பாத்திமா முன்னோடிக் காட்சிகள்

இரண்டாம் உலகப் போரில் ஹிரோஷிமா பட்டணத்தில் அணுக்குண்டு வெடித்தது. பட்டணம் முழுவதும் அழிந்தது, ஒரேயோரு வீட்டைத் தவிர! எட்டுப் பேர் அவ்வீட்டில் இருந்தார்கள். யாதொரு சேதமுமின்றி தப்பினார்கள். அவர்களை அநேக டாக்டர்கள் பரிசோதனை செய்ததில் ஒருவரிடமும் அணுக்கதிரின் விளைவு எதுவும் காணப்படவில்லை. அவர்கள் மட்டும் எப்படிக் காப்பாற்றப்பட்டார்கள்? அவர்கள் பாத்திமாவில் மாதா கேட்டுக் கொண்டபடி, அன்றாடம் ஜெபமாலை சொல்லி தங்களை மரியாயின் மாசற்ற இருதயத்திற்குப் பரிகாரமாக ஒப்புக் கொடுத்து வந்தார்கள்! 

இன்று, அன்று இருந்ததைவிட காலமும் சூழ்நிலையும் அதிக பயங்கரமாயிருக்கிறது. அநேக காட்சிகளில் அறிவிக்கப்பட்டபடியே பூகம்பங்களும் கடற்கொந்தளிப்புகளும் சாலை, கடல், ஆகாய விபத்துக்களும் கண்டுபிடிக்க முடியாத கொடிய வியாதிகளும், தொற்று நோய்களும் திடீர் மரணங்களும் உலகமெங்கும் என்றுமில்லா அளவில் ஏற்படுகின்றன. 

காரணம் எல்லாருக்கும் தெரிந்ததே: -

கடவுளால் சகிக்கக்கூடாதபடி மனிதர்கள் பாவம் செய்கிறார்கள். பத்துக் கற்பனைகளும் வரலாற்றில் இதுவரை மீறப்படாத அளவு மீறப்படுகின்றன. விசேஷமாக, கடவுளை நேருக்கு நேராக மனிதன் எதிர்த்து நிற்கிறான். அவர் இல்லையென்கிறான். அவர் இருந்தாலும் கவலை இல்லை என்கிறான். விஞ்ஞான, மருத்துவ வளர்ச்சியே தனக்குப் போதுமென்கிறான். தன் வாழ்வில் கடவுள் குறுக்கிடத் தேவையில்லை என்கிறான். சிருஷ்டிக்கிற கடவுள் ஒருவர் அவசியமில்லை என்றாற் போல் தன் இஷ்டப்படி குடும்பக் கட்டுப்பாடு, தாய் வயிற்று சிசுக்கொலைகள், விஞ்ஞான முறையில் மனிதனை உண்டாக்குதல் ஆகிய துரோகங்களைத் துணிந்து செய்கிறான். தன் சுகமே போதும் என்று மனிதன் தன்னையே வணங்குகிறான். இன்றைய பயங்கரங்களுக்கெல்லாம் இந்தப் பாவங்களே காரணம். 

இப்பாவங்களை இயற்கையால் தாங்க முடியவில்லை. அது புரளுகிறது, எதிர்க்கிறது, பூமி அதிர்ச்சியடைகிறது, நீர் கொந்தளிக்கிறது, கோளங்கள் தடம் புரள்கின்றன, பஞ்ச பூதங்களும் புரட்சி செய்கின்றன. தங்களைச் சிருஷ்டித்த சர்வேசுரனுக்கெதிரான பழிகளைச் சகிக்க மாட்டாமல் குமுறுகின்றன.

மனிதன் திருந்தினாலொழிய இவை மாறாது. கடவுளே மனிதனைத் திருத்த முடியும். அவர் சொல்லி அவன் கேட்கிறதாக இல்லை. அடித்தே திருத்த முடியும் என்ற நிலை உண்டாகிவிட்டது. கடவுள் அடித்தால் யாரால் தாங்க முடியும்? ஏற்கெனவே அவர் அநேக எச்சரிப்புகளைச் செய்திருக்கிறார். மனிதன் அவைகளைச் சட்டை பண்ணாததினால் அடி விழுந்தே தீரும். அது தொடங்கிவிட்டது. அதனால்தான் உலகமெங்கும் பயங்கரங்கள் நடக்கின்றன.

