ஆங்காரம்

ஆங்காரமே முதலில் கட்டிக்கொள்ளப்பட்ட பாவம். அது லூசிபரின் பாவம். ஆதாம், ஏவாள் கட்டிக் கொண்ட ஜென்மப் பாவத்தின் வேராக இருந்ததும் இப்பாவமே.

பாவங்களில் மிகப் பெரியது ஆங்காரமே. ஏனென்றால் அது சுயநேசத்தின் சிகரமாகவும், சர்வேசுரனுக்குப் பணிந்திருப்பதற்கு எதிரானதாகவும் இருக்கிறது. எனவே அதுவே சர்வேசுரனால் அதிகம் வெறுக்கப்படும் பாவம். இந்தப் பாவத்தையே அவர் மிகக் கடுமையாகத் தண்டிக்கிறார். கெட்டுப் போன சம்மனசுக்கள், ஆதாம், ஏவாள், தானியேல் ஆகமத்தின் நபுக்கோதனசார் (4:27-30) ஆகியோர் தண்டிக்கப்பட்ட விதம் இதற்கு சாட்சியாக இருக்கிறது.

அவ்வாறே ஆங்காரம் சுய நேசத்தின் பிறப்பிடமாக இருப்பதாலும் அது மற்றவைகளை விடப் பெரிய பாவமாக இருக்கிறது. இந்த சுயநேசம்தான் மற்ற எல்லாப் பாவங்களுக்கும் வேராக இருக்கிறது. “சர்வ கேடுகளுக்கும் அஸ்திவாரம் ஆங்காரமே” (தொபி. 4:14). ஒரு பாவத்தின் தனிப்பட்ட இயல்பு எத்தகையதாக இருந்தாலும், ஒவ்வொரு பாவத்திலும் ஆங்காரம் கலந்துள்ளது.

ஆங்காரம் மிக ஆபத்தான பாவம். ஏனென்றால் அது நம் புத்தியைக் குருடாக்குகிறது. இறுதியாக ஏதாவது ஒரு காரியத்தால் சத்தியத்தைப் புரிந்து கொள்ளும்படி நாம் தூண்டப் படாவிட்டால், நாளுக்கு நாள் ஒரு ஞான சுய மாயைக்குள் நாம் தொடர்ந்து பயணித்துக் கொண்டேயிருப்போம். நமது சில பழக்கங்கள் தீயதாக இருக்கும்போதும், நம் செயல்கள் நல்லவையாகவும், புண்ணியங்களாகவும் இருப்பதாக நாம் நினைத்துக் கொள்வோம். ஆங்காரத்தால் நாம் குருடாக்கப் படும்போது, நம்முடைய தாலந்துகளும் திறமைகளும் சர்வேசுரன் நமக்குத் தந்த கொடைகள் என்று நினைக்க மாட்டோம். அதற்குப் பதிலாக அவை நம்மிடமிருந்தே வந்தவை என்றும், அவற்றை நாம் விரும்புகிற விதத்தில் உபயோகிக்க நமக்கு உரிமையுண்டு என்றும் எண்ணுவோம்.

ஆங்காரத்தின் நோய்க்கிருமியால் தாக்கப்படாதவர்கள் யாருமில்லை! ஒவ்வொரு மனிதனிடமும் ஒரு குறிப்பிட்ட வகையான ஆங்காரம் உண்டு. அல்லது குறைந்த பட்சம் ஒரு குறிப்பிட்ட வகையான ஆதிக்க உணர்வு உண்டு. அதே தன்மையைக் கொண்டுள்ள அதன் நோய்க்கிருமிகள் வேறு சிலவும் அங்கே இருக்கக் கூடும். இந்த ஆங்காரமே நமது மனப்பாங்கின் தன்மையையும், நமது குணாதிசயத்தின் தன்மையையும் தீர்மானிக்கிறது. அல்லது குறைந்த பட்சம் அது நம் மனப்பாங்கோடு நெருங்கிய தொடர்புள்ளதாக இருக்கிறது. நம் தனிப்பட்ட ஆங்காரம் எப்படிப் பட்டது என்பதை அறிந்து கொள்ளத் தேடுவது மிக முக்கியமானது. அப்போதுதான் நம்மைப் பற்றிய உண்மையான அறிவை நாம் அடைய முடியும்; மேலும் நம் வாழ்விலிருந்து பாவத்தையும், துர்க்குணங்களையும் வேரறுக்க அவசியமான பலன் மிக்க முயற்சிகளை நாம் மேற்கொள்ளவும் முடியும்.

