இயேசுவின் திரு உடல், திருஇரத்தமும் - வாழ்வு தரும் உணவு

இணைச்சட்டம் 8:2-3 14-16  1கொரி 10:16-17 யோவான் 6:51-58

திருப்பாடல் 147:12-15 19-20”எருசலமே ஆண்டவரை புகழ்வாயாக”

கூட்டம் ஒன்றில் அறிவுரை நிகழ்த்தச் சென்றிருந்த மந்திரியிடம். அரைமணி நேரம் மட்டும் பேசினால் போதும் என்று கூட்டத்தை ஏற்பாடு செய்தவர்கள் முன்னதாகக் கேட்டுக் கொண்டிருந்தனர். சொற்பொழிவு முடிந்தபின் கூட்டத்தை ஏற்பாடு செய்தவர்கள். மாண்புமிகு அமைச்சரே நாங்கள் உம்மை அரைமணி நேரம் மட்டும் பேசும்படியாகக் கேட்டிருந்தோம். ஆனால் தாங்கள் ஒண்ணரை மணிநேரம் பேசியிருக்கிறீர்களே என்று கேட்டனர். உடனே மந்திரி தமது செயலரை அழைத்து நான் உன்னை அரைமணி நேரத்திற்கல்லவா எனது உரையை தயாரிக்கும்படியாகச் சொல்லியிருந்தேன்? பின் ஏன் ஒண்ணரை மணி என்றார். நான் அரை மணி நேரத்திற்குத் தான் தயார் செய்து வைத்திருந்தேன். ஆனால் அந்த சொற்பொழிவுகளின் மூன்று பிரதிகளையும் ஒன்றன் பின் ஒன்றாகப் படித்ததால் ஒண்ணரை மணி நேரம் ஆகிவிட்டது என்றார் செயலர். 

தகுதி பெற வேண்டாமா?

நம்மில் அநேகர் திருப்பலியில் பங்கெடுக்கும்போது கவனமின்றி இருப்பதாலும் உலகக் கவலைகளில் ஊன்றி விடுவதாலும் பயனுள்ள முறையில் பங்குபெற இயலுவதில்லை. இதனால் இருளும் நோயும் மரணமும் ஆன்மாவைப் பாதிக்கின்றன. இறைப்பற்றியே புனித பவுல் யாராவது இந்த அப்பத்தை தகுதியின்றி உண்டால் ஆண்டவரின் கிண்ணத்தில் பருகினால் ஆண்டவருடைய உடலுக்கும் இரத்தத்திற்கும் எதிராக குற்றம் புரிகிறார்கள்  என்கிறார். மனத்தில் பகை வர்மம் வைராக்கியம் இவற்றோடு திருப்பலியில் பங்கு பெற்றுத் தேவ நற்கருணையை உட்கொண்டால் பாவத்தைக் கட்டிக் கொள்வதோடு இருதயத்தைக் கடினமாக்கி ஞானப்புலன்களை இழக்க வேண்டி வரும். தகுதியற்ற முறையில் திவ்விய நற்கருணையை உட்கொண்டதால் தான் தாஸ் உள்ளத்தில் சாத்தான் நுழைந்தான் என வேதம் சொல்கிறது. பிறர் அன்பு இல்லாமல் இருப்பதும் இயேசுவின் உடலை உண்பதற்கு ஒரு தடை. (மத்.5:23-24)

