வரலாற்றுச் சம்பவங்கள் கூறுவது என்ன?

இரண்டாம் கேள்வி:

46. மரியாயின் மத்தியஸ்தம் என்ற உண்மை இருபதாம் நூற்றாண்டின் வரலாற்றில் எப்படி வெளிப்படுகிறது என்று ஆராய்வோம். பதினாறாம் நூற்றாண்டிலிருந்து கடவுள் எதிர்ப்பின் கோர நாடகம் தொடங்கியது. இந்த எதிர்ப்பை மரியாயின் மத்தியஸ்தத்தின் மூலம் வெற்றி கொள்ள சர்வேசுரன் விரும்புகிறார். இக்கருத்தைத் தெளிவுபடுத்த சிறிது வரலாற்று ஆய்வு தேவையாயிருக்கிறது. நாஸ்திகம் என்னும் பாவம் ஒருபக்கத்தில் தலைதூக்கி வளர்ந்து கொண்டிருக்க, அதற்கு இணையாகவும், அதைக் கட்டுப்படுத்தவும் பல தீர்க்கதரிசனங்களைக் கடவுள் திருச்சபைக்குக் கொடுத்து வந்திருக்கிறார். காட்சியாகமத்தின் 12-ம் அதிகாரத்தில் கூறப்பட்டுள்ள மறைபொருள் நிகழ்ச்சி நம் கண்முன் நிற்கிறது. அதில் சூரியனை ஆடையாக அணிந்த ஸ்திரீயே 1917 அக்டோபர் 13-ல், பாத்திமாவில் நிகழ்ந்த மாபெரும் சூரிய அதிசயம். நாஸ்திக கம்யூனிசம் தான் கடவுளை மறுதலிக்கும் சிவந்த பறவை நாகம். அதுவே மாஸ்கோவின் சிவப்பு நட்சத்திரம். கிழக்கு நாடுகளின் கம்யூனிச நாஸ்திகமும், மேற்கு நாடுகளின் நடைமுறை நாஸ்திகமும் சேர்ந்து, காட்சியாகம ஸ்திரீயுடன் யுத்தம் புரிவதே இருபதாம் நூற்றாண்டின் வரலாறு. கிழக்கும் மேற்கும் கடவுளைப் புறக்கணிப்பதில் சேர்ந்து செயலாற்றுகின்றன. இந்த வரலாற்றைச் சற்று விரிவாகப் பார்ப்போம்.

16-ம் நூற்றாண்டு

47. வரலாற்று ஏடுகளில், பதினாறாம் நூற்றாண்டு நவீன யுகத்தின் ஆரம்ப காலமாகக் கருதப்படுகிறது. 16-ம் நூற்றாண்டே மனிதாபிமானக் கொள்கையும், லூத்தரின் புராட்டஸ்டாண்ட் எதிர்ப்பும் தோன்றிய காலமாகும். மனிதாபிமானம் என்பது ஒரு நாகரீக இயக்கமாக ஏற்றுக்கொள்ளப்பட்டாலும், அது நாகரீகம் என்ற போர்வையில் ஒளிந்து திரும்பி வந்த அஞ்ஞானமே ஆகும். மார்ட்டின் லூத்தரோ, கிறீஸ்தவ ஐரோப்பாவின் பிளவை முன்னணியில் நின்று தொடங்கிய நபர். "கடவுளோ மோட்சத்தில் இருக்கிறார்; நீங்களோ பூமியில் இருக்கிறீர்கள்” என்று கூறி, கடவுளையும், மனிதனையும் பிரித்த பெரிய பிரிவினைக் காரன். இவ்விதம் மோட்சத்திற்கும், பூமிக்கும் இடையே கடக்க முடியாத ஒரு பெரும் பாதாளத்தை லூத்தர் ஏற்படுத்தினான். கடவுளுக்கும், மனிதருக்கும் இடையில் எந்த மத்தியஸ்தமும் இல்லையென அவன் மறுத்தான். கிறீஸ்துவைப் பற்றி மிகுதியாகப் பேசிய லூத்தர், முடிவில் கிறீஸ்து நாதருடைய மனுஷீகத்தின் மத்தியஸ்தத்தையே மறுத்தான். அதன் தொடர்பாகவே கிறீஸ்துவுடன் இணை மீட்பராகிய அவரது அன்னையின் மத்தியஸ்தத்தையும் மறுத்தான். நவீன காலத்தின் கடவுள் எதிர்ப்பு இப்படித் தொடங்கியது.