நம்முடையது தன்னார்வ மனப்பாங்காக இருக்குமானால், நம் ஆங்காரம் தன்னைத்தானே சகலத்திலும் மையமாக்கிக் கொள்கிறது. சக்கரத்தின் அச்சுக் குடமாக இருக்க நாம் விரும்புகிறோம். மற்றவர்கள் நம்மைக் கவனிக்க வேண்டுமென விரும்புகிறோம். முன்கோபிகளாகவும், சிறு அவமானத்தைக் கூட தாங்க முடியாதவர்களாகவும் இருக்கிறோம். ஆங்காரமானது புகழ், ஸ்துதி, பாராட்டுக்கள் ஆகியவற்றைத் தேடுபவர்களாக நம்மை ஆக்குகிறது. வீண்மகிமைக்குள் நாம் விழுந்து விடுகிறோம். 

நம்முடையது தன்னாதிக்க மனப்பாங்காக இருக்குமானால், நம் ஆங்காரம் ஒரு பலமான சுய சித்தத்தில் வெளிப்படுத்தப் படுகிறது. மற்றவர்களுக்குப் பணிந்து போகவோ, அவர்களது கருத்துக்களை ஏற்றுக் கொள்ளவோ நமக்குக் கடினமாக இருக்கிறது. பெரும்பாலும் நாம் பிறரை அடக்கியாள விரும்புகிறவர்களாகவும், விமரிசன நோக்குள்ளவர்களாகவும், வீண்வாதத்தை விரும்புகிறவர்களாகவும் இருப்போம்; ஆதிக்க உணர்வால் ஆட்கொள்ளப் பட்டிருப்போம். பிறரின் உரிமைகளைப் பற்றி சிந்திக்க மாட்டோம்.

நாம் சுய பச்சாத்தாபமுள்ள மனப்பாங்கு உள்ளவர்களாக இருந்தால், நம் ஆங்காரம், சுய இரக்கம், அதீத உணர்ச்சி வசப்படுதல் ஆகியவற்றின் திரைக்குள் தன்னை மறைத்துக் கொண்டிருக்கிறது. சீற்றம், மனக்கசப்பு, காழ்ப்புணர்வு, சந்தேகம், வெளித்தெரியாத பகைமையுணர்வு ஆகியவை இந்த சுய இரக்கத்தோடு சேர்ந்த குணங்களாக இருக்கின்றன. இந்த ஆங்காரத்தை அடையாளம் காண்பது கடினம். ஏனென்றால் அது தன்னைத்தானே மறைத்துக் கொள்கிறது. எனவே, அதை ஆங்காரமென நாம் ஒத்துக் கொள்வதில்லை.

நாம் செயலூக்கமில்லாத மனப்பாங்கைக் கொண்டிருந்தால், சுய திருப்தியையும், ஆடம்பரத்தையும் தேடுமாறு நம் ஆங்காரம் நம்மை உந்தித் தள்ளுகின்றது. மற்றவர்களுடைய குறைகள் நமக்கு அதிர்ச்சியளிக்கின்றன. ஆனால் நம்மைப் பற்றியோ நாம் முழுத் திருப்தியுள்ளவர்களாக இருக்கிறோம்.

ஆதிக்கவுணர்வின் ஆங்காரம் மற்றவர்களின் வாழ்வை நம் கட்டுப்பாட்டில் கொண்டிருக்க வேண்டும் என்ற வெறியை நம்மில் தூண்டுகிறது; நம் விருப்பங்களை அவர்கள் மேல் சுமத்தவும், அவர்களை ஆதிக்கம் செலுத்தவும் விரும்புகிறோம். பிறர் தங்கள் அதிகாரத்தை வலியுறுத்தும் போது நம் சித்தம் உறுதியானதாகவும், வளைந்து கொடுக்காததாகவும் ஆகி விடுகின்றது.

