எவ்வளவு பெரிய இருட்டாக இருந்தாலும், கிழக்கு அதை கிழிக்காமல் விடாது. கல்லறை இருட்டைக் கிழித்து, கிழக்கின் விளக்காக கிளர்ந்து எழுந்துள்ளார் கிறிஸ்து. சாவுக்குச் சாவுமணி அடித்து, சாவே உன் வெற்றி எங்கே? சாவே உன் கொடுக்கு எங்கே? என்று சிந்தை மகிழ, விந்தை நிகழ, கல்லறைக் கூட்டை உடைத்து, வீர முழக்கத்துடன் வெற்றி வீரராய் உயிர்த்தெழுந்தார் கிறிஸ்து.
வெற்றி நாயகன் இயேசுவின் தாயாம் அன்னை மரிதாயும், வெற்றிகளின் அன்னையே. ஜெகத்தை வென்ற ஜெகனின் தாயாம் அன்னை மரியாள் ஜெக மாதா, வெற்றிகளின் மாதா. அன்னை மரிதாயை, வெற்றிகளின் அன்னை என்று அழைப்பதற்கு ஒரு வரலாறும் உள்ளது. 16ம் நூற்றாண்டில், முஸ்லிம்கள், இஸ்பெயின் நாட்டின் பெரும் பகுதியை ஆக்ரமித்து, கிறிஸ்தவ ஐரோப்பாவின் பெரும் பகுதியை அச்சுறுத்தினர்.
இந்த அச்சுறுத்தல், கிறிஸ்தவர்களுக்கும், முஸ்லிம்களுக்கும் இடையே Ionian கடல் பகுதியில், Lepanto என்ற இடத்தில் நடந்த சண்டை உண்மையாக்கியது. இந்த ஆபத்தை உணர்ந்த அப்போதைய திருத்தந்தை ஐந்தாம் பத்திநாதர் அவர்கள், அனைத்துக் கிறிஸ்தவர்களையும், செபமாலை செபிக்குமாறு கேட்டுக்கொண்டார். கிறிஸ்தவர்கள் எல்லாரும் அன்னை மரிதாயை நோக்கி உருக்கமாக செபமாலைச் செபித்தனர்.
கிறிஸ்தவ ஐரோப்பிய படைகள், போரில் வெற்றியும் பெற்றன. இது நடந்தது 1571ம் ஆண்டு அக்டோபர் 7ம் நாள். இதனால், திருத்தந்தை ஐந்தாம் பத்திநாதர் அவர்கள், அன்னை மரிதாயை வெற்றியின் அன்னை எனவும், அக்டோபர் 7ம் தேதி செபமாலை அன்னை விழா எனவும் அறிவித்தார்.
அன்னை மரிதாய் தம் மகன் இயேசுவிடம், நம் எல்லாருக்காகவும் எப்போதும் பரிந்து பேசி வருகிறார். வெற்றியின் அன்னை மரிதாயை நம்பிக்கையுடன் நாமும் நாடுவோம்.