48. இந்தத் தாக்குதலுக்குத் திருச்சபை திரிதெந்தீன் பொதுச் சங்கத்தின் வழியாகப் பதிலளித்தது. திருச்சபையின் பெரிய அர்ச்சியசிஷ்டவர்கள், அர்ச். இஞ்ஞாசியார், அர்ச். பெரிய தெரசம்மாள், அர்ச். சிலுவை அருளப்பர், அர்ச். அல்காந்தரா இராயப்பர் போன்றோர் தங்கள் வாழ்க்கையாலும், போதனையாலும் பதிலளித்தனர். இந்த அர்ச்சியசிஷ்டவர்கள் மூலமாகத் திருச்சபையின் தீர்க்க தரிசன வரம் அபரிமிதமாகப் பொங்கிப் பயன் விளைவித்தது.

17-ம் நூற்றாண்டு

49. பதினாறாம் நூற்றாண்டில் வித்திடப்பட்ட நாஸ்திகத் தீமையானது தொடர்ந்து வளர்ந்து பரவியது. ஜெர்மனியில் புரொட்டஸ்டாண்ட் புரட்சியோடு ஆரம்பித்த இத்தீமை, அடுத்து பிரான்சு நாட்டிற்கும் பரவியது. பிரான்சு நாட்டில் திருச்சபைக்குள்ளேயே ஜான்சனிஸம் என்ற பெயரில் இது தலையெடுத்தது. ஜான்சனிஸம் என்பது புராட்டஸ்டாண்ட் பதிதத்தின், குறிப்பாக, கால்வினிஸத்தின் கத்தோலிக்கப் பதிப்பு ஆகும். இந்த ஜான்சனிஸ பதிதம் கிறீஸ்துவின் திரு இருதயத்தையே நேரடியாகத் தாக்கியது. இந்தச் சூழ்நிலைகளில்தான் தற்காலத்துத் தீர்க்கதரிசனங்களில் முதலாம் தீர்க்கதரிசனம் கொடுக்கப் பட்டது. 1675-ம் ஆண்டில், அர்ச். மார்கரீத் மரியம்மாள் அலாக்கோக் என்ற சகோதரிக்கு திரு இருதயக் காட்சிகள் அளிக்கப்பட்டன. இந்தக் காட்சிகள் பாரே-லே-மோனி யாவில் சம்பவித்தன. மேலும் திருச்சபையின் வரலாற்றில் பழமையும், புதுமையும் ஒரே சமயத்தில் அடங்கிய சம்பவமாக இக்காட்சிகள் திகழ்கின்றன. தீர்க்கதரிசனம் எப்பொழுதும் திருச்சபையில் இருந்தே வந்துள்ளது என்பது பழமையின் அம்சம். இந்தத் தீர்க்க தரிசனம் அளிக்கப்பட்ட முறை புதுமையான அம்சம். தமது அன்பிற்குக் கிடைத்த புறக்கணிப்பிற்கு மறுமொழியாகக் கிறீஸ்துநாதர் தம் திரு இருதயத்தை மறுபடியும் திறந்து காட்டிப் பேசினார். 17-ம் நூற்றாண்டில் நமக்குக் கிடைத்த இக்காட்சிகளும், செய்திகளும் சேசுவின் திரு இருதயத்தைச் சுற்றியவையாக இருந்தன. இவற்றின் தொடர்ச்சியாக, இருபதாம் நூற்றாண்டில் கிறீஸ்துவின் இருதயத்தோடு இணைந்த மாதாவின் மாசற்ற இருதயம் நமக்கு அளிக்கப்பட்டிருக்கிறது. கடவுள் தமது அளவிட முடியாத இரக்கத்தினால் அவருடைய திருச்சபைக்கு இந்தக் கொடையை வழங்கியிருக்கிறார். ஏனெனில் உலகம் கிறீஸ்துவின் 17-ம் நூற்றாண்டுச் செய்தியை நிராகரித்ததால் புரொட்டஸ்டாண்ட் புரட்சியானது தொடர்ந்து நாசத்தை விளைவித்து வந்தது.