சுய சித்தமும், பிடிவாத குணமுமே தேவ சித்தத்தை எதிர்ப்பவர்களாக நம்மை ஆக்கி விடுகின்றன. அவை நம் அயலானை எதிர்த்து நின்று, நம் சுய நேசத்தின் கட்டளைகளை நிறைவேற்றுவதில் யாருக்கும் அசைந்து கொடுக்காதவர்களாக நம்மை மாற்றி விடுகின்றன. கோபம், வெறுப்பு,கர்வம், முரண்படுகிற மனநிலை, திமிர் ஆகியவை இந்த வகை ஆங்காரத்தின் குழந்தைகளாகும். வழக்கமாக இந்த ஆங்காரம் தன்னிச்சையாக உறுதியான முடிவெடுக்கிற ஒரு மனத்தில் வேரூன்றியதாக இருக்கிறது. அறிவின் ஒளியையும், வெளிப்படுத்தப்பட்ட விசுவாசக் கொள்கைகளால் எண்பிக்கப் படுகிற சத்தியத்தின் ஒளியையும் நாம் கண்டு கொள்ள முடியாமல் அது தடுத்து விடுகிறது. இந்த விருப்பமற்ற நிலை உண்மையில் அறியாமையை வளர்க்கிறது. திருச்சபைக்குள் நுழையாத படி மனிதர்களைத் தடுப்பதும் தங்கள் விசுவாசத்தை இழந்து வீழ்ச்சியடைந்த பிறகு, விசுவாசத்தை அவர்கள் மீண்டும் அனுசரியாதபடி தடுப்பதும் இந்த ஆங்காரமே.

இந்த வகை ஆங்காரத்தோடு மிக நெருக்கமாக இணைந்திருக்கிற மற்றொரு ஆங்காரமுண்டு. அல்லது, இந்த வகை ஆங்காரத்திற்கு வேறு பெயர் உண்டு என்றும் நாம் கூறலாம். அது சுதந்திர மனப்பாங்கு ஆகும். கீழ்ப்படியாமை, அர்ப்பண மறுப்பு, பிறரை இகழ்தல், கர்வத்தோடு முரண்படுதல், அறிவுரைகள், உதவிகளை ஏற்க மறுத்தல், உரிய அதிகாரத்தால் கண்டிக்கப் படுவதை ஏற்க மறுத்தல், தேவ தூஷணம், மனக்கசப்போடு சாபமிடுதல், ஆணையிடுதல், வார்த்தையிலும், செயலிலும் மரியாதையின்மை ஆகியவற்றை நோக்கி இது நம்மை வழிநடத்துகிறது. 

நம் சொந்தக் குறைகளை ஒத்துக் கொள்ள மறுத்தல், போலித் தற்பெருமை, நம் மனம், நற்பண்புகளுக்கும், ஆளுமைக்கும், செல்வ வளத்திற்கும் சர்வேசுரனல்லாமல் நாமே காரணம் என்ற எண்ணம் ஆகியவை அறிவின் ஆங்காரத்தை வெளிப்படுத்துகின்றன. இந்த ஆங்காரத்தில் நின்றே விசுவாசத்திற்கு எதிரான பாவங்கள் எழுகின்றன.

புகழார்வத்தின் ஆங்காரம் மற்றவர்கள் எவ்வளவுதான் உயர்ந்தவர்களாக இருந்தாலும், அவர்களை விட நம்மை எந்த வகையிலாவது முன்னிலைப் படுத்துகிற உயர்பதவிகளையும், மாண்புள்ள அலுவல்களையும் நாம் தேடும்படி செய்கிறது. பெரும் அலுவல்களையும் திட்டங்களையும் எப்படி நிறைவேற்றுவது என்று தெரியாத போதிலும், முன்யோசனையின்றி அவற்றைப் பொறுப்பேற்றுக் கொள்ள அது நம்மைத் தூண்டுகிறது. அதிகப்படியான தன்னம்பிக்கையின் காரணமாக, நம் திறமைகளை நாம் அதீதமாக மதிப்பிடுகிறோம். ஒழுங்கீனமான ஆசைகள், வீண்மகிமை, பிறரால் புகழப்பட வேண்டுமென்ற ஆசை, ஆரவாரப் பகட்டு, இன்னும் அதிக உயர்வாக மற்றவர்களால் மதிக்கப்படும் படியாக வாழ்க்கைக்கு அத்தியாவசியமான காரியங்களை மட்டுமிதமின்றி பயன்படுத்துவது ஆகிய தீமைகள் இந்த ஆங்காரத்திலிருந்தே உருவெடுத்து வருகின்றன. முகஸ்துதிக்கும், வெளிவேடத்திற்கும் இது வழிவகுக்கிறது.

