சேசுவின் திரு இருதயம் எங்கும் சிநேகிக்கப்படுவதாக!

சேசுவின் மகா பரிசுத்த திரு இருதயம் தேவ-மனிதரின் இருதயமாக இருக்கிறது. மனிதாவதாரப் பரம இரகசியத்தின் வழியாக, தேவ சுதன், இஸ்பிரீத்துசாந்து நிழலிட்டதால், பரிசுத்த கன்னி மாமரியின் மாசற்ற இருதயத்திலிருந்து ஒரு மனித இருதயத்தை எடுத்துக்கொண்டார். திரு இருதயப் பிரார்த்தனையில், தேவ சுதனின் மனிதாவதாரத்தைப் பற்றிய மிக அழகிய மன்றாட்டு ஒன்று உள்ளது: "பரிசுத்த கன்னித் தாயின் உதரத்திலே இஸ்பிரீத்து சாந்துவினால் உருவான சேசுவின் திரு இருதயமே." இதற்கு அடுத்த மன்றாட்டு, சேசுவின் மனித இருதயம் அவரது தேவ சுபாவத்தோடு ஒன்றித்திருக்கிறது என்பதை நமக்கு நினைவுபடுத்துகிறது: “தேவ வார்த்தையாகிய சுதனோடு ஒரே பொருளாய் ஒன்றித்திருக்கும் சேசுவின் திரு இருதயமே...” சுவிசேஷங்களில்: “என் மக்களிடம் என் இருதயம் பரிவுகொள்கிறது" (மத். 15:32) என்றும், "வருத்தப்பட்டுப் பாரஞ்சுமக்கிறவர்களே, என் அண்டையில் வாருங்கள். நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன்... என்னிடமிருந்து கற்றுக்கொள்ளுங்கள். ஏனெனில் நான் சாந்தமும், இருதயத் தாழ்ச்சியும் உள்ளவன். உங்கள் ஆத்துமங்களும் இளைப்பாற்றியைக் கண்டடையும். ஏனெனில் என் நுகம் எளியது, என் சுமை இனியது" (மத்.11:28) என்றும் கிறீஸ்துநாதர் கூறும்போது, அவர் தமது சொந்த இருதயத்தையே குறிப்பிடுகிறார்.

தேவ உயிர் நம்மீது பொழியப்படும் செயல், கிறீஸ்துவின் திறக்கப்பட்ட இருதயத்திலிருந்து வழிந்தோடிய இரத்தத்தாலும், நீராலும் குறித்துக் காட்டப்படுகிறது. இச்செயல் அவருடைய திருச்சபையில், விசேஷமாக தேவத்திரவிய அனுமானங்களில் தொடர்கிறது. சேசுவின் ஊடுருவப் பட்ட திரு இருதயத்திலிருந்து வழிந்த தண்ணீரிலும், இரத்தத்திலும் திருச்சபை எப்போதும் ஞான ஸ்நானம், திவ்ய நற்கருணை ஆகிய தேவத் திரவிய அனுமானங்களைக் காண்கிறது. இவற்றினால், இஸ்பிரீத்துசாந்து நம் ஆத்துமங்களுக்குள் ஊற்றப்படுவதன் வழியாக, திருச்சபையில் நாம் உயிர் பெறுகிறோம். இவற்றின் மூலமாகத்தான் நம்மில் வாசம் செய்கிற இஸ்பிரீத்துசாந்துவானவரின் உயிர், கிறீஸ்துநாதரின் மெய்யான சரீரமாகிய பரலோக உணவால் போஷிக்கப்படுகிறது.

திவ்ய கன்னிகை தேவ அடிமையாகத் தன்னை அர்ப்பணித்ததும், தேவ சுதனின் தேவ சுபாவத்தோடு மனித சுபாவம் இணைந்து, சேசுவின் திரு இருதயம் துடிக்கத் தொடங்கியது. அவர் நமக்காகப் பிறந்தார். நமக்காக வாழ்ந்தார், நமக்காகவே மரித்தார். தமது கொலைஞர்களின் வன்முறையைவிட

அதிகமாக அன்பினாலேயே அவர் சிலுவையில் அறையப்பட்டார்; “அவர் என்னை நேசித்து, எனக்காகத் தம்மையே கையளித்தார்" என்ற அப்போஸ்தலரின் கூற்றுப்படி, அவர் ஒவ்வொரு மனிதனுக்கும் தம்மையே உன்னதக் கொடையாகத் தந்தார். அவர் தமது இருதயத்தில் வைத்துள்ள

பேறுபலன்களின் அளவற்ற பொக்கிஷத்தை இரட்சிக்கப்பட்ட மனித இனத்தின்மீது பொழிகிறார்.