18-ம் நூற்றாண்டு

50. பதினெட்டாம் நூற்றாண்டில் இந்தப் புரட்சி மேலும் பரவியது. அதன் உச்சகட்டமாக, கடவுளுக்கு எதிராகத் திட்டமிடப்பட்டு அரசியல் ஆட்சி முறையில் செய்யப்பட்ட ஒரு எதிர்ப்பாக பிரெஞ்சுப் புரட்சி உருவெடுத்தது. பிரெஞ்சுப் புரட்சி 16, 17, 18-ம் நூற்றாண்டுகளில் ஏற்பட்ட கடவுள் மறுதலிப்பு, பிளவு, பகுத்தறிவு வாதம் இவைகளின் விளைவு ஆகும். இந்தப் புரட்சியை, 1917-ம் ஆண்டில் வெளியுலகிற்குத் தெரியத் தொடங்கிய ஃப்ரீமேசன்றி என்ற சாத்தானின் இரகசிய சபை தனக்காகப் பயன்படுத்திக் கொண்டது. 

51. கீழ்க்கண்ட ஆண்டுகளை சற்று உற்றுக் கவனி யுங்கள்.

1517 --லூத்தரின் பதிதப் புரட்சி. 

1717 --சாத்தானின் இரகசிய சபையின் வெளிப்படைத் தோற்றம். 

1917 --கம்யூனிச ரஷ்ய போல்ஷெவிக் புரட்சி. 

1917 --போல்ஷெவிக் புரட்சிக்கு மாற்றாக கடவுள் மரியாயின் மாசற்ற இருதயத்தின் வழியாகக் கூறிய பாத்திமா செய்தி.

52. இந்த ஆண்டுகளின் ஆச்சரியமான ஒற்றுமையைப் பாருங்கள். (200 ஆண்டு இடைவெளியைக் காண்க. இத்துடன் மற்றும் பல தேதிகளையும் குறிப்பிடலாம்). ஆனால் 18-ம் நூற்றாண்டில் ஏற்பட்ட பிரெஞ்சுப் புரட்சி, இரகசிய சபை செய்த திட்டமே ஆகும். இந்த 18-ம் நூற்றாண்டில் மனிதன் கடவுளை நிராகரித்து, தானே தனக்கு எஜமானனாகவும், தானே தன்னில் நிறைவு பெற்றவனாகவும் நடந்து கொள்ள வந்து விட்டான்.

19-ம் நூற்றாண்டு

53. பிரெஞ்சுப் புரட்சியின் பின்விளைவாக, நெப்போலியன் தன்னுடைய அகந்தை மிக்க பயங்கரமான வெற்றிகளின் மூலம் ஐரோப்பாக் கண்டத்தில் கிறீஸ்தவ சாம்ராஜ்யத்தை நொறுக்கி, பல நாடுகளை அழித்து, புரட்சி விதைகளை ஐரோப்பாவெங்கும் தூவினான். மேலும் 19-ம் நூற்றாண்டின் துவக்கம் திருச்சபைக்கும், விசுவாசத்திற்கும் பேரிடியாக இருந்தது. இருப்பினும் அதே சமயத்தில்தான் தொடர்ச்சியான மகிமை மிக்க தீர்க்க தரிசனங்களும் ஆரம்பமாயின. 1830-ம் ஆண்டில் ரூ-டி-பாக் என்ற இடத்தில் அற்புத சுரூபமும், “ஜென்மப் பாவமில்லாமல் உற்பவித்த மரியாயே, உம்மை அண்டி வரும் எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்” என்ற மன்றாட்டு ஜெபமும் நமக்குக் கிடைத்தன. 

54. இவ்வாறு இக்காலத்துத் தீர்க்கதரிசனங்கள், தொடக்க முதலே மரியாயின் அமலோற்பவத்தின் நிழலிலேயே கொடுக்கப்பட்டன. 19-ம் நூற்றாண்டின் மத்தியில், அதாவது 1854-ம் ஆண்டில் மரியாயின் அமலோற்பவம் ஒரு விசுவாச சத்தியமாகப் பிரகடனப்படுத்தப்பட்டது. நான்கு ஆண்டுகள் கழித்து, 1858-ம் ஆண்டு மார்ச் மாதம் 25-ம் நாள் நமது அன்னை இளம் பெர்நதெத்திற்குக் காட்சி அளித்து, "நானே அமலோற்பவம்” என்று கூறி பாப்பரசர் 1854-ல் செய்ததை உறுதிப்படுத்தினார்கள். இவ்விதமாக 19-ம் நூற்றாண்டு, திருச்சபையிலும், உலகிலும் அமலோற்பவ மரியாயின் யுகத்தை வளர்த்தது. 

