தவக்கால சிந்தனைகள் 8 : கடைசி இராவுணவு... பார்த்திராத பக்கங்கள்.. கடவுள் மனிதனின் காவியத்திலிருந்து...

( இந்த பகுதியை நீங்கள் முழுவதுமாக படித்தால் உங்கள் கண்களில் கண்ணீர் வருவது உறுதி..)

பாஸ்காவிற்கு முந்திய வியாழக்கிழமை மாலை. சேசு இராப்போஜன சாலைக்கு வருதலும் தம் தாயிடம் விடைபெறுதலும்.

மரிய வால்டோர்டா பேசுகிறாள்...

பாஸ்கா உணவு உட்கொள்ளப்பட வேண்டி இராப் போஜன அறையை நான் காண்கிறேன். அதைத் தெளிவாக என்னால் காண முடிகிறது. சுவர்களில் காணப்படும் கரடு முரடான இடங்களையும் தரையின் கீறல்களையும் எண்ணிச் சொல்ல என்னால் கூடும்.

அது சம சதுரமல்லாத ஒரு பெரிய அறை; சற்று நீண்ட சதுரமானது. அதன் நீண்ட பக்கத்திற்கும், குறுகிய பக்கத்திற்கும் உள்ள வித்தியாசம், அதிக பட்சம் ஒரு மீட்டர் அல்லது சற்றுக் கூடுதலாக இருக்கும். தாழ்ந்த மேற்கூரை. ஒருவேளை அது அப்படித் தோன்றுவதாயிருக்கலாம். ஏனென்றால் அவ்வறையின் உயரம் அதன் அளவோடு பொருந்தவில்லை. கூரை சற்று வளைவாக உள்ளது. அதாவது, அறையின் இரு குட்டைச் சுவர்களும், கூரை வந்து பொருந்துமிடத்தில் செங்கோணமாயில்லை. வட்டமாக உள்ளது.

இக்குட்டைச் சுவர்களில் இரண்டு தாழ்வான பெரிய ஜன்னல்கள் எதிர் எதிராயிருக்கின்றன. ஜன்னல்களின் அடைப்புகள் மூடியிருப்பதால் ஜன்னல்களுக்கு வெளியே முற்றம் உள்ளதா, வீதி உள்ளதா என்று என்னால் காணக் கூடவில்லை. ஜன்னல் அடைப்புகள் என்றேன். அது சரியான வார்த்தைதானா என்று தெரியவில்லை. அவை பலகை அட்டைகளால் செய்யப்பட்ட ஜன்னல் மூடிகள். அவற்றின் குறுக்காக இரும்பு அடிதண்டாக்களால் அவை உறுதியாக்கப் பட்டுள்ளன.

தரையில், சுட்ட மண்ணால் செய்யப்பட்ட சதுரக்கற்கள் பரவப்பட்டிருக்கின்றன. பழமையால் நிறம் விட்டுப் போயிருக்கின்றன. பல கிளைகளுள்ள ஒரு எண்ணெய் விளக்கு கூரையின் மத்தியிலிருந்து தொங்குகிறது.

ஒரு புற நீளச் சுவரில் எந்தத் திறப்பும் இல்லை. மற்ற நீளச் சுவரின் ஒரு ஓரத்தில் ஒரு சிறு கதவு உள்ளது. அதற்கு ஆறு படிகள் உள்ள படிக்கட்டு, கைப்பிடிக்கம்பி எதுவும் இல்லாமல் உள்ளது. அதன் மேல்படி ஒரு சதுர மீட்டர் அளவான தளத்தில் முடிகிறது. அந்தத் தளத்தில், சுவரையொட்டி இன்னொரு படி உள்ளது. அதன் மேல் கதவு உள்ளது. தெளிவாகச் சொல்கிறேனோ, என்னவோ.

