தவக்கால சிந்தனைகள் 17 : பெரிய வியாழன் தொடர்ச்சி..

சேசு அமைதியாகப் பேசுகிறார். ஒரு கற்றறிந்த மனிதன் தன் மாணவர்களுடன் ஒரு கொள்கையை ஆதரித்துப் பேசுவது போல் இருக்கிறது. குழப்ப நிலை கூடுதலாயிருந்தாலும் சேசுவின் அமைதி அதைச் சாந்தப்படுத்துகிறது.

இராயப்பர்தான் யூதாஸை அதிகம் சந்தேகிக்கிறார். யூதா ததேயுஸுக்கு அப்படியே சந்தேகம் இருந்தாலும் அவர் அப்படிக் காணப்படவில்லை. காரணம் யூதாஸினுடைய சர்வ சாதாரணமான நடத்தை அந்த சந்தேகத்தை அடித்து விடுகிறது. இராயப்பர் அருளப்பருடைய சட்டையைப் பிடித்திழுக்கிறார். சேசு காட்டிக் கொடுக்கப்படுவதைப் பற்றிப் பேசியதால் அவருடன் அதிகம் நெருங்கிப் போயிருந்த அருளப்பர் திரும்பிப் பார்க்கிறார். இராயப்பர் அவரிடம்: “அது யார் என்று கேளும்” என்கிறார்.

அருளப்பர் ஆண்டவரின் மார்பில் சாய்ந்தபடியே சேசுவை முத்தமிடுகிற மாதிரி தலையைத் தூக்கி, அவருடைய காதிற்குள்: “ஆண்டவரே, அது யார்?” என்று கேட்கிறார்.

சேசு மிக மெல்லிய குரலில்:

“அப்பத்துண்டை குழம்பில் தோய்த்து யாருக்குக் கொடுக்கிறேனோ அவன்தான்” என்கிறார். பின்னும் அவர் ஒரு முழு அப்பத்தை - நற்கருணைக்கு பிட்கப்பட்ட அப்பத்தை அல்ல - எடுத்து அதில் ஒரு பெரிய துண்டைப்பிட்டு தட்டில் இருந்த ஆட்டுக்குட்டிக் குழம்பில் தோய்த்து யூதாஸிடம் கொடுத்து:

“இந்தா யூதாஸ், இது உனக்குப் பிடிக்குமல்லவா?” என்கிறார். பாஸ்கா சடங்கில் இப்படிக் கொடுப்பது வீட்டுத் தலைவர் செய்யக் கூடிய வழக்கமாக அந்நாளில் இருந்தது.

“நன்றி குருவே, எனக்கு இது நிச்சயம் பிடிக்கும்” என்று கூறி, அது என்னவென்று புரியாமல் பயங்கரப் புன்னகையுடன் குற்றத்தைக் காட்டுகிற அப்பத்தைத் தன் வலிமையான பற்களால் கடித்துச் சாப்பிடுகிறான். அருளப்பர் அதிர்ச்சியடைந்தவராய் அந்தக் கொடிய புன்னகையைப் பார்க்கச் சகிக்காமல் கண்களை மூடுகிறார்.

“நல்லது, உன்னை நான் மகிழ்ச்சிப்படுத்தியுள்ளதால் இனி நீ போ. எல்லாம் இங்கே நிறைவேறி விட்டது.

(இங்கே என்கிற வார்த்தையை சேசு மிக அழுத்தமாய்ச் சொல்கிறார்.) மற்ற இடங்களில் இன்னும் செய்யப்பட வேண்டியதை, சீமோனின் யூதாஸ், துரிதமாய் செய்” என்கிறார் ஆண்டவர்.

“உடனே உமக்குக் கீழ்ப்படிவேன் குருவே. இனி ஜெத்சமெனியில் உம்மோடு வந்து சேர்ந்து கொள்வேன். நீர் வழக்கம்போல் அங்கு போவீர்தானே?”

“ஆம்... வழக்கம் போல் அங்கு போகிறேன்.”

“இவருக்கு என்ன செய்ய வேண்டியிருக்கிறது? இவர் தனியாகவா போகிறார்?” என்று கேட்கிறார் இராயப்பர்.

அதற்கு யூதாஸ் பரிகாசத்துடன்: “நான் ஒன்றும் குழந்தையல்ல” என்று சொல்லிக் கொண்டே மேல் வஸ்திரத்தைப் போட்டுக் கொள்கிறான்.

“அவன் போகட்டும். என்ன செய்யப்பட வேண்டுமென்று அவனுக்கும் எனக்கும் தெரியும்” என்கிறார் சேசு.

“சரி ஆண்டவரே” என்று கூறி இராயப்பர் மவுனமாகிறார். தன் உடன் கூட்டாளியைச் சந்தேகித்தது பாவம் என்று அவர் நினைக்கிறாரோ என்னவோ. அவர் தம் உள்ளங்கையில் தலையைச் சார்த்தி சிந்தித்தபடியிருக்கிறார்.

சேசு அருளப்பரைத் தம் பக்கம் சாய்த்து: “இராயப்பனிடம் தற்சமயம் ஒன்றும் சொல்லாதே. அது பயனற்ற துர்மாதிரிகையாக இருக்கும்” என்கிறார்.

யூதாஸ்: “குருவே, நான் போய் வருகிறேன். நண்பர்களே, போய் வருகிறேன்” என்கிறான்.

“போய் வா பையா” என்கிறார் இராயப்பர்.

அருளப்பர் சேசுவின் நெஞ்சின் கீழாக சாய்ந்தபடி: “சாத்தான்!” என்கிறார். சேசு மட்டுமே அதைக் கேட்டுப் பெருமூச்செறிகிறார்.

இக்காட்சி முடிவடைகிறது. சேசு சொல்கிறார்: “உன் மேல் இரக்கப்பட்டு நான் இக்காட்சியை நிறுத்துகிறேன். இராப் போஜன காட்சியின் முடிவை பின்னால் உனக்குக் காண்பிப்பேன்” என்கிறார்.

புத்தகங்கள் தொடர்பிற்கு மாதா அப்போஸ்தலர்கள் சபை, சகோதரர் பால்ராஜ் Ph : 9487257479