20-ம் நூற்றாண்டு

55. 1917-ம் ஆண்டு இருபதாம் நூற்றாண்டின் மிகப் பெரிய திருப்புமுனையாக இருப்பதைக் காண்கிறோம். 1899-ம் ஆண்டில் மனித குலத்தை சேசுவின் திரு இருதயத்திறகு பாப்பரசர் 13-ம் சிங்கராயர் ஒப்புக்கொடுத்த பின்பும் மனிதன் கடவுளுடைய அழைப்பை ஏற்கவில்லை. இதை அவரால் சகிக்க முடியவில்லை. மனிதனின் அடாத செயல்கள், கொலை பாதகங்கள், மிகப் பெரிய பாவங்கள் தண்டிக்கப்படாமல் பெருகிக் கொண்டே போவதைக் கடவுள் எப்படி அனுமதிக்க முடியும்? இருப்பினும், கடவுளின் கருணை, மனிதனைப் பாதுகாக்கவே உபாயங்களைத் தேடியது. ஆகையால் தம் திருக்குமாரனின் திரு இருதயத்திற்கு மனிதன் பதிலளிக்க மறுப்பதையும், அல்லது - போதிய அளவில் பதில் அளிக்காமல் இருப்பதையும் கண்டு, கடவுள் தம் தாயையே உலகிற்கு அனுப்பினார். மாதா உலகத்துடன் தொடர்பு கொள்கிறார்கள். பற்பல இடங்களில் காட்சிகளையும், அவற்றை நம்ப வைப்பதற்கு புதுமைகளையும், நாம் ஏற்று நடப்பதற்குச் செய்திகளையும் தருகிறார்கள். மரியாயின் அமலோற்பவ இருதயம் இக்கால இறுதியில் மனிதனை மாற்றியமைக்கத் தேடுகிறது. மாதாவின் மாசற்ற இருதயத்தின் பாகம் வெளிப்படுகிறது. சேசுவின் திரு இருதயம் மரியாயின் மாசற்ற இருதயத்திற்குப் பின்னால் எவ்வாறோ ஒதுங்கி நின்று கொள்கிறது. 1917-ன் புதுத் திருப்பம் இதுவே.

56. போல்ஷெவிக் ரஷ்யாவின் வெற்றியின் காரணமாக ஐரோப்பாவின் ஒரு அற்றத்தில், (முன்பு இராயப்பர் சதுக்கமாயிருந்த) லெனின் சதுக்கத்தில் சிவந்த பறவை நாகத்தின் அக்கிரமம் எழுந்த அதே தருணத்தில், ஐரோப்பாவின் மறு அற்றத்தில் மரியாயின் மாசற்ற இருதயமாகிய “சூரியனை ஆடையாகத் தரித்த ஸ்திரீ' தோன்றினாள்! 1917-ம் ஆண்டு அக்டோபர் 13-ம் நாள் சூரியனில் நடந்த அதிசயமே அது! இந்த அதிசய சூரியனே கிறீஸ்துவின் அடையாளம். இந்த அதிசயம் வத்திக்கான் திருநகரில் நான்கு முறை 12-ம் பத்திநாதருக்காகப் புதுப்பிக்கப்பட்டது. ஏனெனில் 1950-ம் ஆண்டு அவர் மாதாவின் மோட்ச ஆரோபணத்தைத் திருச்சபையில் விசுவாச சத்தியமாகப் பிரகடனம் செய்தார். பரலோகத்திற்கு ஆரோபணமான மாமரியையே நீதியின் சூரியனாகிய சேசுகிறீஸ்து பரலோகத்திற்கும், பூலோகத்திற்கும், மகிமையும், வல்லமையும் பொருந்திய சூரியனாக ஏற்படுத்தினார். 

பாத்திமா செய்தியும், மரியாயின் மோட்ச ஆரோபணமும்

57. இப்பொழுது பாத்திமா செய்திக்கும், மரியாயின் பரலோக ஆரோபண சத்தியத்திற்கும் உள்ள தொடர்பை நாம் புரிந்துகொள்கிறோம். பாத்திமா காட்சி அருளப்பட்ட 1917-ம் ஆண்டும், மாதாவின் மோட்ச ஆரோபணம் சத்தியமாக அறிவிக்கப்பட்ட 1950-ஆம் ஆண்டும் பிரிக்க முடியாதவை. அமலோற்பவத்தின் யுகமாகத் திகழ்ந்த 19-ம் நூற்றாண்டின் தொடர்ச்சியாகவே மாதாவின் மோட்ச ஆரோபணத்தின் யுகமாக, “சூரியனை ஆடையாக அணிந்த பெண்மணியின்' யுகமாக 20-ஆம் நூற்றாண்டு விளங்குகிறது. 20-ஆம் நூற்றாண்டின் நடு வருஷமாகிய 1950-ல் இச்சத்தியம் பிரகடனப்படுத்தப்பட்டது ஒரு குறிப்பிடத்தக்க காரியமாகும். அந்த ஆண்டு மாதா யுகத்தின் நடுச் சிகரமாக விளங்குகிறது.