சுவர்கள் அலங்காரம் எதுவுமில்லாமல் வெள்ளையடிக்கப் பட்டிருக்கின்றன. வரம்புக் கோடுகள் தீட்டப்படவில்லை. அவ்வறையின் மத்தியில் ஒரு நீண்ட சதுர மேசை கிடக்கிறது. அதன் அகலத்துடன் ஒப்பிடும்போது, அது மிக நீளமானது. நீண்ட சுவர்களுக்கு இணை கோடாக அது போடப்பட்டுள்ளது. அது சாதாரண மரத்தால் செய்யப்பட்டிருக்கிறது. நீளமான சுவர்களின் ஓரங்களில் சில இருக்கைகள் உள்ளன. குட்டையான சுவர் ஒன்றின் ஜன்னலுக்கடியில் ஒரு அலமாரியும், சில பெரிய அகன்ற வட்டப் பாத்திரங்களும், ஒரு ஜாடியும் வைக்கப்பட்டுள்ளன. மற்ற ஜன்னலின் கீழ் ஒரு நீண்ட பலகை காணப்படுகிறது. தற்போது அதில் எதுவும் இல்லை.

பாஸ்கா விருந்து உட்கொள்ளப்படவிருக்கும் அறையைப் பற்றிய விவரிப்பு இதுதான். நாள் முழுவதும் அதை நான் பார்த்தேன். படிகளை எண்ணவும் எல்லா விவரங்களையும் என்னால் கவனிக்கவும் முடிந்தது. இப்பொழுது மாலை இருள் பரவுவதால் என் சேசு என்னை மீதமுள்ள தியானக் காட்சிகளுக்குக் கொண்டு செல்கிறார்.

ஆறு படிகள் உள்ள படிக்கட்டு ஒரு இருட்டான முன்கூடத் திற்குச் செல்கிறது. நான் இருப்பதை வைத்துப் பார்த்தால் எனது இடது பக்கமாக அது உள்ளது. அங்கே தெருவைப் பார்க்கத் திறக்கும் ஒரு கதவு காணப்படுகிறது. அந்தக் கதவு அகலமாயும் தாழ்ந்தும் உலோகப்பட்டைகளாலும் மொட்டு ஆணிகளாலும் மிக உறுதியாக்கப்பட்டிருக்கிறது. இந்த முன்கூடத்துக்கு வருகிற கதவுக்கு நேர் எதிராக இன்னொரு சிறு கதவு, அடுத்த ஒரு அறைக்கு வழி திறக்கிறது. அது சிறிய அறை.

அவ்வீட்டின் மற்ற அறைகளுக்கும் தெருவின் நில மட்டத்திற்கும் உள்ள உயர வித்தியாசத்தினால் இராப்போஜன சாலையின் அமைப்பு இப்படி உள்ளது என்று எனக்குத் தோன்றுகிறது; அசனசாலை ஒரு அடித்தளம் போலும், ஒரு நிலவறையைச் சுத்தம் செய்து திருத்தியமைக்கப்பட்டது போலும் தெரிகிறது. அது நிலத்துக்கடியில் தாராளமாக ஒரு மீட்டர் புதைந்து காணப்படுகிறது. அதன் விஸ்தீரணத்திற்கு ஏற்ப அதை உயர்த்தி அமைப்பதற்காக அப்படிச் செய்திருக்கக்கூடும்.

