1. சுதனாகிய சர்வேசுரன் மனிதன் ஆகிறதற்குமுன் அவருக்குச் சரீரம் இருந்ததா?
அவர் பிதாவைப் போலும், இஸ்பிரீத்துசாந்துவைப் போலும் அரூபியாயிருந்தார்.
2. அவர் மனிதனாய்ப் பிறந்த பிறகு அவருக்கு மெய்யான சரீரம் இருந்ததா?
மெய்யான சரீரம் இருந்தது.
3. சம்மனசுகள் மனித ரூபமாகத் தோன்றினபோது அவர்களுக்கு மெய்யான சரீரம் இருந்ததா?
முன்சொன்னபடி அவர்களுக்குச் சரீரம் இருந்ததாகப் பார்வைக்குத் தோன்றினாலும், அவர்களுக்குக் திடப்பொருளானதும், மெய்யானதுமான சரீரமில்லை.
4. அதுபோலவே சேசுநாதருடைய சரீரம் ஆகாயப் பொருளினின்று உண்டாகி, அதினால் அவர் சரீரம் வெளித் தோற்றமுள்ள மாயமேயன்றி மெய்யான சரீரமல்ல என்று நினைக்கலாமா?
நினைக்கக்கூடாது. சேசுநாதரின் சரீரம் நமது சரீரத்தைப் போல் மெய்யான சரீரம்; நம்முடையதைப் போல் திடப்பொருளான சரீரம்; நம்முடையதைப் போல் அநித்திய வாழ்வில் வருத்தம், சாவு, நோவு முதலியவைகளுக்கு உட்பட்டிருந்த சரீரம்.
5. அதைப் பற்றி நமக்கு எப்படித் தெரியும்?
சுவிசேஷத்தின் அத்தாட்சியினால்:
(1) சேசுநாதர் நம்மைப் போல் பசிதாகமாயிருந்தார். “அவர் நாற்பது இரவும், நாற்பது பகலுமாக உபவாசமாயிருந்த பின் அவருக்குப் பசியுண்டாயிற்று” (மத்.4:2). “காலையில் அவர் பட்ட ணத்துக்குத் திரும்பி வரும்போது அவருக்குப் பசியுண்டாயிற்று” (மத். 21:18). “சமாரியா நாட்டாளாகிய ஒரு ஸ்திரீ தண்ணீர் மொள்ள வரும்போது, சேசுநாதர் அவளை நோக்கி எனக்குத் தாகத் துக்குக் கொடு என்றார்” (அரு. 4:7). சிலுவையில் தொங்கும்போது, “தாகமாயிருக்கிறேன்” என்றார் (அரு. 19:28).
(2) அவர் களைப்புற்றார். “சேசுநாதர் பிரயாணத் தால் களைத்து, கிணற்றின்மேல் உட்கார்ந்தார்” (அரு. 4:6).
(3) அவர் இளைப்பாறினார். கடலில் பெரும் புயல் உண்டானபோது, “நித்திரை செய்து கொண்டிருந்தார்” (மத்.8:24).
(4) அவர் மரணத்துக்கு ஆளானார். “சேசுநாதர் பேரொலியாகக் கூப்பிட்டு உயிர்விட்டார்” (மாற். 15:37).
6. நமது சரீரத்தில் ஆசாபாசம் உண்டாவதுபோல் சேசுநாத ருடைய சரீரத்திலும் உண்டானதோ?
சேசுநாதர் ஜென்மப்பாவமின்றி இஸ்பிரீத்துசாந்துவின் வல்லமையால் உற்பவித்துப் பிறந்தபடியால் ஆசாபாசம் அவர் சரீரத்தில் உண்டாகவில்லை.
7. ஆதாமுக்கு தேவ கிருபையால் கொடுக்கப்பட்டிருந்த மேலான வரங்களாகிய துன்பமில்லாச் சீவியத்தையும், சாகாவரத்தையும் சேசுகிறீஸ்து நாதர் தமக்கு அடைந்து கொள்ளாதிருந்தாரா?
அவற்றை அடைந்து கொள்ள முடிந்தவராயிருந்தார். ஆனால் அப்படிச் செய்ய அவர் சித்தமாயிருக்கவில்லை.
8. ஏன் அவர் சித்தமாயிருக்கவில்லை?
நம்மைப் போல் ஜீவித்துத் துன்ப துயரங்களில் நமக்குச் சகல புண்ணியங்களின் நன்மாதிரிகை காட்டவும், தமது மரணத் தால் நமது பாவங்களுக்குப் பரிகாரம் செய்யவும் தீர்மானித் திருந்ததினாலேதான்.
9. அந்தச் சரீரம் சேசுநாதருக்கு எவ்விடத்தில் இருந்து வந்தது?
முன்சொன்னபடி மனுஷனுடைய உதவி யாதொன்று மின்றி, இஸ்பிரீத்துசாந்துவின் வல்லமையால் அர்ச். கன்னி மரியாயின் உதரத்தினின்று உண்டானது.