இராப்போசனத்துக்குப்பின் சேசுநாதர் அப்போஸ்தலர்களுடைய கால்களைக் கழுவி திவ்ய நற்கருனையை ஸ்தாபிக்கிறார்.

சேசுக்கிறிஸ்துநாதருடைய திருப்பாடுகளின் பேரில் தியானங்கள்

பெரிய வியாழக்கிழமை 44 - ம் தியானம்

இராப்போசனத்துக்குப்பின் சேசுநாதர் அப்போஸ்தலர்களுடைய கால்களைக் கழுவி திவ்ய நற்கருனையை ஸ்தாபிக்கிறார்.

1-ம் ஆயத்த சிந்தனை

நமது திவ்ய இரட்சகர் முழங்காலிலிருந்து தமது அப்போஸ்தலர்களுடைய கால்களைக் கழுவுகிறதை நீ பார்ப்பதாகவும், பின்பு திவ்ய நற்கருணையை உண்டாக்கி இது என் சரீரம் வாங்கிப் புசியுங்கள் என்று மிக்க அன்புடன் சொல்லும் வார்த்தை களைக் கேட்பதாகவும் ரூபிகரித்துக் கொள்.

2 - ம் ஆயத்த சிந்தனை

நீ உன் ஒன்றுமில்லாமையை நன்றாய்க் கண்டுபிடித்து எப்போதும் தாழ்ச்சியுள்ளவனாயிருக்கவும் திவ்ய நற்கருணையை வாங்குகிறதற்கு முன் உன் ஆத்துமத்தை நல்ல ஆயத்தம் செய்து பயபக்தியுடன் அதை அண்டுவதற்கும் வேண்டிய தேவ அநுக்கிரகத்தை மன்றாடிக்கேள்

தியானம்

சேசுநாதர் இவ்வுலகத்தை விட்டுப் பிரியச் சமயம் வந்ததென்று அறிந்து, தாம் மிக்க அன்புடன் சிநேகித்த தமது அப்போஸ்தலர்களோடு தமது கடைசி இராப் போசனத்தைப் புசிக்க ஆசித்தார். இராப்போசன சாலையில் உட்கார்ந்து மிக்க பாசநேசத்துடன் தமது சீஷர்களை நோக்கி: நான் பாடுபடுமுன் இந்தப் பாஸ்காவை உங்களோடு உண்ண ஆவலாய் விரும்பினேன்.மேலும் இந்தக் கடைசி போசனத்துக்குப் பின் உங்களையும் சகல மனிதரையும் இரட்சிக்கும் பொருட்டு நாளைய தினம் சொல்லி முடியாத நிந்தை அவமானப்பட்டு ஓர் பெரும் பாதகனைப்போல் கழுமரத்தில் தூக்கப்படப் போகிறேன், என்று சொன்னதைக் கேட்ட அப்போஸ்தலர்கள் பயந்து நடுங்கி திகில் கொள்வதைக் கண்ட நமது திவ்விய நாதர் அவர்களுக்குப் பிரியமுள்ள வார்த்தைகளைச் சொல்லித் தேற்றித் தைரியப்படுத்துகிறார்.

ஆ! என் பிரிய சேசுவே! நீசப் பாவியாகிய அடியேனை இரட்சிக்கும்படி எவ்வளவோ விருப்பம் கொண்டு உமது உயிரைப் பாராமல் என்பேரிலேயே கவலை கொண்டிருக்கிறீர். உமது இந்த நிகரில்லாத அன்புக்கு எப்படிப் பிரதி அன்பு காட்டுவேன்? தேவரீரை அடியேன் அதிக மதிமாய்ச் சிநேகிப்பதற்கான இருதயத்தைக் கட்டளையிட்டருளும்