சேசு அர்ச். மர்கரீத் மரியம்மாளிடம்: "மனிதர்களை எவ்வளவோ அதிகமாக நேசித்த என் இருதயத்தைப் பார். பதிலுக்கு அவர்களிடமிருந்து நான் பெறுவதெல்லாம் நன்றியற்றதனமும்

நிந்தை அவமானங்களுமே. இவற்றிற்குப் பரிகாரம் செய்வதன் மூலம் நீயாவது எனக்கு ஆறுதல் அளிக்க முயற்சியெடு" என்றார். மனிதர்களில் பெரும்பாலானவர்கள் கடவுளிடமிருந்து நன்மைகளைப் பெற்றுக்கொள்வதுதான் பக்தி என்று நினைக்கிறார்கள். ஆனால் இங்கோ, சேசுவின் திரு இருதயம் மனிதர்களிடம் ஆறுதல் கேட்கிறது. சர்வ வல்லபர் அற்பப் புழுவிடம் ஆறுதலைக் கேட்பது எவ்வளவு பரிதாபம்! ஆனால் அதையும் நாம் தர மறுப்பது எத்தகைய அக்கிரமம்! இதைப் புரிந்து கொண்டால், அவரை நேசிப்பதும், அவருக்கெதிரான நிந்தைகளுக்குப் பரிகாரம் செய்வதும் நமக்கு எவ்வளவு எளிதாயிருக்கும்!

சேசுவின் இந்த வல்லமை மிக்க திரு இருதயத்திற்கு மனித ஆறுதல் என்பது தேவைதானா? இந்தத் திரு இருதயம் வல்லமை மிக்க சர்வேசுரனும், மனிதனுமானவரின் திரு இருதயம் என்ற முறையில் அதற்கு மனித ஆறுதல் அற்ப அளவிலும் கூட தேவையில்லை. ஆனால் இங்கே இருதயம் என்பது தேவனும், மனிதனுமானவர் மனிதர் மீது கொண்ட அளவற்ற பேரன்பிற்கு ஒரு மாற்றுச் சொல்லாகப் பயன்படுத்தப்படுகிறது. பெத்லகேமிலும், நாசரேத்தின் மறைந்த வாழ்விலும், அவருடைய பொது ஜீவியத்திலும், எல்லாவற்றிற்கும் மேலாக, கல்வாரியின்மீதும் அளவற்ற விதமாக மனிதர் மீது பொழியப்பட்ட இந்தத் தெய்வீகப் பேரன்பு, மனிதர்களின் பாவங்களால் காயப்படுத்தப்படுகிறது. அவரது மனித சுபாவம், அவரால் மீட்டு இரட்சிக்கப்படும் ஆத்துமங்களிடமிருந்து பதிலன்பைத் தேடுகிறது, அவர்களுக்குத் தாம் செய்த சகல நன்மைகளுக்கும் அவர்கள் நன்றியுள்ளவர்களாக இருக்க வேண்டுமென்று எதிர்பார்க்க அவர் முழு உரிமையுள்ளவராக இருக்கிறார்.

ஆனால் தங்கள் இரட்சணியத்தை அலட்சியம் செய்பவர்களும், தங்களுக்காகச் சிந்தப்பட்ட மகா பரிசுத்த திவ்ய இரத்தத்தை வீணாக்குபவர்களும், அவர் தங்களுக்குக் காண்பித்துள்ள அன்புக்குப் பிரதிநன்றியாக, காரணமேயின்றி அவரைத் தங்கள் செயல்களால் வெறுத்துப் பகைப்பவர்களுமான மனிதர்களைக் குறித்து அவருடைய திவ்ய இருதயம் மீண்டும் பல முறை வியாகுல ஈட்டியால் குத்தித் திறக்கப்படுகிறது. இந்த அளவற்ற வேதனையில்தான் அவருடைய திரு இருதயம், அவரை நேசிப்பவர்களிடம் ஆறுதலுக்காகத் திரும்புகிறது.

ஆகவே, சேசுவின் திரு இருதய பக்தியின் முதல் நோக்கம், சேசுவின் மட்டில் இகழ்ச்சி அல்லது குறைந்த பட்சம் அசட்டைத்தனம் உள்ளவர்கள்மீது அவர் கொண்ட பேரன்புக்குப் பிரதியன்பு செலுத்துவதும், நமது நன்றியறிதலாலும், எல்லா வகையான சங்கை மரியாதையாலும், திவ்ய நற்கருணையில் சேசு நமக்குக் காட்டும் நேசத்திற்கு மகிமையும், நன்றியறிதலும் செலுத்துவதும் ஆகும். நற்கருணையில் தம்மை அறிந்துள்ள மக்களால் கூட அவர் மிகக் குறைவாக நேசிக்கப்படுகிறார். இந்த பக்தியின் இரண்டாவது நோக்கம், அவரது இவ்வுலக வாழ்வில் அவருடைய அன்பு அவரை எவற்றிற்கு உட்படுத்தி வைத்திருந்ததோ, அந்த நிந்தை, அவமானங்களுக்கும், திவ்ய நற்கருணையில் ஒவ்வொரு நாளும் தமது அன்பினால் அவர் எதிர்கொள்கிற நிந்தை அவமானங்களுக்கும் நம்மால் முடிந்த எல்லா வழிகளிலும் பரிகாரம் செய்வது ஆகும்.