புனித யோபுவைப்போலும், புனித தொபியாசைப்போலும் நாம் பொறுமையோடும், நம்பிக்கையோடும் கடவுள் மேல் தளரா விசுவாசத்தோடும் வாழ்கிறோமா இந்த சூழலில் ?

தொபியாசு ஆகமத்திலிருந்து வாசகம்...

" அரசனுக்கு அஞ்சுவதை விடத் தொபியாசு கடவுளுக்கே அதிகம் அஞ்சி வந்தார். ஆதலால், கொலை செய்யப்பட்டவர்களின் உடல்களைத் தூக்கி வந்து தம் வீட்டிலேயே ஒளித்து வைத்து, நள்ளிரவில் அவற்றை அடக்கம் செய்து வந்தார்.

அன்றொரு நாள் நிகழ்ந்ததாவது:

அவர் அன்று அடக்கம் செய்த களைப்பில், தம் வீட்டிற்குத் திரும்பி வந்து, அங்கே சுவரோரமாய்க் கீழே படுத்துத் தூங்கிக் கொண்டிருந்தார்.

அப்பொழுது தூக்கணாங்குருவிக் கூண்டிலிருந்து சூடான எச்சம் தூங்கிக் கொண்டிருந்த அவர் கண்களில் விழ, அவை குருடாயின.

புனித யோபின் பொறுமையைப் போல், இவரது பொறுமையும் இவருடைய சந்ததியாருக்கு எடுத்துக் காட்டாய் இருக்கும் பொருட்டே, இச்சோதனை இவருக்கு நேரிடக் கடவுள் திருவுளமானார்.

இவர் இளமை முதல் எப்போழுதும் கடவுளுக்கு அஞ்சி, அவர் கட்டளைகளைக் கடைப்பிடித்து வந்திருந்தபடியால், பார்வையிழந்த இந்த அவல நிலையிலும், அதுப்பற்றிக் கடவுளுக்கு எதிராய் அவர் முறையிடவில்லை.

அதற்கு மாறாக, அவர் தெய்வ பயத்தில் நிலையாய் நின்று தம் வாழ்நாள் முழுவதும் கடவுளுக்கு நன்றி கூறி வந்தார்.

ஏனெனில், புனித யோபை மன்னர்கள் பழித்தது போல், இவருடைய உற்றார் உறவினரும் இவரது நடத்தையை இகழ்ந்து பேசினார்கள்.

நீர் எதை நம்பித் தர்மம் கொடுத்தும், இறந்தோரை அடக்கம் செய்தும் வந்தீரோ, அந்த உமது நம்பிக்கை வீண்போயிற்று அன்றோ?" என்று அவரைப் பழித்து வந்தார்கள்.

தொபியாசோ அவர்களைக் கடிந்து,

"நீங்கள் இவ்வாறு பேசாதீர்கள். ஏனெனில், நாம் புனிதர்களின் மக்கள்.

கடவுள் மேல் என்றுமே தளரா விசுவாசம் கொண்டிருப்போருக்கு அவர் அளிக்கவிருக்கும் மறுவுலக வாழ்வை எதிர்பார்ப்போர் நாம்" என்பார். தொபியாசு 2 : 9-18

சிந்தனை : புனித தொபியாசு மற்றும் புனித யோபுவின் பொறுமையை நாமும் கடைப்பிடிக்க தயாரா?

இயேசுவுக்கே புகழ்! மரியாயே வாழ்க!