உறவின் விருந்து 

இயேசுவின் உடலையும் இரத்தத்தையும் உட்கொள்வது என்பது ஒற்றுமையின் அடையாளம். ஓன்றிப்பின் வெளிப்பாடு. இப்படிப்பட்டட சிறப்புமிக்க நல் அமுதத்தை பெறும்போது நாம் ஒருவரோடு ஒருவர் நெருங்கிய உறவு கொள்ள வேண்டுமில்லையா? ஒன்றோடு ஒன்று சேரும் உருகும் மெழுகு போன்று இயேசுவோடும் அயலாரோடும் சேர வேண்டுமில்லையா? இதை விட்டுவிட்டு ஆதிக் கிறிஸ்துவர்களின் வாழ்க்கையைப் பின்பற்ற வேண்டிய நாம் எப்படி சாதிக்கிறிஸ்துவர்களாக இருக்க முடிகிறது? நம்மைப் பின்பற்றும் மீதிக் கிறிஸ்துவர்களின் நிலை என்ன ஆவது? ஒரே குடும்பமாகக் கூடும் நாம் அனைவரும் பலராயினும் நாம் பங்கு கொள்ளும் விருந்தின் பொருட்டு ஓருடலாகிறோம் என்பதை நாம் அடிக்கடி மறப்பதால்தான் நம்மிடையே தேவையற்ற பாகுபாடு பிரிவினை பிளவு போன்றவை தலைவிரித்தாடுகின்றன  சாதாரண உணவே உடலுக்குப் புத்துணர்ச்சி அளிக்கும்போது நற்கருணை எப்படிப்பட்ட புத்துணர்ச்சியையும் தெம்பையும் அளிக்கக்கூடும். இதை ஏன் மறந்து நற்கருணையை நவீன காலத்தில் அலட்சியம் செய்கிறோம்?

விளைவு

துன்பத்திலும் துயரத்திலும் உணவு ஒருவனுக்கு கைகொடுக்கிறது. பாலைவனத்திலும் மக்களின் பசியை துயரை நீக்க மன்னா அளிக்கப்பட்டது.(நற்கருணை) அதைப்போல புதிய மன்னாவாக நற்கருணை நம்மோடு கலந்து நிற்க அதில் உறையும் இயேசு நம் நண்பனாகவும் அன்பின் கைதியாகவும் மாறி அன்பிற்காக  அரவணைப்பிற்காக நாளும் ஏங்குவதை ஏன் நாம் கண்டுகொள்வதில்லை. ஒவ்வொரு முறையும் கோவிலில் நுழையும் போது யாரை நாம் முதலில் சந்திக்கிறோம்? நமக்காகவே ஏங்கிக் கிடக்கும் இயேசுவையா? அல்லது எண்ணற்ற விதத்தில் இருக்கும் புனிதர்களின் சுரூபங்களையா? அல்லது விதவிதமாகக் காட்சிப் பொருளாக அமர்ந்திருக்கும் மனிதர்களையா?

நாம் வாழ்வு பெற இயேசு நற்கருணையைத் தன் தசையாகவும் இரத்தமாகவும் அளித்திருக்கிறார். அவரைப் போல ஏழை எளிய மக்களுக்காக வாழத் துடிக்கும் பணிபுரிய விரும்பும் ஒவ்வொருவரும் அம்மக்களின் உடலோடு உணர்வுகளோடு இரண்டறக் கலந்தால்தான் சிறந்த பணிபுரிய முடியும். இவர்கள் என் மக்கள் என் இரத்தத்தின் இரத்தம் எனச்சொல்ல முடியும். அவரோடு அவரால் இனியும் வாழ விரும்பினால் அவரைப்போல வாழ்வோம். அவர் வாழ்வு நற்கருணை வாழ்வு. நற்கருணை வாழ்வு அன்பு வாழ்வாக இல்லாமல் வேறு என்னவாக இருக்க முடியும் ஆகவே இம் மாண்புயர் நற்கருணையைத்தான் நம் வாழ்வின் மையமாக்க   இயேசு விரும்புகிறார். வாருங்கள் அவர் விருப்பத்தை நிறைவேற்றுவோம்.

கேள்வி

வாழ்வு தரும் உணவாகிய இயேசுவின்மீது நாம் கொண்டுள்ள அக்கறை எவ்வளவு? சிந்திப்போம் முழு திருப்பலியில் முழுதகுதியோடு நம்மை தாயாரித்து கொண்டு ஆண்டவரின் உடலையும் இரத்தத்தையும் உட்க்கொள்வோம் இந்த மே மாதம் நம் அன்னையின் உதவியை வேண்டி  தினமும் நம் அன்னைக்கு ஜெபமாலை ஒப்புக்கொடுத்து  பாவிகள் மனம் திரும்பவும் உத்தரிக்கிற ஸ்தல ஆன்மாக்களுக்காகவும் ஒப்புக்கொடுப்போம் 

இயேசுவுக்கே புகழ் ! மாமரிதாயே வாழ்க