இன்று அதற்குப் பின் 63 ஆண்டுகளுக்கு மேலாகி விட்டது. ஆனால் உலகம் இன்னும் சூரியனில் ஸ்தாபிக்கப் பட்ட மாட்சிமை மிக்க மாமரி அரசியின் வார்த்தைகளுக்கு செவிசாய்க்கவில்லை. மீட்பின் சூரியனாகிய கிறீஸ்து, ஜீவனும், வெற்றியும் அளிக்கும் தம்முடைய அருட்கதிர் களை மரியாயின் மாசற்ற இருதயத்தின் வழியாக அன்றி வேறு வழியில் நமக்கு அளிக்க மாட்டார் என உலகம் உணரவில்லை. இதனாலேயே உலகம் மேலும் ஆழமாகப் பாவத்தில் மூழ்கி, அழிவை நோக்கித் தலைதெறிக்க ஓடிக் கொண்டிருக்கிறது. கிறீஸ்து, மரியாயின் மூலமாகவே உலகை ஆள விரும்புகிறார் என இவ்வுலகம் புரிந்து கொள்ளாததே இதற்குக் காரணம்.

58. இது சம்பந்தமாக நமது முடிவைச் சுருக்கமாகக் காண்போம். செய்தியோ நமக்கு அளிக்கப்பட்டு விட்டது. நமது அன்னைக்கு ஏற்ற பதிலை நாம் அளிக்காததால் 1917-ம் ஆண்டு முதல் சகோதரி லூசியா ஒருவகையில் உயிர்ப்பலியாகத் துன்புற்று வந்தாள். பாத்திமா செய்தியைத் தியானித்து நமது ஒருமித்த கவனத்தை மரியாயின் மாசற்ற இருதயத்தை நோக்கி நாம் செலுத்த வேண்டும். இந்த வேண்டுகோள் புரியாத வேண்டுகோள் அல்ல. மரியாயின் மாசற்ற இருதயத்தின் வழியாக வரும் வேண்டுகோள். நாம் மாதாவை நாடிச் சென்று, அவர்களுக்குச் செவிசாய்க்க வேண்டும். “என் இருதயத்திடம் வாருங்கள். அதன் மூலமாகவே உங்களை எதிர்நோக்கியிருக்கும் போராட்டங்களை நீங்கள் சந்திக்கப் போதுமான பலம் பெறவும், உங்கள் சிலுவைகளை நீங்கள் சுமக்கவும் முடியும்” என்று அவர்கள் கூறுவதைக் கேட்க வேண்டும். இந்த வேண்டுகோள் வேதசாஸ்திரிகளுக்கும், திருச்சபையில் பொறுப்புள்ளவர்களுக்கும் சுவிசேஷத்தை அறிவிக்க அழைக்கப்பட்ட ஒவ்வொரு கிறீஸ்தவனுக்கும் விடுக்கப்பட்ட வேண்டுகோளாகும். ஏனெனில், “நான் கூறுவதைக் கேளுங்கள், மற்றவர்களையும் கேட்கச் செய்யுங்கள்' என்று மாதா கூறுகிறார்கள்.

59. திருச்சபையின் ஆட்சிபீடத்திற்கு, அதாவது பாப்பரசருக்கும், ஆயர்களுக்கும் கொடுக்கப்பட்ட வேண்டு கோளை விசேஷமாக எண்ணிப் பார்க்க வேண்டும். "ரஷ்யாவை எனக்கு அர்ப்பணியுங்கள். உங்களுக்கு சமாதானம் அருளப்படும். ஏனெனில் சமாதானத்தின் பிரபுவாகிய கிறீஸ்து, சமாதானத்தை என் மூலமாக மட்டுமே உங்க ளுக்கு அளிக்க ஆசிக்கிறார். என்னுடைய இருதயத்தின் வழியாக அவர் தம்மையே உங்களுக்கு அளிப்பார்" என்கிறார்கள் நம் அன்னை.