மாதாவின் ஐந்தாம் காட்சி

1917 செப்டம்பர் 13-ம் நாள்

மாதா வழக்கம்போல் அஸின்ஹேரா மரக்கிளை மீது ஒளியுருண்டையில் தோன்றி:

"இந்தப் போர் முடிவடையும்படி (முதல் உலகப் போர்: 1914-1918) தொடர்ந்து ஜெபமாலையைச் சொல்லி வாருங்கள். அக்டோபர் மாதம் நமதாண்டவரும் வியாகுல அன்னையும், கார்மேல் மாதாவும் இங்கு வருவார்கள். உலகத்தை ஆசீர்வதிக்க அர்ச். சூசையப்பர் குழந்தை சேசுவுடன் தோன்றுவார். உங்கள் பரித்தியாகங்களால் கடவுள் மகிழ்கிறார். ஆனால் அந்தக் கயிற்றோடு நீங்கள் உறங்குவதை அவர் விரும்பவில்லை. அதைப் பகலில் மட்டுமே அணிந்து கொள்ளுங்கள்” என்று கூறினார்கள்.

லூஸியா பலருடைய விண்ணப்பங்களை மாதாவிடம் தெரிவிக்க, “அவர்களில் சிலரைக் குணப்படுத்துவேன். மற்றவர்களையல்ல. அக்டோபர் மாதம் எல்லாரும் நம்பும்படி ஒரு அற்புதத்தைச் செய்வேன்” என்றார்கள். 

பக்கத்திலிருந்த யாரோ ஒரு சிறுமி வாசனைத் திரவியமுள்ள புட்டி ஒன்றை மாதாவுக்குக் கொடுக்கும்படி கூற, லூஸியாவும் அதை வாங்கி மாதாவிடம் நீட்ட, மாதா: "இது பரலோகத்தில் தேவைப்படாது” என்றார்கள்.

மாதா போகப் புறப்பட்டபோது லூஸியா ஜனங்களைப் பார்த்து, “அவர்களைக் காணவேண்டுமானால் அதோ பாருங்கள் -- அவர்கள் அதோ மேலே போகிறார்கள்” என்று கூறினாள். அந்த வெண்மேகம் எழுந்து வானில் மறைந்தது. லெயிரியா மேற்றிராசன அதிசிரேஷ்ட குரு, மாதாவைச் சுமந்து வந்த அந்த வெண்மேக ரதத்தை காணும் பாக்கியத்தைப் பெற்றார்.