ஞான ரீதியான வீண்பெருமையும் நம்மிடம் இருக்க வாய்ப்புள்ளது. நாம் உத்தமமானவர்கள் என்று நாம் எண்ணலாம்; நம் செயல்கள் எப்போதும் பரிசுத்தமானவையாக இருப்பதாக நினைக்கலாம். அல்லது நம் பாவங்களை நாம் ஏற்றுக் கொள்கிற போது, அவற்றின் கனாகனத்தைக் குறைத்துக் காட்டவோ, அல்லது அவற்றிற்கு நொண்டிச் சாக்கு சொல்லவோ நாம் ஆயிரம் காரணங்களைக் கண்டுபிடிக்கலாம்.

இயற்கைவாதம் என்னும் போர்வைக்குள் நம் ஆங்காரம் தன்னை மறைத்துக் கொண்டிருக்கக் கூடும். இந்த வகை ஆங்காரம் நம்மிடம் இருந்தால், நம் நடத்தையில் எந்த விதக் கட்டுப்பாட்டையும் கடைப்பிடிக்க மாட்டோம். நம் பேச்சில் அடக்கவொடுக்கமோ, நம் கீழ்ப்படிதலில் மரியாதையோ இருக்காது. நம் தாழ்ச்சி போலியானதாகவும், மற்றவர்களை ஏமாற்றுவதாகவும் இருக்கும்; பிறரோடு பேசும் போது, வார்த்தைகளால் அவர்களை நகையாடுகிறோம்; புண்படுத்துகிறோம். நம் வெறுப்பு நாள்பட்டதாக இருக்கிறது. அர்ப்பண உணர்வுக்கு நாம் எதிரியாகவும், அதிகாரத்தில் பேராசை உள்ளவர்களாகவும், மற்றவர்களை அலட்சியம் செய்ய ஆசையுள்ளவர்களாகவும், நம் செயல்களிலும், வேலையிலும் இறுமாப்புள்ளவர்களாகவும் இருக்கிறோம். நம் சொந்த உள்ளுணர்வின்படி செயல்படுகிறோம்; மற்றவர்களுடைய காரியங்களில் தலையிடுகிறோம். கட்டுப்பாடற்ற விநோதப் பிரியத்தின் காரணமாக, எல்லாவற்றையும் அறிந்து கொள்ள ஆசிக்கிறோம். நமக்குப் புரியாத காரியங்களைப் பற்றிக்கூட எப்போதும் பேசிக் கொண்டிருக்க விரும்புகிறோம்.

சிடுசிடுப்பும், எரிச்சலும் உள்ளவர்களாக நம்மை ஆக்கக் கூடிய ஒரு ஆங்காரம் நம்மிடம் இருக்கலாம். அப்படியிருந்தால், மற்றவர்களை வசைபாடுகிறோம்; மனம் நோகச் செய்கிற வார்த்தைகளைப் பேசுகிறோம். மற்றவர்களைக் கேலிசெய்கிறோம், திட்டுகிறோம், தவறாக மதிப்பிடுகிறோம்.

