"அந்த இராஜாங்கங்களின் நாட்களிலே பரலோகத்தின் தேவன் என்றென்றைக்கும் அழியாத ஓர் இராச்சியத்தை எழும்பப் பண்ணுவார்” (தானி. 2.44)
சேசுநாதர் பன்னிரண்டு வயதில் ஜெருசலேமுக்கு அவர் பிதா(அர்ச்.சூசையப்பர்) மாதாவுடன்(தேவமாதா) பண்டிகைக்குப் போய், பண்டிகை நாட்கள் முடிந்து அவர்கள் திரும்பி வருகையில், வாலிபரான சேசுநாதர் தமது தாய் தந்தையருக்குத் தெரியாமல் ஜெருசலேமில் தங்கிவிட்டார். அவரை அவர்கள் தேடிக்கொண்டு வந்து, கடைசியாய் அவர் தேவாலயத்தில் சாஸ்திரிகள் நடுவில் உட்கார்ந்து, அவர்கள் சொல்கிறதைக் கேட்கவும், அவர்களை வினவவும் கண்டார்கள். “மகனே, ஏன் எங்களுக்கு இப்படிச் செய்தீர்” என்று திருத்தாயார் கேட்டபோது,
நீங்கள் ஏன் என்னைத் தேடினீர்கள்?
நான் என் பிதாவின் காரியங்களில் அலுவலாயிருக்க வேண்டுமென்று உங்களுக்குத் தெரியாதோ! " என்றார் (லூக். 2:49). அதாவது இவ்வுலகத்துக்கு அடுத்த காரியங்களை நீக்கி, தாயும், தகப்பனையும் விட்டுப் பிரிந்து, மோட்ச இராச்சியத்துக்கு அடுத்த காரியங்களில் நான் அலுவலாயிருக்க வேண்டுமென்று, என் அருமைத் தாயே, நீர் கண்டுபிடிக்க வில்லையோ என்று எடுத்துக் கூறுவதாகும்.
ஆயினும் அவருடைய நேரம் வரவில்லை. ஆகையால் மாதா பிதாவுடன் நாசரேத்துக்குத் திரும்பிப் போய் அவர்களுக்குக் கீழ்ப்படிந்திருந்தார். அவருடைய திருத்தாயார் இந்த வாக்கியங்களையெல்லாம் தன்னிருதயத்தில் வைத்திருந்தார்கள்.
அதாவது மோட்ச இராச்சியத்தின் வருகையையும், அதன் வருகைக்காகத் தமது திருக்குமாரன் எப்போது என்னென்ன காரியங்களைச் செய்யப்போகிறாரோ என்றும் தனக்குள் எப்போதும் தியானித்தவர்களாயிருந்தார்கள்.
மோட்ச இராச்சியத்தின் அலுவலே கிறீஸ்து இராஜாவின் ஏக அலுவல். அந்த இராச்சியத்தை மனிதருக்குள் ஸ்தாபிக்கவே அவர் இவ்வுலகில் வந்தாரென்னும் இரகசியத்தை முதன் முதலில் அறிந்து கொள்ளப் பாக்கியம் பெற்றவர்கள் அந்தத் திருத்தாயாரான கன்னி மாமரியே
தமது பகிரங்க சீவியம் ஆரம்பித்து, நாற்பது நாட்கள் இரவும் பகலும் உபவாசமாயிருந்த பின்னர் சாத்தானுடைய சோதனையை சேசுநாதர் எப்படி ஜெயித்தாரென்று நாம் அறிவோம். மோட்ச இராச்சியத்தைப் பிரசங்கிக்கவோ, அதில் பிரவேசிக்கவோ ஜெபமும் தவமும் சாத்தானுடைய சோதனைக்கு இடங்கொடாமல் அவன்மேல் வெற்றியும் அவசியமென்று ஆண்டவர் தமது திவ்விய மாதிரிகையால் நமக்குக் கற்பிக்கத் திருவுளமானார்.
பிறகு நாசரேத் என்னும் ஊரை விட்டு, கப்பர்னாவும் ஊரில் வாசம் பண்ணி, புறஜாதியார் தேசமாகிய கலிலேயாவுக்கும் போனார். இவ்விடங்களில் அது முதல் சேசுநாதர்,
"தவம் செய்யுங்கள், ஏனெனில் மோட்ச இராச்சியம் சமீபித்திருக்கிறது” என்று பிரசங்கிக்கத் தொடங்கினார் (மத். 4:17). ஜெப ஆலயங்களில் போதித்தபோதும் மோட்ச இராச்சியத்தின் சுவிசேஷத்தைப் பிரசங்கித்து, ஜனங்களுக்குள் இருந்த வியாதிகளைக் குணமாக்கினார்.
காலம் நிறைவேறி சர்வேசுரனுடைய இராச்சியம் சமீபமாயிற்று, பச்சாத்தாபப்பட்டு சுவிசேஷத்தை விசுவசியுங்கள்” என்றார் (மாற். 1:15). மேலும் தமது சீடர்களுக்கு ஜெபிக்கக் கற்றுக்கொடுத்த போது, அஞ்ஞானிகளைப் போலவும், கள்ள ஞானிகளைப் போலவும் ஜெபம் செய்யாமல், பரமண்டலங்களிலிருக்கிற எங்கள் பிதாவே, உம்முடைய நாமம் அர்ச்சிக்கப்படுவதாக. உம்முடைய இராச்சியம் வருக” (மத். 6:9,10) என்று ஜெபிக்கும்படி கற்பித்தார்.