கொல்லப்பட்டுத் தோலுரிக்கப்பட்டு எலும்பு முறிபடாமல் மேசைமேல் வைக்கப்பட்டிருக்கும் ஓர் இளம் ஆட்டுக்குட்டியைக் கண்ணோக்கிப் பார்க்கிறார். அந்தச் செம்மறிப் புருவையைப்போல் மறுநாள் தாம் படவிருக்கும் கொடூரமுள்ள அடிகளால் தமது திருச்சரீரத்தின் தோலுரிக்கப்பட்டு ஏக காயமாகித் தமது எலும்புகள் முறிபடாமல் சிலுவை பீடத்தின்மேல் தாம் பலியாகப் போகிறதையும், ஆயத்தம் பண்ணப்பட்டிருக்கும் கசப்பான நீர் தாம் குடிக்க விருக்கும் பிச்சுக் கலந்த காடிக்கு அடையாளமாயிருப்பதையும்,

கையில் பிடித்திருக்கும் நீளக்கோல் தாம் சாகவிருக்கும் சிலுவை மரத்துக்கு அடையாளமாயிருப்பதையும் நினைக்கும்போது தமது ஆத்துமத்தில் வெகு கஸ்தி துக்கம் அநுபவிக்கத் தொடங்குகிறார்.

தாம் யூதர்களுடைய வேத ஆசாரங்களை அநுசரிக்கக் கடமைப் படாதவராயினும் மற்றவர்களுக்குத் துர்மாதிரிகை வருவிக்காதபடிக்கு மேற்படி ஆசாரங்களில் ஒன்றும் விடாமல் சகலத்தையும் அநுசரிக்கச் சித்தமானார். நாமும் நமது ஒழுங்கு விஷயத்தில் எவ்வளவோ நுணுநுணுக்கமாய் இருக்கக் கடவோம். அநேக முறை நாம் குறிக்கப்பட்ட நேரத்தில் மெளனம் அநுசரியாமல் பேசுவதாலும் மணியடிக்கும்போது நமது ஞானக் காரியங்களுக்குப் போகத் தாமதிப்பதாலும், எத்தனை முறை மற்றவர்களுக்குத் துன்மாதிரிகையாக நடந்து கொண்டோம். “சொற்ப காரியங்களில் அசட்டை செய்கிறவன் சீக்கிரத்தில் பெரிய காரியங்களில் தப்பிப் போவான்” என்னும் வேத வாக்கியத்தை மனதில் வைத்துக் கொண்டு நமது கடமை வேலைகளைப் பிரமாணிக்கமாய் அநுசரிப்பதுடன் சொற்ப ஒழுங்குகளிலும் தவறிப்போகாமல் சகலத்திலும் சாங்கோபாங்கமாய் நடக்கப் பிரயாசைப்படுவோமாக.

இராப்போசனம் முடிந்த பின் நமதாண்டவர் மேசையை விட்டெழுந்து, தமது வஸ்திரங்களைக் கழற்றி இடையில் ஓர் துணியைச் சுற்றிக் கொண்டு தண்ணிர் பாத்திரத்தை கையில் பிடித்து அப்போஸ்தலர்களுடைய பாதத்தில் மிக்க தாழ்ச்சியுடன் முழங்கால் படியிடுகிறார். ஆ! இது என்ன ஆச்சரியம்! மூன்று லோகத்தையும் சிருஷ்டித்துக் காப்பாற்றி வரும் ஆண்டவரும் சர்வேசுரனுமானவர் தமது சிருஷ்டிகளுக்குமுன் முழந்தாட்படியிட்டிருக்கிறார்.

பத்திச் சுவாலகரால் சாஷ்டாங்க தண்டனிட்டு ஆராதிக்கப்படும் கடவுள் சில செம்படவருடைய பாதத்தில் விழுந்து கிடக்கிறார். ஆ! அற்ப மனிதா, ஒரு புழுவுக்கு ஒப்பான நீ ஏன் அவ்வளவு ஆங்கார கர்வம் கொள்கிறாய்? அசுத்தமான நீ ஏன் உன்னை அவ்வளவு பெருமை பாராட்டிப் பேசுகிறாய்? அநேக பாவங்களையும் துரோகங்களையும் கட்டிக் கொண்ட பெரும் பாவியாகிய நீ, உன் நிர்ப்பாக்கியத்தைக்கண்டுபிடியாமல் உன் சகோதரன் உனக்குச் செய்த சொற்ப தப்பிதத்தை மனதில் வைத்துக் கொண்டு அவனைப் பழிவாங்கத் தேடுகிறாய். இதோ உன் கண்களைத் திறந்துபார், தேவசுதன் அற்ப மனுஷருடைய பாதத்தில் முழந்தாட்படியிட்டிருக்கிறார். இதைக் கண்டு உன் ஆங்கார கர்வத்தைத் தகர்த்து நிர்மூலமாக்கக்கடவாய். சேசுநாதர் தம்மை அவ்வளவாய்த் தாழ்த்தினபடியால் மோட்ச மட்டும் உயர்த்தப்பட்டார். ஆனால் ஒன்றுமில்லாமையாகிய நீ மேலே பறக்கப் பார்த்தால் நரக மட்டும் தாழ்த்தப்படுவாயென்று கண்டுபிடித்து எப்போதைக்கும் உன்னைத் தாழ்த்தக் கற்றுக்கொள்.