மாதாவின் கரிசனை

இந்த நேரத்தில் மாதா தன் பிள்ளைகளைப் பற்றி நினைக்கிறார்கள். பிள்ளைகளைத் தேடி வருகிறார்கள். காட்சிகள் மூலமும் செய்திகள் மூலமும் நம்மை மனந்திரும்பத் தூண்டுகிறார்கள். ஆண்டவரிடம் வர அழைக்கிறார்கள். நேசிக்கும்படி கேட்கிறார்கள். கடவுளின் கட்டளைகளையும் எச்சரிப்புகளையும் மனிதன் சட்டை செய்யாதது போல் மாதாவின் பிள்ளைகளாகிய நாமும் இருந்துவிடக்கூடாது. திருச்சபை அங்கீகரித்துள்ள காட்சிகளையும் செய்திகளையும் நாம் நம்ப வேண்டும். ஏற்றுக் கொள்ள வேண்டும். அவற்றின்படி நடக்க வேண்டும். நம் பாவங்களுக்குப் பரிகாரம் செய்ய வேண்டும். அப்போது நாம் காப்பாற்றப்படுவோம். மற்றவர்களுக்காகவும் பாவப் பரிகாரம் செய்வோம். அப்போது "முன்குறிக்கப்பட்டவர்களான” மாதாவின் பிள்ளைகள் அனைவரும் காப்பாற்றப்படுவார்கள். இப்படிப் பாவப் பரிகாரம் செய்வது "மாதாவின் அப்போஸ்தலர்களின்” கடமையாக இருக்கின்றது. அதை ஏற்றுக் கொள்கிறவர்கள் பாவத்துக்காக கடவுளுக்குப் பலியாகும் அன்புள்ள ஆன்மாக்களாக இருப்பார்கள். ஆண்டவரின் அன்பையும் மாதாவின் பாதுகாப்பையும் விசேஷமாகப் பெற்றுக் கொள்வார்கள்.

மாதாவின் கருணையுள்ள தலையீடுகள்: -

பாத்திமா முன்னோடிக் காட்சிகள்

முதலில்: “அற்புத சுரூபம்” 

19, 20 ஆகிய இரண்டு நூற்றாண்டுகளிலும் தேவதாய் மனுக்குலத்தைக் காப்பாற்றத் தேடி, பல காட்சிகளையும் செபங்களையும் செய்திகளையும் அருளியிருக்கிறார்கள். அவற்றின் ஆரம்பமாக 1830ல் மாதாவின் அற்புத சுரூபம் அருளப்பட்டது. அர்ச். கத்தரீன் லாபோர் என்ற கன்னிகைக்கு. மாதா மிக அந்நியோந்நியமாகக் காட்சியளித்தார்கள். அற்புத சுரூபத்தைக் கொடுத்தார்கள். அந்த சுரூபத்தில்:

“ஜென்மப் பாவமில்லாமல் உற்பவித்த அர்ச்சியசிஷ்ட மரியாயே, உம்மையண்டி வருகிற எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்” என்ற வல்லமையுள்ள ஜெபத்தைப் பொறிக்கச் செய்தார்கள். அதன் மறுபக்கத்தில் மாதாவின் திருநாமத்தின் முதல் எழுத்தையும் (M) சேசு மரிய இருதயங்களையும் அடையாளமாக சித்தரிக்கச் செய்தார்கள். 

இவ்வற்புத சுரூபம் மனிதரின் மனங்களை ஆண்டவரிடம் திருப்புவதற்கு வல்லமை பெற்றிருந்தது. அல்போன்ஸ் ராற்றிஸ்போன் என்ற செருக்குள்ள யூதனின் மனந் திரும்புதல், கடின பாவிகளையும் மனந்திரும்ப வல்லமை பெற்றது மரியாயின் மாசற்ற இருதயமே என எண்பிக் கின்றது. இந்த இறுதிக் காலத்தில் மாதாவின் அப்போஸ்தலர்கள் தாயின் அமலோற்பவத்தைக் கொண்டே மனிதர்களை சர்வேசுரனிடம் மனந்திருப்புவார்கள் என்பதே இதன் பொருளாயிருக்க முடியும்.