பரிசேயத் தனமுள்ள ஆங்காரம் பெருமை பாராட்டச் செய்கிறது; பிறரை விமரிசனம் செய்கிறது. அது நம்மை வாயாடிகளாக்குகிறது; பொய்கள் சொல்லவும், முரண்பாடுகள் உள்ளவர்களாயிருக்கவும் செய்கிறது; உயர்குடிப் பிறப்பையும், சமூகத்தில் உயரிய நிலையையும், புண்ணியத்தை விட மேலானவையாக மதிக்கிறோம். நடத்தையில் திமிர், நம்மை விடத் தாழ்ந்தவர்கள் என்று நாம் நம்புகிறவர்களோடு இசைந்திருப்பதை அவமானமாகக் கருதுதல் ஆகியவை இந்த ஆங்காரத்தினின்று எழுகின்றன. நம் செயல்களில் கண்மூடித்தனமாக பரிசுத்த ஜீவியத்தை விட சட்டங்களைக் கடுமையாக அனுசரிப்பதை மேலானதாக நினைக்கும் தன்மை இருக்கும். இதனால், ஈடுபாடின்றி நம் கடமைகளை நிறைவேற்றுவோம்; அதில் வெளிவேடமே நிறைந்திருக்கும்.

உணர்ச்சிவசப் படுதலில், அல்லது சுய இரக்கத்தில் நம் ஆங்காரம் மறைந்திருக்கலாம். இவ்விஷயத்தில் மற்றவர்கள் நம்மைப் பற்றி என்ன நினைக்கிறார்கள் என்பது பற்றி அதீதக் கவலை உள்ளவர்களாயிருப்போம். மற்றவர்களைப் பற்றிய தவறான கற்பனைகளை வளர்த்துக் கொண்டு, அவர்களை எளிதில் மன்னிக்க மனதில்லாமல் இருப்போம். இந்த வகையான ஆங்காரத்தோடு மிக நெருக்கமாக இணைந்திருப்பது அச்சவுணர்வின் ஆங்காரமாகும். காரணமே இல்லாத பயத்திலிருந்து இது வளர்கின்றது. இதனால் மற்றவர்களுடைய கருத்துக்களைப் பற்றி நாம் அச்சங் கொள்ளுகிறோம்; மனித மதிப்புக்கு அதிக முக்கியத்துவம் தருகிறோம். இந்த ஆங்காரத்தின் உள்ளுணர்வுக்குக் கீழ்ப்பட்டு, செயல்பட வேண்டிய நேரத்தில் செயல்படாமல் போகிறோம். ஏனென்றால் அடிப்படையற்ற ஒரு பயம் ஞான ரீதியிலான சோம்பலின் கட்டுக்களைக் கொண்டு நம்மைப் பற்றிப் பிடிக்கிறது. இந்தச் சோம்பல் நம் முயற்சிகளை முடக்குகிறது; நம்மை முடிவெடுக்க முடியாதவர்களாக்குகிறது; இதனால் நல்ல வாய்ப்புகளை நாம் பயன்படுத்தாமல் விட்டு விடுகிறோம்.

மன உறுத்தலின் ஆங்காரமானது, நம் கவனத்தைத் தவறான காரியங்களின் மீது நிலைநிறுத்துகிறது. இதனால் நாம் அக்கறை கொள்ளத் தகுதியற்ற அற்ப காரியங்களிலும் கூட நாம் அதீதமான கவனம் செலுத்துகிறோம். அதே வேளையில் நாம் கவலை கொள்ள வேண்டிய காரியங்களைப் பற்றியோ எந்த உறுத்தலுமின்றி இருக்கிறோம்.

நம் சொத்துக்கள், செல்வ வளம், ஜீவிய அந்தஸ்து, நமது அருமையான உடைகள், பேச்சுத் திறன், அழகு அல்லது பலம் ஆகியவற்றை நம் ஆங்காரம் மையமாகக் கொண்டிருக்கலாம். மேலே குறிப்பிடப்பட்டுள்ளவற்றில் சில ஆங்காரங்களால் குறித்துக் காட்டப் படுகிறபடி, இந்த ஆங்காரமானது நம் பக்தியிலிருந்தும், நல்லொழுக்கச் செயல்களிலிருந்தும் கூட வளரக் கூடும்.

