மரியாயின் சுவிஷேசம் 2 : மாதாவைப் பற்றி தெரிந்து கொள்ள இந்த ஒப்பற்ற புனிதரின் வார்த்தைகளை வாசிப்போம்..

6. அர்ச்சிஷ்டவர்களுடன் நானும் உரைக்கிறேன்: புதிய ஆதாமின் பூவுலக மோட்சம் தேவமாமரியே (மாமரி கடவுளின் தாய் என்பதால் அளவற்ற மதிப்புடையவர்கள் '. - அர்ச். தோமாஸ் அக். (10n. 25 art. 6). இதை விரிவுரை செய்த கயித்தான் என்பவர் : தன் சுய இயல்பில் கடவுளைப் பயின்று அவருக்கு அமுதூட்டிய மாமரி . தெய்வாம்சத்தை எட்டுகின்றார்கள் என்கிறார்.) அங்கு தான் பரிசுத்த ஆவியின் வல்லமையால் அவர் மனிதனானார். அங்குதான் சிந்தனைக்குள் அடங்காத அற்புதங்களை நிகழ்த்தினார். கடவுளின் அகண்ட தெய்வீக உலகம் கன்னிமாமரி விவரிக்க இயலாத அழகும் செல்வமும் அங்கு உள்ளன. உன்னத சர்வேசுரனின் மகிமையலங்காரம் கன்னிமாமரியே.

சர்வேசுரன் தம் ஏக சுதனைத் தம் நெஞ்சத்துட்கொண்டிருப்பது போல், மரியாயினுள்ளே அவரை மறைத்து வைத்துள்ளார். அத்திருச்சுதனிலோ மிகவும் உயர்ந்தனவும் மிக விலைமதிப்புள்ளவையுமான யாவற்றையும் வைத்துள்ளார். ஓ! வியப்புக்குரிய இச்சிருஷ்டியிடம், எல்லாம் வல்ல சர்வேசுரன் எத்துணை பெருங்காரியங்களைச் செய்துள்ளார்! மரியாயும் தன் ஆழ்ந்த தாழ்ச்சியிலும்கூட 'வல்லபமுள்ளவர் பெருமையுள்ளவைகளை எனக்குச் செய்தருளினார்'' (லூக் 1:49) என்று சொல்லாமல் இருக்க முடியவில்லையே! அவ்வரிய காரியங்களை உலகம் அறியாது. ஏனென்றால், அத்தகைய அறிவைப் பெற உலகிற்கு இயலாது, அருகதையும் கிடையாது.

7. சர்வேசுரனின் திரு நகராகிய மரியாயைப் பற்றி. அற்புதமான விஷயங்களை அர்ச்சிஷ்டவர்கள் கூறியுள்ளார்கள். மாதாவைப் பற்றிப் பேசும்போது, அவர்கள் பெற்ற இன்பத்தையும் வாய்ச்சாலகத்தையும் போல் வேறு எதிலும் அவர்கள் கண்டதில்லை என்கிறார்கள். அப்படியிருந்தும் இவ்வன்னை சர்வேசுரனின் அரியாசனத்தின் முன் கொண்டு வரும் பேறுபலன்களின் உயர்வு எவ்வளவென்று கண்டுகொள்ள முடியவில்லை என்றே ஆச்சரியத்துடன் கூறுகிறார்கள்.

இத்தாயின் பரம அன்பின் விசாலம் பூமியை விட அகண்டதாயுள்ளது, அளக்க முடியாதது என்று சொல்கிறார்கள். சர்வேசுரன் மீதும் மாமரி கொண்டிருக்கும் வல்லமையின் அளவு அறிவால் கண்டுணர இயலாத ஒன்று என்கிறார்கள்.

மரியாயின் தாழ்ச்சியின் ஆழமும் எல்லாப் புண்ணியங்கள், வரங்களின் ஆழமும் ஒரு பெரும் பாதாளம், அளந்து காட்ட முடியாத ஆழம் என்று கூறுகிறார்கள். ஓ! உய்த்துணர இயலாத உயர்வே! ஓ! உரைக்க இயலாத விசாலமே! ஓ! அளப்பரிய பேர் பெருந்தன்மையே! ஓ! புக முடியாத பெரும் ஆழமே!!!

8. மிக உந்நத விண்ணகத்திலும், மிகத் தாழ்ந்த பாதாளத்திலும், பூமியின் ஒரு முனை முதல் மறு முனை வரையிலுள்ள யாவும் ஒவ்வொரு நாளும் மரியாயைப் பிரசங்கிக்கின்றன. வியத்தகும் கன்னி மரியைப் பறைசாற்றுகின்றன. நவ விலாச சம்மனசுக்களும், மாந்தருள் எச்சமயத்தாரும் எந்நிலையிலுள்ளோரும், எந்த வயதினரும் எப்பாலினத்தோரும், நல்லோரும் தீயோரும், பசாசுக் களும் கூட தாங்கள் விரும்பினாலும் சரி, விரும்பாவிட் டாலும் சரி, உண்மையின் வலிமையால் வலுக்கட்டாயமாக மாமரியை ஆசீர்வதிக்கப் பெற்றவர்கள்'' என்று அழைக்கிறார்கள்.

அர்ச். பொன வெந்தூர் சொல்வது போல பரலோகத்தில் சம்மனசுக்கள் எல்லாரும் இடைவிடாமல் பரிசுத்த , பரிசுத்த , பரிசுத்த மரியாயே! சர்வேசுரனின் கன்னித் தாயே!'' என்று வாழ்த்துகிறார்கள். தூதனின் மங்கள வாழ்த்தாகிய "மரியாயே வாழ்க!'' என்று தினமும் கோடிக்கணக்கான முறைகள் கூறித் துதிக்கிறார்கள். மாமரியின் முன் தெண்டனிட்டுப் பணிந்து அன்னையின் சலுகையெனச் சில பணிகளைத் தங்களுக்குக் கட்டளையிட்டு தங்களைக் கெளரவிக்குமாறு வேண்டுகிறார்கள். அதிதூதரான அர்ச். மிக்கேல் சம்மனசானவர் கூட, வானுலக சேனைகளின் தலைவராயிருந்தபோதிலும், மாமரியை மகிமைப்படுத்த மிக ஆவலுள்ளவராயிருக்கிறார். அவ்வன்னையின் ஊழியரில் ஒருவருக்கு உதவியாகச் செல்லும் பாக்கியம் கிட்டும்படி அவர்களின் ஆணைக்கு எப்பொழுதும் தயாராகக் காத்து நிற்கின்றார்.

நன்றி : புனித லூயிஸ் மரிய மோன்போர்ட் எழுதிய 'மரியாயின் மீது உண்மை பக்தி ' நூல். புத்தக தொடர்புக்கு சகோதரர் பால்ராஜ் Ph: 9487609983

சகோதரர் கபரியேல் Ph : 9487257479.

"ஜெபமாலை இராக்கினியாய் வந்து ஜெயம் தரும் மாமரி வாழியவே.. ஜெபிப்போம்.. ஜெபிப்போம்.. ஜெபமாலை..

இயேசுவுக்கே புகழ்! மரியாயே வாழ்க!