31 நாள் சிறப்பு ஜெபமாலை ஐந்தாம் நாள் விசுவாச மந்திரம்

பரிசுத்த ஆவியானவரின் உதவியை நாடிய பின் செபமாலையின் பாடுபட்ட சுரூபத்தைப் பிடித்துக் கொண்டு விசுவாச மந்திரத்தைச் சொல்லுகிறோம் . புண்ணிய ஜீவியத்தின் தொடக்கம் , ஞான சீவியத்தின் ஆரம்பம் , விசுவாசம், திருச்சபையில் ஞானஸ்நானத்தினால் மக்களாகும்போது, முதன் முதல் நமக்கு அளிக்கப்படும் கொடை  விசுவாசம் . விசுவாசம் இன்றி நாம் இறைவனுக்கு பிரியப்பட முடியாது. விசுவாசம் பூர்த்தியாகும்படி வேதம் சொல்லுகிறதென்ன ? நீதிக்காக உள்ளத்தில் விசுவசிக்கிறோம், ஈடேற்றத்திற்காக வாயினால் அவ்விசுவாசத்தை அறிக்கை செய்கிறோம் . வாய்ச் செபத்தை அவமதிக்கும் போலி ஞானிகள் இதைக் கவனிப்பார்களா ?

இவ்விதம் விசுவாசம் எல்லாவற்றிக்கும் அடிப்படையாக இருப்பதினால் செபமாலையைத் தொடங்கும்போதே விசுவாச மந்திரத்தைச் சொல்வது எவ்வளவு பொருத்தம் ! இறைவன் அருகில் வருகிறவன் இறைவன் இருக்கிறார் என்றும் , அவரைத் தேடுகிறவர்களுக்கு சன்மானம் அளிக்கிறார் என்றும் விசுவசிப்பது அவசியம் என்கிறது வேதம் .ஆதலின் மூவொரு கடவுள் இருக்கிறார் என்றும் ,எல்லாப் படைப்புக்களுக்கும் அவர் கர்த்தர் என்றும் ,அவரது வல்லமைக்கும், ஞானத்துக்கும் அளவில்லை என்றும் விசுவசிக்கிறோம். ஜெபமாலை சொல்லத் தொடங்கும்போது நாஸ்திக கம்யூனிசத்தையோ, நாம் தான் கடவுள் என்னும் வேதாந்தத்தையோ , கடவுள் இல்லை என்றோ ( கடவுள் கிருபையாக நமக்களித்த ) புத்தி தான் கடவுள் என்றோ புலம்பும் கழகக்காரர்களுக்குச் சவால் விடுகிறோம் . இறைவனுடைய இரக்கமுள்ள பராமரிப்பை உணர்ந்து நமது கவலைகளையும் , ஏக்கங்களையும் தள்ளி வைக்கிறோம் . அவர் பட்சமுள்ள நல்ல தகப்பனார் என்று அறிகிறோம் . இவ்விதம் விசுவாச மந்திரத்தில் முதல் பிரிவைச் சொல்லும் போதே நமது புத்தி பிரகாசத்தினால் மகிழ்கிறது . நமது உள்ளம் பிள்ளைக்குரிய பாசத்தினாலும் நம்பிக்கையினாலும் துள்ளுகிறது . செபமாலை சொல்லும்போது நாம் இறைவனை மறந்துவிடுகிறோம் என்று சொல்லுகிறவன் யார் ? 

அல்லது நம் ஏக கர்த்தரும் ஒரே  மனுப்பேசுகிறவருமான இயேசுக்கிறிஸ்துவைத்  தள்ளி வைக்கிறோம் என்று வாய் கூசாமல் உளறுகிறவன் யார் ? செபமாலை சொல்லும் போது தேவ இரகசியங்களைப் பற்றி சற்றே சிந்திக்கிறோம் . அப்போது என்ன செய்கிறோம் ? சேசுவின் வாழ்க்கையை ஆதி முதல் அந்தம் வரைப் படமாய்க் காண்கிறோம் . இதைத்தான் விசுவாச மந்திரம் சுருக்கமாய்ச் சொல்லுகிறது . ஒரே உண்மையான கடவுளையும் , அவர் அனுப்பிய இயேசுக்கிறிஸ்துவையும்  அறிய வருவது தான் நித்திய சீவியம் என்றது வேத வாசகம் . நாம் வேதாகமத்தைப் புறக்கணிக்கிறோமா ?