பின்பு சேசுநாதர் தண்ணீர் பாத்திரத்தை எடுத்துக்கொண்டு இராயப்பரை அணுகி, அவருடைய கால்களைக் கழுவப் போனபோது, இராயப்பர் நமதாண்டவரைப் பார்த்து சுவாமி தேவரீர் மெய்யான சர்வேசுரனுடைய திருச்சுதனாயிருக்க, பாவியும் அயோக்கியனும் புழுவுக்குச் சமானமுமான என் கால்களைக் கழுவ வருகிறீரோ? அது செய்ய வேண்டாம். என் கண்ணீரால் உமது திருப்பாதத்தைக் கழுவவும் நான் தகுதியற்றவனாயிருக்க, தேவரீர் எப்படி என் கால்களைக் கழுவ வருகிறீர்?” என, நமதாண்டவர் அவரைப் பார்த்து: “நாம் செய்கிறதை இப்போது அறியாய்” என்றார்.

இராயப்பர்: "சுவாமீ! தன் தாயின் உதரத்தில் ஆசீர்வதிக்கப்பட்டு அர்ச்சியசிஷ்டவராய் ஒழுகிய ஸ்நாபக அருளப்பர் உமது பாத ரட்சையின் வாரை அவிழ்க்கத் தாம் தகுதியற்றவரென்று சொல்லியிருக்க, அடியேனுடைய பாதத்தை எப்படிக் கழுவ வருகிறீர்?”

என்றார். அதற்குச் சேசுநாதர்: “நாம் உன் கால்களைக் கழுவாவிடில் மோட்ச இராச்சியத்தில் உனக்குப் பங்கு கிடையாது” என்று சொல்லவே, இராயப்பர்: “ஆண்டவரே! அப்படியானால் என் கால்களை மாத்திரமல்ல, என் சரீர முழுமையும் கழுவியருளும்” என்றார்.

ஆ! பிரிய சகோதரனே! இராயப்பருடைய உத்தம தாழ்ச்சிக்கும் நம்முடைய ஆங்கார குணத்துக்கும் எவ்வளவு பெரும் வித்தியாசம்! சேசுநாதர் அவருக்குக் கட்டளையிட்டவுடனே கீழ்ப்படிகிறார்.

நாமும் சர்வேசுரனுக்குப் பதிலாயிருக்கும் நமது சிரேஷ்டர்கள் யாதோர் காரியம் நமக்குக் கட்டளையிடும்போது அவர்களோடு தர்க்கிக்காமல் உடனே கீழ்ப்படியக் கடவோம். அர்ச்சியசிஷ்ட இராயப்பர் தம்மை அவ்வளவாகத் தாழ்த்தினபடியால் அப்போஸ்தலர்களுக்குப் பிரபுவும், திருச்சபைக்குத் தலைமையுமானார். நாமும் எப்பொழுதும் தாழ்மையும் கீழ்ப்படிதலும் உள்ளவர்களாயிருக்கப் பழகி, சுவாமீ! எங்களுக்கிருக்கும் ஆங்கார கோபம் முதலிய துர்க்குணங்களை எங்களிடத்தில் நின்று நிர்மூலமாக்கி உமது இஷ்டப்பிரசாதத்தால் எங்களைச் சுத்தி செய்தருளுமென்று சொல்வோமாக.