ஆங்காரம் நம் புண்ணியங்கள் அனைத்தையும் நாசமாக்கி, எல்லா விதமான ஒழுங்கீனங்களுக்குள்ளும் நம்மை இழுத்துச் செல்லக்கூடும். ஆங்காரமுள்ள மனிதன் எத்தகைய பாவத்தையும் செய்பவனாயிருக்கிறான். “ஆங்காரம் முன்னும், நஷ்டம் பின்னும் வருமுன்னே மனம் செருக்குறும்” (பழ. 16:18). எனவே, இந்தத் தீமை எந்த வேடத்தில் நம்மிடம் வெளிப்பட்டாலும், ஞான ஜீவியத்தில் அதை எதிர்த்துப் போராடுவது முற்றிலும் அவசியமானதாகும். நம் இருதயத்தினுள் நுழைய அதை நாம் அனுமதித்தால், அதனோடு சேர்ந்து மற்ற எல்லாத் தீமைகளின் நோய்க் கிருமிகளும் உள்ளே நுழையும்; விரைவில் நாம் சாத்தானுக்கு அடிமைகளாயிருக்கக் காண்போம். அதன் கண்ணியில் சிக்காதபடி நாம் எச்சரிக்கையாயிருக்க வேண்டும். ஏனெனில் ஆங்காரமுள்ளவனும், மனந்திரும்ப விரும்பாதவனுமாகிய பாவியின் முடிவு, சர்வேசுரன் வெளிப்படுத்தின படி, பசாசுக்களோடு நித்திய நரக நெருப்பில் தள்ளப் படுவதேயாகும்.

ஆங்காரத்திற்கு எதிரான தீர்வுகள்

ஆங்காரத்தை வெல்ல ஒரே வழி தாழ்ச்சியைக் கடைப்பிடிப்பது ஆகும். அது ஒரு முரண்பாடாகத் தோன்றலாம்; ஆனால் தாழ்ச்சியுள்ள மனிதன் தான் ஆங்காரமுள்ளவன் என்று கண்டுபிடிக்கிறான்; உண்மையான ஆர்வத்தோடு, தன் வாழ்வில் ஆங்காரத்தின் வெளிப்பாடுகளின் மீது வெற்றி கொள்ளப் பாடுபடுகிறான்.

தாழ்ச்சியை அடையப் பாடுபடுவதில், நாம் நம் கண்களுக்கு முன்பாக நம் ஆண்டவரையே முன்மாதிரிகையாகக் கொண்டிருக்க வேண்டும். தாழ்ச்சியுள்ளவர்களுக்கு ஆதரவாக அவர் அருளிய வாக்குத்தத்தங்களையும், ஆங்காரமுள்ளவர்களைப் பழிவாங்க அவர் செய்துள்ள ஏற்பாடுகளையும் நாம் நம் மனதில் இருத்தி சிந்தித்து வர வேண்டும்; சர்வேசுரனையே பற்றிப் பிடித்துக் கொண்டு நம் முழு ஆத்துமத்தோடும் அவருடைய திருச்சித்தத்தை நிறைவேற்ற வேண்டும்; இந்தப் புண்ணியத்தைத் திரும்பத் திரும்பக் கேட்டு, ஜெபத்தில் தஞ்சமடைய வேண்டும்; சர்வேசுரனுடைய பிரசன்னத்தில் ஜீவிக்க வேண்டும்; சுய-மறுதலிப்பையும், பிற கிறீஸ்தவப் புண்ணியங்களையும், விசேஷமாக, பொறுமை, சுயவொடுக்கம், பிறர்சிநேகம், சாந்தம், கையளித்தல், சர்வேசுரனுக்கு முழு அர்ப்பணம், தேவ சித்தத்திற்கு ஒத்திருத்தல், இரக்கம், தேவ நம்பிக்கை, பாவத்தின் மீது அருவருப்பு, அடக்கவொடுக்கம் ஆகியவற்றையும் பயிற்சி செய்ய வேண்டும். உலக மகிமைகளை நாம் தேடக் கூடாது; மாறாக நம் ஒன்றுமில்லாமையையும், புண்ணியங்கள் நம்மில் குறைவுபடுவதையும் நாம் ஒத்துக் கொள்ள வேண்டும். அவமானங்களை ஏற்றுக் கொள்ள விருப்பமுடன் இருப்பதோடு, எல்லாக் காரியங்களிலும் நாம் சர்வேசுரனைத் தேடவும் பாடுபட வேண்டும்.