தவக்கால சிந்தனைகள் 7 : முதல் ஸ்தலம் : இயேசு நாதர் சுவாமி தீர்ப்பிடப்படுகிறார்...

இயேசு சுவாமி தீர்ப்பிடப்படுமுன் நம்மை நாமே தீர்ப்பிடுவோம்.

நான் யார்? நான் கடந்து வந்த பாதைகள் என்ன? இப்போது எப்படி இருக்கிறேன். ஒரு நல்ல கிறிஸ்தவனாக இருக்கிறேனா? ஒரு நல்ல மனிதனாக இருக்கிறேனா? ஒரு நல்ல தந்தையாக இருக்கிறேனா? ஒரு நல்ல மகனாக இருக்கிறேனா? ஒரு நல்ல இளைஞனாக இருக்கிறேனா? ஒரு நல்ல மாணவனாக இருக்கிறேனா?

இதே போல் பெண்களும் ஒரு நல்ல கிறிஸ்தவளாக, நல்ல மனுஷியாக, நல்ல தாயாக, நல்ல மகளாக, ஒரு நல்ல இளம்பெண்ணாக, ஒரு நல்ல மாணவியாக இருக்கிறேனா ?

அவற்றில் எதாவது சரியில்லாமல் இருந்தால் சரிப்படுத்துவோம். எது நம் பலம்? எது நம் பலவீனம்? என்பது கண்டுபிடிப்போம். அதே வேளையில் இயேசு சுவாமியை முழுமையாக அனுக முடியாமல் நமக்கு தடையாக இருப்பது என்ன என்பதையும் கண்டுபிடிப்போம். நாம் ஏற்கனவே சொன்னமாதிரி நமது பலவீனங்களை நிரந்தரமாக களைய பயிற்சி எடுப்போம்.

இயேசு சுவாமியை யார் யாரோ தீர்ப்பிட்டார்கள். என்ன என்னவோ குற்றம் சுமத்தினார்கள். யார் யாரோ அடித்தார்கள். யார் யாரோ,

“ இவனைச் சிலுவையில் அறையும்... சிலுவையில் அறையும்" என்று கத்தினார்கள்..

அவருக்கு ஆதரவாக பேச ஒரு ஜீவன் கூட இல்லை. ஒரு நாதி இல்லை. இவர் குற்றமற்றவர் என்று சொல்ல ஒரு நாவு இல்லை. இதே போல் நாமும் சில நேரம் செய்யாத குற்றங்களால் சுமத்தப்படுகிறோம். இல்லாதது பொல்லாததால் சுமத்தப்படுகிறோம்.

அப்போது அதை எப்படி எதிர்கொள்கிறோம். ஊரைக்கூட்டுகிறோமா? கூச்சல் போடுகிறோமா? கத்துகிறோமா?

அல்லது இயேசு சுவாமியைப் போல் மொளனம் காக்கிறோமா?

“ நான் பேசியது தவறாக இருந்தால் எது தவறு என்று காட்டு. பேசியது சரினால் ஏன் என்னை அடிக்கிறாய் “ என்று அடித்தவனுக்கு ஆண்டவன் சொல்லும் பொறுமையான பதில்.

“ உண்மைக்கு சாட்சியம் கூறுவதே எனது பணி. அதற்காகவே பிறந்தேன் அதற்காகவே இவ்வுலகிற்கு வந்தேன். உண்மையை சார்ந்தவன் எவனும் என் குரலுக்கு செவி கொடுக்கிறான் “

என்று கேள்விகள் கேட்ட அன்று அதிகாரத்தில் இருந்த பிலாத்துவிற்கு உலக அரசன் அளித்த பதில்.

அங்கே சாத்தானின் ஆட்சி தாண்டவமாடியது. அங்கே கடவுளின் ஆட்சி இல்லாதது போல் காட்சி அளித்தது..இதுதான் அப்போது நிகழ்ந்த உண்மையான நிலமை.

இப்போது நாம் வாழ்ந்து கொண்டு இருக்கும் வாழ்க்கையை மீண்டும் ஒருமுறை திரும்பிப் பார்ப்போம்.

அதே வேளை அன்று இயேசு சுவாமிக்கு நடந்த இன்னல்கள் யாருக்காக நடந்தது என்பதையும் யோசிப்போம்.

நமக்காகவா அல்லவா அன்று தீர்ப்பிடப்பட்டார் ?நமக்காக அல்லவா பாடுகள்பட்டார்..

அப்படியானால் அவரில் நம் பங்கு என்ன? அவருக்காக நம் பங்கு என்ன?

அவரைப் பின் செல்ல வேண்டாமா?

அவர் சுமந்த சிலுவையை நாமும் அவருக்காக சுமக்க வேண்டாமா?

அதே போல் நம்மிடமே பெரிய பெரிய விட்டங்கள் இருக்க நம் சகோதர, சகோதரிகளின் கண்களில் இருக்கும் துரும்பைப் பார்த்து அவர்களை தீர்ப்பிடுவதை முதலில் நிறுத்துவோமா?

இயேசுவுக்கே புகழ்! மரியாயே வாழ்க!