ஜெபமாலையின் மகிமைகள்

18 ஆம் நூற்றாண்டு இறுதியில் நமது தேவதாயின் செபமாலை பக்தியானது, இத்தாலியின் பொம்பெய் நகரை சாத்தானின் பிடியிலிருந்து மனமாற்றம் செய்தது.  

பார்டோலோ  லோங்கோ, 1841 ஆம் வருடம் தெய்வபயம் மிகுந்த கத்தோலிக்க குடும்பத்தில் பிறந்தார். அவர் வளர்ந்த பின் சட்டம் படிக்க விருப்பப்பட்டு நேபிள்ஸ் நகர் வந்தார். அச்சமயத்தில் நேபிள்ஸ் நகரானது பிற சமய வழிபாடு மற்றும் தீய நெறிகள் மிகுந்து சாத்தானின் பிடியில் மிகக்கடுமையான ஆன்மிக நெருக்கடியில் சிக்கி தவித்தது. 

பார்டோலோவும் விதி விலக்கின்றி சாத்தானின் பிடியில் சிக்கி தனது குடும்பத்தினரின் மனவருத்தம் மற்றும் எதிர்ப்பையும் மீறி தப்பறைகளை போதிக்கலானார்.  இவரது குடும்பத்தினர் இவரின் மனமாற்றத்திற்காக முடிந்த அளவு முயற்சி செய்தனர்.

சாத்தானின் தப்பறைகள் இவரது எண்ணங்களை அலைக்கழித்துக்கொண்டிருந்த போது, அவரது குடும்பத்தினர் அவரை ஒரு நல்ல பாவசங்கீர்தனம் செய்ய சொல்லி அவரை ஏற்றுக்கொள்ள செய்தனர். 

ஆல்பர்டோ ராடென்ட், ஒரு புனித டொமினிக்கன் சபை குருவானவர், அவருக்கு வழிகாட்டி மீண்டும் கத்தோலிக்க நம்பிக்கையை, செபமாலை பக்தியை அவருள் விதைத்தார். 

பார்டோலோ அற்புதமாக மனமாற்றம் அடைந்து,  1870 ல் டொமினிக்கன் சபையின் மூன்றாம் நிலை பணியாளராகி, அவர் கடவுளுக்கு எதிராக தான் புரிந்த பாவங்களுக்கு பரிகாரமாக எளிமையான தவ வாழ்க்கையில் ஈடுபடலானார்.  

ஒருநாள் அவர்,  தான் கடவுளுக்கு எதிராக புரிந்த பாவங்களுக்கு கடவுளிடம்  இருந்து  தனக்கு மன்னிப்பு கிடைக்காது என்று மன வேதனைக்கு உள்ளாகினர். அக்கணத்தில் அவருக்கு நமது கன்னி மாமரித்தாயின் வாக்குறுதியான "செபமாலை பக்தியை பரப்பும் அன்பர்களுக்கு, அவர்களின் அனைத்து தேவைகளிலும் நான் உதவி புரிவேன் என்று உறுதியளிக்கிறேன்" என்பது தெய்வீகமாக உணர்த்தப்பட்டது.

பொம்பெய் நகரில் இடிபாடுகளுடன் இருந்த சிற்றாலயத்தை புதுப்பித்து, கேட்கும் அனைவருக்கும் செபமாலையின் மகிமையை எடுத்துரைக்கலானார். துண்டுப்பிரசுரங்கள் அடித்து மக்களுக்கு இந்த சக்தி வாய்ந்த செபமாலை பக்தியை எடுத்துரைத்தார்.

இச்சிற்றாலாயத்தில் தொங்க விடுவதற்கு நமது செபமாலை அன்னையின் படத்திற்காக தேடி அலைந்தார். கடைசியாக அவருக்கு ஒரு கன்னியர் மடத்தின் வழியாக செல்லரித்த ஒரு பழைய செபமாலை அன்னையின் படம் கிடைத்தது. அரைகுறை மனதுடன் அதனை அவர் சிற்றாலாயத்தில் மக்களின் வணக்கத்திற்காக வைத்தார்.

பார்டோலோ வின் செபமாலை வளர்ச்சிப்  பணி விரிவடையும்போது, சிற்றாலயத்தின் பக்தர்கள் கூட்டமும் நமது பொம்பெய் அன்னையின் அதிசயங்களால் விரிவடைந்தது. மன மாற்றங்களும், நோயிலிருந்து விடுதலையும் நமது பொம்பெய் அன்னையின் செபமாலை பக்தி வழியாக அதிகரித்தது. மக்கள் தமக்கு உதவும் நமது பொம்பெய் அன்னையை மகிமைப்படுத்தும் விதமாக  மிகப்பெரிய ஆலயம் எடுப்பதென்று உறுதி பூண்டனர். 

1894-ல் பார்டோலோவும், அவரது மனைவியும் கோவிலின் பராமரிப்பினை வாடிகனுக்கு அர்பணித்தனர்.  கன்னியர் மடத்திலிருந்து பெறப்பட்ட மூல படமானது கடைசியாக 1965 ல்  புதுப்பிக்கப்பட்டு, பொம்பெய் மக்கள் அளித்த மணிமகுடங்கள் அன்னைக்கும்,  குழந்தை இயேசுவுக்கும் பாப்பரசர் ஆறாம் சின்னப்பரால் அணிவிக்கப்பட்டது.  

அக்டோபர் 26 , 1980 அன்று, நமது பாப்பரசர் இரண்டாம் ஜான் பவுல்,   போர்டோலோ லோங்கோ அவர்களை திருநிலைப்படுத்தி "கன்னிமாமரியின் சேவகன்" என்றும் " செபமாலையின் திருத்தூதன்" என்று அழைத்தார். 

அன்பு சகோதர, சகோதரிகளே  இறுதிகாலம் நெருங்கிவிட்டது விண்ணரசு மிக அருகில் தம் அனைத்து பிள்ளைகளையும் மோட்சத்திற்க்கு கொண்டு செல்லவே நம் மாமரிதாய் கண்ணீர் விட்டு அழுகிறார்கள் அவர்கள் உதவி இல்லையென்றால் நாம் ஒருவர் கூட விண்ணரசில் நுழைவது மிக கடினம்  

தினமும் செபமாலை செபித்து ஆன்மாக்களை காப்பாற்ற, நமது மாமரித்தாயின் விண்ணக உதவியை  பெற்றுக்கொள்வோமாக!!!!

இயேசுவுக்கே புகழ் ! மாமரிதாயே வாழ்க