நமது விசுவாசத்தின் ஆதிகர்த்தாவென்றும் அதைச் சம்பூரணமாக்குகிறவர் என்றும் வேதம் சொல்லும் இயேசுவைத்தானே , இயேசுவின் வாழ்க்கையைத்தானே காட்சி காட்சியாய்க் காண்கிறோம் ? தெய்வத்தின் சம்பூரணம் எல்லாம் குடிகொண்டு இருக்கிறவர் என்றும் வேதம் போதிக்கும் இயேசுக்கிறிஸ்துவைப்  பின்பற்றத் தேடுவது தப்பிதமல்ல அரும் புண்ணியத்திற்கு வழி 

கடவுள் நமக்கு விசுவாசத்தை அளித்தபோது நமக்கு பெரும் ஆசீர்வாதத்தைக் கொடுத்தருளினார் . விசுவாசத்தினால் மற்ற மனுமக்களுக்குமேல் உயர்த்தப்பட்டு தேவசுபாவத்தைத் தரிசிக்கவும் , அதில் பங்கடையவும் ஆற்றல் அளித்து மோட்ச சன்மானத்தைச் சம்பாதிக்கும் சாதனத்தையும் கொடுத்தருளினார் . ஆதலால் கண்ணாடியில் கண்டதுபோல் சிருஷ்டிகளிடத்தில் கடவுளைக் காணாமல் திரை மறையின்றிப் பூரண பிரகாசத்தில் அளவில்லா நன்மைத்தனத்தைக் கண்டு களிப்போம் என்ற நம்பிக்கை நம்மிடம் ஓங்கி வளர்கிறது 

விசுவாச மந்திரம் நமக்கு எவ்வளவு அரிய பெரிய காரியங்களை நமக்கு ஊட்டுகிறது . செபமாலையின் துவக்கத்தில் இதைச் சொல்லுகிறோம் 

செபம் 

செபமாலை ராக்கினியே , பாத்திமாவின் பாக்கிய சீலியே, போர்த்துகலில் தோன்றச் சித்தமாகி எங்கும் அமைதியை நிறுவியவரே , இக்கட்டு வெள்ளத்தில் அமிழ்ந்து கிடக்கும் எங்கள் நாட்டை கடைக்கண் திருப்பிப் பார்த்தருளும் . அதன்மேல் இரங்கி அது கிடக்கும் மடுவிலிருந்து தூக்கி ஞானத்தின் ஒளியையும் ஊக்கத்தின் உறுதியையும் அதற்குத் தந்தருளும் 

உலகிலுள்ள சகல சாதி சனங்களுக்கும் எங்கள் தேசத்திற்கும் சமாதானத்தைக் கொடுத்து நாங்கள் யாவரும் உம்மைச் சமாதானத்தின் அரசி என்று அழைத்து ஆர்ப்பரித்து உம்மை போற்றிப் புகழ கிருபை செய்தருளும் 

செபமாலை இராக்கினியே , எங்கள் நாட்டிற்காக வேண்டிக் கொள்ளும் 

ஆமென் 

இன்று முதல் சனிக்கிழமை அன்னைக்கு உகந்த நாள்  நான்கு தேவரகசியங்களையும் தியானித்து ஜெபமாலை ஒப்புக்கொடுத்து அன்னையின் வியாகுல அன்பால் விண்ணக வாழ்வை காண்போம்

தொடரும்

நன்றி பிரதர் : அகஸ்டஸ்