நான் இப்பொழுது காண்கிற அறையில் மாதா மற்ற ஸ்திரீகளுடன் இருக்கிறார்கள். மரிய மதலேனையும், யாகப்பர், யூதா, சீமோன் ஆகியோரின் தாயையும் அடையாளம் காண்கிறேன். அவர்களை அருளப்பர் இப்பொழுதுதான் கூட்டி வந்திருப்பதாகத் தெரிகிறது. காரணம் அவர்கள் தங்கள் மேல் வஸ்திரங்களைக் கழற்றி மடித்து அங்குமிங்கும் கிடக்கிற இருக்கைகள் மேல் வைக்கிறார்கள். அவர்கள் வெளியே புறப்பட்டுச் செல்கிற அருளப்பருக்கு விடை கொடுக்கிறார்கள். அவர்கள் வந்து சேர்ந்ததும் அங்கே ஒரு மனிதனும், ஸ்திரீயும் வேகமாய் வந்து மாதாவுக்கு மரியாதையுடனும், நட்புறவுடனும் நடந்து கொள்கிறார்கள். இதிலிருந்து நான் அவர்கள் தான் இவ்வீட்டின் சொந்தக்காரர்கள் என்றும் நசரேயன் மேல் அனுதாபமுள்ளவர்கள் என்றும் யூகிக்கிறேன். மாதா ஒரு ஆழ்ந்த நீல நிற உடையணிந்திருக்கிறார்கள். ஊதா கலந்த நீலம். தலையில் ஒரு வெண் முக்காடு உள்ளது. அது, அவர்களின் தலையையும் சேர்த்து மூடியிருந்த மேல் வஸ்திரத்தை அகற்றிய போது காணப்படுகிறது. வயதானவர்களைப் போலும், களைப்புற்றவர்களைப் போலும் மாதா தோற்றமளிக்கிறார்கள். அவர்கள் மிகத் துயரமாயிருக்கிறார்கள். ஆயினும் அன்போடு புன்னகை செய்கிறார்கள். மிக வெளிறிப்போயிருக்கிறார்கள். சிந்தனை வசப்பட்டவர்களிடம் உள்ளது போல் அவர்களின் அசைவுகள் தயக்கத்துடனும் களைத்தும் காணப்படுகின்றன.

திறந்து வைக்கப்பட்ட கதவின் வழியாக வீட்டெஜமான் வருவதைக் காண்கிறேன். அவர் முன் கூடத்தின் அறைக்கும், இராப்போஜனசாலைக்கும் போகிறார். பெரிய எண்ணெய் விளக்கில் ஏற்றப்படாமலிருந்த திரிகளையெல்லாம் ஏற்றி வைக்கிறார். பின் அவர் தலைவாசலுக்குப் போய் அதைத் திறக்கவும், சேசு அப்போஸ்தலர்களுடன் உள்ளே வருகிறார். இருள் பரவுவதை நான் காண்கிறேன். உயர்ந்த வீடுகளுக்கிடையில் தெருவில் இரவின் நிழல்கள் இறங்குகின்றன.

சேசுவுடன் அனைத்து அப்போஸ்தலர்களும் இருக் கிறார்கள்.

“இவ்வீட்டிற்கு சமாதானம்!” என்று தம் வழக்கமான வந்தனத்தைக் கூறி சேசு வீட்டெஜமானுக்கு முகமன் சொல்கிறார். அப்போஸ்தலர்கள் இராப்போஜன சாலைக்குள் செல்கிறார்கள். சேசு மாதா இருக்கிற அறைக்குப் போகிறார். பக்தியுள்ள ஸ்திரீகள் ஆழ்ந்த மரியாதையுடன் சேசுவுக்கு உபசாரம் சொல்லி, பின் தாயையும், குமாரனையும் சுயாதீனமாய் இருக்க விட்டு வெளியே வந்து கதவைச் சாத்தியபின் போய் விடுகிறார்கள்.

சேசு தம் தாயை அரவணைத்து நெற்றியில் முத்தமிட, மாதா முதலில் தன் குமாரனின் கரத்திலும், பின் வலது கன்னத்திலும் முத்தஞ்செய்கிறார்கள். சேசு மாதாவை அமர வைத்து, தாமும் அருகில் அமருகிறார். இரண்டு இருக்கைகளைப் பக்கத்தில் போட்டு அமர்ந்திருக்கிறார்கள். சேசு மாதாவின் கரத்தைப் பிடித்தபடியே இருக்கைக்குக் கூட்டிச்சென்று அமர வைத்து தாமும் அமர்ந்துள்ளார்.

