மோட்சத்தை அடைய நாம் செய்ய வேண்டியவை!

1. மோட்சத்தின் மேல் ஆசை கொள்ள வேண்டும். அந்த ஆசை நம்மிடம் எப்படி விளையும்? மோட்ச பாக்கியத்தை அடிக்கடி நினைக்கிற நினைவின் மூலம்தான். அர்ச். பிரான்சிஸ் அசிசியார் இதைக் குறித்து: "என்ன நோய், என்ன தீமை எனக்கு வந்தபோதிலும், அதை மிகுந்த சந்தோஷத்தோடு நான் அங்கீகரித்துக் கொள்கிறேன். ஏனெனில், அதன் மூலமாக அளவற்ற மகிமையும், பாக்கியமும், மோட்சத்தில் எனக்குக் கிடைக்கும் என்று எனக்குத் தெரியும்" என்றார். அவரைப் போல் அடிக்கடி மோட்சத்தை நினைப்போமாகில், அவரைப் போல சோதனையில் தைரியமாயிருப்போம்.

2. மோட்சத்தை அடைவதற்கு சரீர ரீதியான கெட்ட ஆசைகளை அடக்க வேண்டும். மோட்சம் சம்மனசுக்களுடைய வசிப்பிடமாதலால், அவர்களைப் போல நடந்தால்தான் அவர்களுடைய நாட்டில் நுழையத்தகுதிபெறுவோம்.

3. மோட்சத்தைச் சம்பாதித்துக்கொள்ளப் பிரயாசைப்பட வேண்டும். (அதற்காக முயற்சியெடுக்க வேண்டும்.) பலவந்தம் பண்ணுகிறவர்களே அதை அடைவார்களென்று சேசுநாதர் திருவுளம் பற்றுகிறார். எது விஷயத்தில் பலவந்தம் பண்ணுவது? பாவத்தை விலக்குவதிலும், புண்ணியத்தைச் செய்வதிலும், அதாவது கடவுளுக்குப் பிரியமானதைச் செய்து, அவருக்குப் பிரியமில்லாததை விலக்குவதிலும், எப்போதும் ஆத்துமத்தை எதிர்த்து நிற்கும் சுய நேசத்தைப் பலவந்தம் பண்ணி, அதை அடக்கி ஒடுக்க வேண்டும்.

4. மோட்சத்தைச் சம்பாதிக்கும் முயற்சியில் நாம் சோர்வுறாமல் இருக்கப் பிரயாசைப்பட வேண்டும். சில நாட்கள் அல்லது சில மாதங்கள் அல்லது சில வருடங்கள் சுயத்தை எதிர்த்துப் போராடுவது போதாது. சாகும் வரையில் நம்மையே நாம் அடக்கியாள வேண்டும். அதாவது. எந்த ஒரு குறிப்பிட்ட வயது வரையிலும் அல்ல, மாறாக, கடவுள் நம்மை இவ்வுலகத்தினின்று அழைக்கும் நாள் வரைக்கும் நாம் நம் ஆத்தும எதிரிகளோடு செய்யும் போராட்டத்தில் சற்றும் சோர்ந்து போகாதிருக்க வேண்டும்.

5. மோட்சத்தை அடையத்தக்கதாய் அர்ச்சியசிஷ்டவர்கள் செய்த புண்ணியங்களையும், அவர்கள் எடுத்த முயற்சிகளையும் அடிக்கடி நினைப்பது மிக நல்லது. அப்போதுதான் அவர்களைக் கண்டுபாவிக்க (பின்பற்றி நடக்கி) தைரியம் கொள்வோம்.

6. இவ்வுலகப் பொருட்களையும், சுகங்களையும் வீண் என்று நிச்சயிப்பது. மோட்சத்தைச் சம்பாதிக்கப் பெரிய உதவியாக இருக்கும். உள்ளபடி, உலக நன்மைகளை எத்தனை நாள் அனுபவிப்போம்? கொஞ்ச நாள்தான். நோயோ, வீட்டில், அலுவலகத்தில் பிரச்சினையோ, இவையெல்லாம் இன்னும் சிறிது காலம் தான்! நித்தியப் பேரின்பத்தை எப்போதும் சிந்திக்கும்போது, இவற்றின் பாரத்தை நாம் உணர மாட்டோம்.

7. இவ்வுலக நன்மைகளைச் சாகிற நேரம் வரை அனுபவிப்பதால் என்ன பிரயோசனம்? அவை ஒன்றுமில்லாமையே. நாம் நூறு வயது வாழ்ந்தாலும், நித்தியமாகிய கடலுக்கு முன் அது ஒரு துளி மட்டுமே! ஆதலால் இவ்வுலகப் பொருட்களையும், இடங்களையும், இவ்வுலக மகிமைகளையும் பற்றி நித்தியப் பேரின்ப வாழ்வைப் போக்கடிப்பது மகா பெரிய பைத்தியம் என்று அடிக்கடி யோசித்துப் பார்த்து நம்மையே மாற்றிக் கொள்வோமாக!