ஜெபமாலையின் மகிமைகள்

தனித்த ஆளோ, குடும்பங்களோ  , தேசங்களோ , செபமாலை வழியாய்ப் பேய்கள் மேலும் , தங்கள் எதிரிகள் மேலும் கொண்ட வெற்றிகளுக்குக் கணக்கில்லை . போர் முனையில் செபமாலையினால் பெற்ற வெற்றிகளில் எல்லாம் முதன்மையானது லெப்பாந்தொ என்னும் கப்பல் சண்டையில் கிறிஸ்தவர்கள் கொண்ட ஜெயமாம் 

துருக்கியர்கள் கப்பல் படையில் மகா வலிமை பெற்றிருந்த காலம் . மத்தியதரைக்கடலில் தங்கள் கப்பல் படையை நிறுத்தி கிறிஸ்தவ ஐரோப்பா முழுவதும் நாசமாக்க நினைத்திருந்தனர் . இக்கலக நேரத்தில் அர்ச் 5 ஆம் பத்திநாதர் அவர்களை எதிர்க்க ஓர் ஐக்கிய அணியை உருவாக்கினார் . வெனிஸ் , ஜெனீவா , ஸ்பானியா இராச்சியங்களின் கப்பற் படைகள் ஒன்றாய்ச் சேர்ந்தன . அவைகளை ஆஸ்திரியா நாட்டு தொன்ஜான் தலைமை தாங்கி நடத்தினார் 

1569 ஆம் ஆண்டு செப்டம்பர் 17 ஆம் தேதி அர்ச் 5 ஆம் பத்திநாதர் சுற்றறிக்கை அனுப்பி கிறிஸ்துவ சேனையின் வெற்றிக்காக எல்லாக் கிறிஸ்தவர்களும் செபமாலை சொல்லி வேண்டும்படிக் கேட்டுக் கொண்டார் . எல்லா ஆலயங்களிலும் நாற்பது மணி நேர ஆராதனை , செபமாலையின் பேரால் சுற்றுப்பிரகாரங்கள் நடத்தவும் , செபமாலை சொல்லவும் கற்பித்தார் . அக்டோபர் ஏழாம் தேதிக்கு முந்தின இரவு முழுவதும் பாப்பாண்டவர் செபத்தில் ஊன்றி நின்றார் 

லெப்பாந்தொ என்ற இடத்தில் யுத்தத்திற்கு அணிவகுத்தவுடன் எல்லா மாலுமிகளும் செபமாலை செய்து ஒப்புக்கொடுத்தனர் . அதன்பின் அப்போஸ்தலிக் தானாதிபதி அப்போஸ்தலிக் ஆசீர்வாதம் அவர்களுக்களித்தார் . அறுபத்து ஐந்தாயிரம் மக்கள் காலைப் பூசையில் தேவ நற்கருணை அருந்தி , மூன்று மணி நேரமாகச் செபமாலை செய்தனர் . போர் தொடங்கியது . துவக்கத்தில் கிறிஸ்தவர்களுக்கு எதிராகக் காற்று வீசியது . ஆனால் அது திடீரென நின்று விட்டது . மாலை வெகு நேரம் வரை போர் மும்முரமாக நடந்தது . துருக்கியர்கள் பின்னடைந்து ஓடினர் . இந்த வெற்றியால் கிறிஸ்தவர்கள் துருக்கியரது கப்பல் படையின் முதுகெலும்பை நொறுக்கி விட்டனர் எனலாம். அதற்குப் பின் அவர்கள் கடற்போரில் தலை தூக்கவில்லை . மத்திய தரைக்கடலில் அவர்களது கொட்டம் அடங்கியது 

முதல் துவக்கத்திலிருந்தே தொன்ஜான் செபமாலையினால் தான் வெற்றி ஏற்பட்டது என்றார் . வெனிஸ் மந்திர ஆலோசனை சபையும் மற்ற நாடுகளுக்கு இந்த வெற்றியை அறிவித்தபோது , தள கர்த்தர்கள் அல்ல ,மாலுமிகளின் படையல்ல வெற்றிக்குக் காரணம் . வெற்றியைக் கொடுத்தது செபமாலை மாதா தான் என்றனர் . 

செபமாலை இராக்கினி கொடுத்த இந்த வெற்றிக்கு நன்றியறிதலாகத்தான் தேவமாதாப் பிரார்த்தனையில் செபமாலை இராக்கினியே என்று அழைத்தார்கள். இவ்வெற்றியின் நினைவாக அக்டோபர் 7 ஆம் நாள் செபமாலை மாதாவின்  திருநாளாகக்  கொண்டாடுகிறோம்

அம்மா எங்கள் ஆண்டவளே ஜெபமாலை இராக்கினியே  உலகில் எங்களுக்கு எதிராக உள்ள தீய சக்திகளை ஜெபமாலை என்னும் ஆயுதத்தில் வீழ்த்தி காக்கும் மாமரித்தாயே உம் பிள்ளைகள் எங்களை தயவோடு நினைத்தருளும்  .....ஆமேன்

இயேசுவுக்கே புகழ் ! மாமரித்தாயே வாழ்க