செபமாலை ஒரு அரசனை நரக நெருப்பில் இருந்து காப்பாற்றியது!

புனித லூயிஸ் தே மோன்ட்போர்ட் எழுதிய செபமாலையின் இரகசியங்கள் என்ற புத்தகத்தில் இருந்து. 

நமது அன்னை அவர்களது செபமாலை பக்தியை பரப்பும் குழந்தைகளை ஆசிர்வதிப்பது மட்டுமன்றி, பிறருக்கு  முன்மாதிரியாய் விளங்கும் அவர்களுக்கு மிகுதியாக  வெகுமதிகளை அள்ளிக்கொடுக்கிறார்.

அல்போன்சுஸ், லியோன் மற்றும் கலிசியாவின்(ஸ்பெயினின் தற்போதைய வடமேற்கு பகுதி) அரசன், தனது பணியாளர்கள் அனைவரும் செபமாலை செபித்து கன்னி மாமரியை போற்ற வேண்டும் என்று விரும்பினான். அதற்காக எப்பொழுதும் தனது இடுப்புக்கச்சையில் பெரிய செபமாலையை அணிந்திருந்தான்.

 ஆனால் அவன் ஒருநாளும் செபமாலை செபித்தது இல்லை. எனினும் இவன் செபமாலை உடுத்தி இருந்தது அவனது அரசவையினரை, பய பக்தியுடன் செபமாலை  செபிப்பதற்கு ஊக்குவித்தது.  

ஒருநாள் அரசன் கடுமையாக நோய்வாய்ப்பட்டு சாவுக்கு கையளிக்கப் படுகையில் ஒரு காட்சியைக் கண்டான். அக்காட்சியானது,  கடவுளின் நீதி இருக்கை முன்னால் அவன் நிற்க வைக்கப்பட்டு,  பிசாசுகள் அவன் புரிந்த  பாவங்களை எடுத்துச் சொல்லி குற்றம் சாட்டுகின்றன. அவற்றை கேட்டு  நேர்மையான நீதிபதியாக  நமது இறைவன் அவனை எரியும் நரக நெருப்பிற்காக தீர்ப்பிடப் போகும் வேளையில், நமது அன்னை தோன்றி அவனுக்காக பரிந்து பேசுகிறார். 

நமது அன்னை இரு தராசுகளைக் கொண்டு வரச்செய்து ஒருபுறம் அவனது பாவங்களையும் மறுபுறம் அவன் இடுப்பில் அணிந்திருந்த செபமாலையும், அவனது முன்மாதிரியால் சொல்லப்பட்ட செபமாலைகளையும்  வைத்தார்கள். செபமாலைகளின் தராசானது பாவங்களின் தராசை விட கனமாக இருந்தது.   

நமது அன்னை மிகவும் இரக்கத்துடன் அவனை நோக்கி கூறியதாவது 

"நீ எனது செபமாலையை அணிந்து எனக்குச் செய்த இச்சிறிய மகிமைக்கு பரிசாக, நான் எனது மகனிடம் பரிந்து பேசி இந்த மிகப்பெரிய இரக்கத்தை பெற்றுத்தந்துள்ளேன். இன்னும் சில வருடங்களுக்கு, உனது வாழ்வு உனக்கு திருப்பித் தரப்பட்டுள்ளது. அதனை நீ விவேகமுடன் பயன்படுத்தி உனது பாவங்களுக்காக பரிகாரம் செய் "   

அரசன் தனது சுயநிலை அடைந்தவுடன் அழுதுகொண்டே கூறியதாவது  " அதி தூய கன்னி மாமரிதாயின் செபமாலையானது போற்றப்பெறுவதாக, அதன் மூலம் நான் நரகத்தீர்ப்பிலிருந்து காப்பாற்றப்பட்டேன்".

அதன் பின்னர் அவன் குணமடைந்த பின்பு, எஞ்சியுள்ள வாழ்நாள் முழுவதும் பரிசுத்த செபமாலை பக்தியை பரப்பி, தினமும் உண்மையுடன் செபமாலை செபித்து வாழ்ந்தான். 

நமது அன்னை பரிசுத்த கன்னி மாமரிதாயை பின்பற்றும் மக்கள், அரசர்  அல்போன்சுஸ் மற்றும் செபமாலை புனிதர்களின் வாழ்வை முன்மாதிரியாக எடுத்துக்கொண்டு, அவர்களும் பிற ஆன்மாக்களை வெற்றி பெற்று  பரிசுத்த செபமாலை இயக்கத்திற்குள் கொண்டு வருவார்களாக. அதனால் அவர்கள் இவ்வுலக வாழ்விலும், நித்திய வாழ்விலும் அபரிமிதமான இரக்கத்தை பெறுவார்கள். 

நாமும் தினமும் செபமாலை வாழ்வு வாழ்ந்து பிறருக்கு முன்மாதிரியாய் வாழ்ந்து நமது பரிசுத்த கன்னி மாமரிதாயின் அபரிமிதமான அருள்வரங்களை  பெறுவோமாக!!!!!