"கிறிஸ்தவர்களின் சகாய அன்னை" (Our Lady Help of Christians) என்பது, ரோமன் கத்தோலிக்க திருச்சபையில் கொண்டாடப்படும் அன்னை மரியாளின் பக்தியாகும். இத்திருவிழா, மே மாதம், 24ம் நாளன்று, கொண்டாடப்படும் ஒரு திருவிழா ஆகும்.
கி.பி. 345ம் ஆண்டில், அன்னை கன்னி மரியாளுக்கான பக்தியாக இந்த மரியான் பட்டத்தை முதன்முதலில் பயன்படுத்தியவர் புனிதர் ஜான் கிறிஸோஸ்டம் (Saint John Chrysostom) ஆவார். இந்த தலைப்பில் மரியான் பக்தியை பரப்புவதில் சிறப்பான பங்காற்றியவர், புனிதர் டான் போஸ்கோ (St. Don Bosco) ஆவார். "கிறிஸ்தவர்களின் சகாய அன்னை" (Our Lady Help of Christians) என்ற தலைப்பு, கிறிஸ்தவ ஐரோப்பா (லத்தீன் மற்றும் கிரேக்கம்), ஆப்பிரிக்காவின் வடக்கு மற்றும் மத்திய கிழக்கு ஆகியவற்றை, இடைக்காலத்தில் கிறிஸ்தவமல்லாத பிற இன மக்களிடமிருந்து பாதுகாப்பதில் தொடர்புடையது ஆகும்.
இஸ்லாமிய ஒட்டோமான் பேரரசின் (Islamic Ottoman Empire) விரிவாக்கத்தின்போது, கிறிஸ்தவ ஐரோப்பாவை அவர்கள் ஆக்கிரமிக்கும் வேளையில், திருத்தந்தை ஐந்தாம் பயஸ், (Pope Pius V) கிறிஸ்தவப் படையினரை உதவிக்கு அழைத்தார். ஐரோப்பா முழுவதிலும் உள்ள கத்தோலிக்கர்கள் ஜெபமாலை ஜெபித்தபோது கிறிஸ்தவமண்டலம் முழுவதும் கிறிஸ்தவர்களின் சகாய அன்னை மரியாளின் உதவியால் காப்பாற்றப்பட்டது. கி.பி. 1571ம் ஆண்டு, அக்டோபர் மாதம், 7ம் தேதி, லெபாண்டோவின் பெரும் போர் (Great Battle of Lepanto) நிகழ்ந்தது.
மேலும், இப்போரின் வெற்றியின் விளைவு, இந்த தலைப்பின் கீழே, மரியாளின் பரிந்துரையே காரணம் என நம்பப்படுகிறது. இறுதியில், இஸ்லாமியம் மீது கிறிஸ்தவத்தின் தீர்க்கமான வெற்றிக்கு நன்றி செலுத்துவதற்காக கி.பி. 1903ம் ஆண்டு, மே மாதம், 17ம் நாளன்று, திருத்தந்தை பதின்மூன்றாம் லியோ (Pope Leo XIII) இவ்விழாவினை ஏற்படுத்தி, மரியன்னையின் திருவுருவத்திற்கு "கிறிஸ்தவர்களின் சகாய அன்னை" எனும் பெயர் பொறிக்கப்பட்ட பட்டத்தினை முடிசூட்டினார். இது, தற்போது "கிறிஸ்தவர்களின் சகாய அன்னை பேராலயத்தில்" (Basilica of Mary Help of Christians) நிரந்தரமாக பொறிக்கப்பட்டுள்ளது.
புனிதர் ஜான் போஸ்கோவும், கிறிஸ்தவர்களின் சகாய அன்னையும்:
புனிதர் ஜான் போஸ்கோ, ஒரு சக்தி வாய்ந்த கத்தோலிக்க குரு ஆவார். இவர், கி.பி. பத்தொன்பதாம் நூற்றாண்டில் இத்தாலி நாட்டில், தமது சலேசியன் சபையை (Salesian Order) நிறுவினார். அவரது பல தீர்க்கதரிசன கனவுகள், ஒன்பது வயதில் தொடங்கி, அவருடைய ஊழியத்திற்கு வழிகாட்டின. எதிர்கால நிகழ்வுகள் பற்றிய நுண்ணறிவுகளையும் அளித்தன.
கி.பி. 1862ம் ஆண்டு, மே மாதம், 14ம் நாளன்று, திருச்சபையானது, பிந்தைய நாட்களில் எதிர்கொள்ளவிருக்கும் போர்களைப் பற்றி ஜான் போஸ்கோ கனவு கண்டார். அந்த காலத்தைய திருத்தந்தை, இரண்டு தூண்களுக்கு இடையில் திருச்சபையின் 'கப்பலை' நங்கூரமிடுவதாகவும் கனவு கண்டார். ஒன்று தூண், கிறிஸ்தவர்களின் சகாய அன்னையின் சொரூபம் என்றும், மற்றொன்று பெரியதொரு நற்கருணை என்றும் அவருக்கு காட்சியளித்தது.
ஜான் போஸ்கோ, தமது சலேசிய சபையினைப் பற்றி எழுதுகையில், "நற்கருணை பக்தியை பரப்புவதும், கிறிஸ்தவர்களின் சகாய அன்னையின் பக்தியை பரப்புவதுமே இச்சபையின் பிரதான நோக்கமாகும்" என்று எழுதினார். மேலும், "'கிறிஸ்தவர்களின் சகாய அன்னை' எனும் இத்தலைப்பானது, ஆகஸ்ட் விண்ணரசியை மிகவும் மகிழ்விக்கும்" என்று எழுதினர்.