நம் வெளியரங்கச் செயல்களைப் பயிற்சி செய்வதற்கான ஒறுத்தல்கள்

1. உங்கள் ஜீவியத்தின் விதியினுடைய அத்தனை விவரங்களையும் அனுசரிப்பதில் நீங்கள் மிகத் துல்லியமானவர்களாக இருக்க வேண்டும். பொது வாழ்க்கை நடத்துவது எனக்கு ஒரு முயற்சியாக இருக்கிறது; மிக அற்பமான காரியங்களுக்கு மிகப் பெரிய மதிப்புத் தருவது, இதுவே என் குறிக்கோள்; ஒரேயொரு விதியை மீறுவதைவிட சாவது மேல்" என்று கூறிய அர்ச் பெர்க்மான்ஸ் அருளப்பரை நினைவு கூர்ந்து, தாமதமின்றி அவற்றிற்குக் கீழ்ப்படியுங்கள்.

2. உங்கள் அந்தஸ்தின் கடமைகளை நிறைவேற்றுவதில், உங்களுக்கு மிகுந்த வேதனைக்குரியதாகவோ அல்லது சலிப்பூட்டுவதாகவோ எது நடந்தாலும், 'நான் நல்ல சுகமாக இல்லாது போவதைவிட வேறு எப்போதும் நான் அதிக நன்றாக இருப்பதில்லை" என்ற அர்ச் பிரான்சிஸின் வார்த்தைகளை மீண்டும் இங்கு நினைவுகூர்ந்து மிகுந்த மகிழ்ச்சியோடு இருக்க முயற்சி செய்யுங்கள்.

3. ஒருபோதும், ஒரு கணம் கூட சோம்பலாய் இராதீர்கள். காலையிலிருந்து இரவு வரை, இளைப்பாற்றி எதுவுமின்றி சுறுசுறுப்பாயிருங்கள்.

4. உங்கள் ஜீவியம், குறைந்த பட்சம் ஒரு பகுதியாவது, கல்வி கற்பதில் செலவிடப்படுகிறது என்றால், அர்ச். அக்வீனாஸ் தோமையார் தம் மாணவர்களுக்குச் சொன்ன இந்த அறிவுரையை உங்களுக்குப் பொருத்திக் கொள்ளுங்கள். 'நீங்கள் வாசிப்பதையும், கேட்பதையும் மேலோட்டமாக எடுத்துக் கொள்வதோடு திருப்தியடைந்து விடாதீர்கள். மாறாக, அதற்குள் ஆழ்ந்து செல்லவும், அதன் உட்பொருளின் ஆழத்தை அறிந்து கொள்ளவும் பிரயாசைப்படுங்கள். நிச்சயமான முறையில் நீங்கள் அறியக் கூடிய காரியத்தைப் பற்றி ஒருபோதும் சந்தேகத்தில் நிலைத்திருக்காதீர்கள். உங்கள் மனதை வளப்படுத்தும்படி ஒரு பரிசுத்த ஆர்வத்தோடு உழையுங்கள். நீங்கள் பெற்றுக் கொள்ளக்கூடிய அறிவு எல்லாவற்றையும் உங்கள் ஞாபகத்தில் ஒழுங்குப்படுத்தி, வகைப்படுத்துங்கள். மறு பக்கத்திலோ, உங்கள் புத்திக்கு அப்பாற்பட்ட பரம இரகசியங்களை ஊடுருவிக் காணத்தேடாதீர்கள்".

5. இதற்கு முன் என்ன நடந்தது என்று திரும்பிப் பார்க்காமல், அல்லது இனி என்ன நடக்கும் என்ற சிந்தனையில் எதிர்பார்த்துக் கொண்டிருக்காமல், உங்கள் தற்போதைய வேலையில் மட்டும் அக்கறை காட்டுங்கள். அர்ச் பிரான்சிஸோடு சேர்ந்து நான் இதைச் செய்யும் போது, வேறு எதையும் செய்ய எனக்குக் கடமையில்லை. மிக அமைதியாக நாம் துரிதப்படுவோம். எல்லாவற்றையும் சரியான நேரத்தில் செய்வோம்" என்று சொல்லுங்கள்.

6. உங்கள் வெளித் தோற்றத்தில் அடக்கவொடுக்கத்தோடு இருங்கள். அர்ச் பிரான்சிஸின் புறத்தோற்றத்தைவிட அதிக உத்தமமானது வேறு எதுவும் இருந்ததில்லை ; அவர் எப்போதும் தம் சிரசை நேராக வைத்திருந்தார், அதை எல்லாத் திசைகளில் திருப்புகிற நிலையற்ற தன்மையையும், அதை முன்பக்கமாகக் குனியச் செய்கிற அலட்சியத்தையும், அதைப் பின்னுக்குத் தள்ளுகிற பெருமையும், அகம்பாவமும் உள்ள மனநிலையையும் அவர் ஒரே விதமாகத் தவிர்த்து வந்தார். அவருடைய முகம் எப்போதும் சமாதானம் நிறைந்ததாகவும், எல்லாவித எரிச்சலிலிருந்தும் விடுபட்டதாகவும், எப்போதும் சந்தோஷ உற்சாகமுள்ளதாகவும், பேரமைதியும், திறந்த தன்மையும் உள்ளதாகவும் இருந்தது; ஆனாலும் அது எத்தகைய உல்லாசமோ, அஜாக்கிரதையான மனநிலையோ இல்லாமலும், உரத்த, அடக்கமற்ற, அல்லது மிக அடிக்கடி நிகழ்கிற சிரிப்பு இல்லாமலும் இருந்தது.

7. ஒரு பெருங்கூட்டத்தில் இருப்பதுபோலவே, தனியாயிருக்கும்போதும் அவர் கட்டுக்கோப்பாக இருந்தார். அவர் தம் கால்களை ஒன்றுக்கொன்று குறுக்காக வைத்தக் கொண்டதில்லை தம் முழங்கைகளில் தம் சிரசை ஒருபோதும் தாங்கியதில்லை . ஜெபித்தபோது, அவர் ஒரு சுரூபத்தைப் போல் அசைவற்றவராக இருந்தார். அவர் இளைப்பாற வேண்டுமென்று இயற்கை அவருக்கு ஆலோசனை கூறியபோது, அவர் அதைக் கவனித்ததேயில்லை.

8. சுத்தமாயிருப்பதையும், ஒழுங்கையும் ஒரு புண்ணியமென்றும், அசுத்தமாயிருப்பதையும், ஒழுங்கற்று இருப்பதையும் ஒரு துர்க்குணம் என்றும் கருதுங்கள். அழுக்கான, கறைபட்ட, அல்லது கிழிந்த உடைகளை அணியாதீர்கள் மறுபக்கத்தில் சொகுசையும், உலகத்தன்மையையும் இன்னும் பெரிய துர்க்குணமாக மதியுங்கள். நீங்கள் உடையணியும் விதத்தை, ஒழுங்கற்றது என்றோ, அழகும் கவர்ச்சியும் உள்ளது என்றோ யாரும் சொல்லாதிருப்பதையும், மாறாக அது நாகரீகமானது என்று எல்லோரும் நினைக்கக் கடமைப்பட்டிருப்பதையும் உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.