சேசுவும் சிந்தனையில் ஆழ்ந்தவராய் புன்முறுவல் செய்ய முயன்றாலும், அவர் துயரமாகவேயிருக்கிறார். அவருடைய முகபாவங்களை மாதா கவலையுடன் கணக்கிடுகிறார்கள். இந்நேரம் எப்படிப்பட்டதென்று வரப்பிரசாதத்தாலும், அன்பாலும் புரிந்து கொள்ளும் தாய், பாவம்! வேதனையான துடிப்புகள் அவர்களின் முகத்தில் காணப்படுகின்றன. ஆழ்ந்த துயரத்தில் உள்ளரங்கக் காட்சியால் கண்கள் அகலமடைகின்றன. ஆனால் அவர்கள் அதைக் காட்டிக்கொள்ளாமல் தன் குமாரனைப் போன்றே பெருந் தன்மையுடன் இருக்கிறார்கள்.

சேசு மாதாவிடம் பேசி உபசாரம் கூறி தமக்காக அவர்கள் வேண்டிக்கொள்ளும்படி கேட்கிறார்.

“அம்மா, உங்களிடமிருந்து திடத்தையும், ஆறுதலையும் பெற்றுக்கொள்ள வந்திருக்கிறேன். தன் துயரத்திற்கு தன் தாயின் இருதயமும் தன் திடத்திற்குத் தாயின் அமுதும் தேவைப்படுகிற சிறு குழந்தை போல் நானிருக்கிறேன். இந்நேரத்தில், நெடுநாளைக்கு முன்னாலிருந்த உங்கள் சின்ன சேசுவாக நான் ஆகிவிட்டேன். அம்மா, நான் போதகரல்ல, உங்கள் மகன்தான் - நாசரேத்தில் சிறுவனாயிருந்தது போலவும், என் மறைந்த வாழ்விலிருந்து நாசரேத்தை விட்டுப்பிரிந்து செல்லுமுன் இருந்தது போலவும் இருக்கிறேன். உங்களைத் தவிர எனக்கு வேறு யாருமில்லை. இப்பொழுது மனிதர்கள் உங்கள் சேசுவுக்கு நட்பாகவும், பிரமாணிக்கமாகவும் இல்லை. அவர்கள் நன்மை செய்வதில் தீவிரமாகவுமில்லை. தீயவர்கள்தான் தீமை செய்வதில் திடமாகவும் நிலையாகவும் இருக்கிறார்கள். ஆனால் நீங்கள் எனக்குப் பிரமாணிக்க மானவர்கள். இந்நேரத்தில் நீங்களே என் பலமாக இருக்கிறீர்கள். உங்கள் அன்பினாலும், ஜெபத்தினாலும் என்னைத் தாங்கிக் கொள்ளுங்கள். என்னைக் கூடுதலாகவும், குறைவாகவும் நேசிக்கிறவர்களுள் இந்நேரத்தில் எப்படி ஜெபிக்க வேண்டுமென அறிந்தவர்கள் நீங்கள் மட்டும்தான். ஜெபிப்பதற்கும் கண்டுபிடிப் பதற்கும் அறிந்தவர்கள் நீங்கள். மற்றவர்கள் திருவிழாச் சிறப்புகளில் ஈடுபாடு கொண்டும், மகிழ்ச்சியான நினைவுகளில் ஈடுபட்டும், அல்லது குற்றமுள்ள சிந்தனைகளை நினைத்துக் கொண்டுமிருக்கிறார்கள். நானோ எத்தனையோ காரியங்களில் வேதனைப்பட்டுக் கொண்டிருக்கிறேன். இந்நேரத்திற்குப் பிறகு அநேக காரியங்கள் மடியும். அவற்றுடன் அவர்களுடைய மனிதத் தன்மையும் இறக்கும். அவர்கள் எனக்குத் தகுதிபெற்றவர் களாயிருக்க அவர்கள் அனைவருக்கும் கூடுமாயிருக்கும். இழக்கப் பட்டவனைத் தவிர. எந்த சக்தியும் அவனை மனஸ்தாபத்துக்கும்கூட கொண்டு வர இயலாது. ஆனால் தற்பொழுது அவர்கள் உணர்வில்லாத மனிதர்களாயிருக்கிறார்கள். நான் சாகிறேன் என்பதைக் கண்டுபிடிக்காமலிருக்கிறார்கள். என் வெற்றி முன்னை யெல்லாம்விட சமீபத்திலிருப்பதாக எண்ணி சந்தோஷப்படுகிறார்கள். சில நாட்களுக்கு முன் ஒலித்த ஓசான்னாக்கள் அவர்களை போதையடையச் செய்துள்ளன. அம்மா, இந்நேரத் திற்காகவே நான் வந்துள்ளேன். சுபாவத்திற்கு மேலான முறையில் பார்த்தால் இந்நேரம் வருவது ஒரு மகிழ்ச்சியேயாகும். ஆனால் என்னுடைய சுயமனது இதைக் கண்டு பயப்படவும் செய்கிறது. ஏனென்றால் இந்தப் பாத்திரத்தின் பெயர்:

