலும் தெளிவாகிறது.

இவ்வாறு பாவசங்கீர்த்தனம் என்னும் சத்தியத்தைப் பற்றிய எந்த விதமான சர்ச்சையும் ஒரு காலத்திலும் எழுந்ததில்லை. அப்படிப்பட்ட வாக்குவாதங்களைப் பற்றி திருச்சபையின் சரித்திரம் முழுவதிலும் எந்த விதமான குறிப்பையும், அல்லது அது தொடர்பாக நூலகங்களில், அல்லது ஆவணக் காப்பகங்களில் பாதுகாத்து வைக்கப் பட்டுள்ள ஆவணங்கள் எதையும் நாம் காணவில்லை. குருவானவரிடம் தனிமையில், இரகசியத்தில் செய்யப்படும் பாவசங்கீர்த்தனம் தொடர்பாக எந்த சந்தேகமும் எந்தக் காலத்திலும் கத்தோலிக்கர்களுக்கு இருந்ததில்லை என்பது தான் இதற்கான எளிய காரணமாகும்.