துரோகம், ஆணையிட்டு மறுதலித்தல், கொடூரம், தேவ தூஷணம், கைவிடப்படல் ஆகியவை. அம்மா, என்னைத் தாங்கிக் கொள்ளுங்கள். உங்களுடைய ஜெபங்களால். உங்கள் மீது தேவனுடைய ஆவியானவரை நீங்கள் இறங்கச் செய்தபோது, அதன் வழியாக மக்களால் எதிர்பார்க்கப் பட்டவரை உலகிற்கு நீங்கள் கொடுத்தது போல், இப்பொழுது நான் செய்ய வந்த கைங்கரியத்தைச் செய்து முடிப்பதற்கு உதவக்கூடிய திடத்தை உங்கள் குமாரன் மேல் இறங்கச் செய்யுங்கள். அம்மா, போய் வருகிறேன்; என்னை ஆசீர்வதியுங்கள். பிதாவின் பெயராலும் என்னை ஆசீர்வதியுங்கள். எல்லாரையும் மன்னியுங்கள். நாம் சேர்ந்து மன்னிப்பளிப்போம். இந்நேர முதல் நம்மை வாதைப்படுத்துகிறவர்களையும் மன்னிப்போம்.”

இப்படிக் கூறுகையில் சேசு தம் தாயின் பாதங்களுக்கடியில் முழங்காலிட்டு, அவர்களை இடுப்பில் கட்டிப்பிடித்து அவர்களை ஏறிட்டுப் பார்க்கிறார்.

மாதா மவுனமாய் அழுது, கடவுளை நோக்கி உள்ளரங்க ஜெபத்தில் தலையை சற்று உயர்த்தியிருக்கிறார்கள். கண்ணீர் வழிந்து அவர்களின் வெளிறிய கன்னங்களில் பாய்ந்து மடியிலும், அவர்களின் நெஞ்சில் தலைசாய்த்திருக்கும் சேசுவின் தலையிலும் விழுகின்றன. பின்பு மாதா சேசுவின் தலைமேல் ஆசீர்வதிக்கிறது போல் கை வைத்து, குனிந்து அவடைய தலைமுடிமேல் முத்தமிட்டு அவருடைய தோள்பட்டையிலும், கரங்களிலும் தொட்டு அவர் முகத்தைக் கரங்களில் எடுத்து நெஞ்சில் சார்த்தி, கண்ணீர் வடிய வடிய அவர் நெற்றியில் முத்தஞ் செய்து... களைத்துப் போன அவருடைய சிரசை சிசுவாயிருக்கையில் மலைக் குகையில் நான் கண்டது போல சீராட்டுகிறார்கள். இப்பொழுது அவர்கள் பாடவில்லை. “மகனே! சேசு! என் சேசு!” என்று மட்டும்தான் சொல்கிறார்கள். எப்படிப்பட்ட குரலில் என்றால் அது என் இருதயத்தைப் பிளக்கச் செய்கிறது.

இதன்பின் சேசு எழுந்து நிற்கிறார். தம் மேல் வஸ்திரத்தைச் சரி செய்து அழுகின்ற தம் மாதாவின் முன்பாக நின்று அவர்களை ஆசீர்வதிக்கிறார். பிறகு கதவை நோக்கி நடக்கிறார். வெளியே செல்லுமுன்:

“எனக்காகக் காத்திருக்கும் வேளையில் ஜெபியுங்கள்.” என்று கூறி வெளியேறுகிறார்.