மூன்றாவது வேதபோதகப் பயணம்

சின்னப்பரின் மூன்றாவது வேதபோதகப் பயணத்தில், அவர் செல்ல விரும்பிய இடம், எபேசுஸ் பட்டணமே என்பது வெளிப்படை. அங்கு அக்கிலாவும், பிரிஸில்லாவும் அவருக்காகக் காத்துக் கொண்டிருந்தார்கள். கடவுளுக்குச் சித்தமானால் எபேசுக்குத் திரும்பி வந்து அவர்களுக்கு சுவிசேஷம் போதிப்பதாக அவர் எபேசியர்களுக்கு வாக்களித்திருந்தார் (அப். 18:19-21). இதற்கு மேல் அவர் ஆசியாவுக்குள் பிரவேசிப்பதை இஸ்பிரீத்துசாந்து தடை செய்யவில்லை. ஆகவே சில நாட்கள் அந்தியோக்கில் தங்கியிருந்த பிறகு அவர் கலாத்தியா மற்றும் பிரிஜியா நாடுகளின் வழியாகச் சென்று (அப். 18:23), மத்திய ஆசியாவின் “மேட்டுப் பகுதிகளின்” வழியாகக் கடந்து சென்று, எபேசு பட்டணத்தை அடைந்தார் (19:1). அவருடைய போதக முறை மாறாமல் இருந்தது. விசுவாசிகளுக்குப் பாரமாயிராமல் தம் ஜீவனத்தைத் தாமே சம்பாதிக்க விரும்பி, அவர் ஒவ்வொரு நாளும் கூடாரங்கள் செய்வதில் பல மணி நேரம் உழைத்தார். ஆனாலும் இந்த வேலை சுவிசேஷம் போதிப்பதினின்று அவரைத் தடுக்கவில்லை. வழக்கம்போல அவர் ஜெப ஆலயத்தில் போதிக்கத் தொடங்கினார். அங்கே மூன்று மாதங்கள் தங்கியிருந்தார். இந்தக் காலகட்டத்தின் இறுதியில், தீரான்னு என்பவருடைய கல்விச் சாலையில் “ஐந்தாம் மணி வேளை முதல் பத்தாம் மணி வேளை வரை” (அதாவது காலை பதினொரு மணி முதல் பிற்பகல் நான்கு மணி வரை) அவர் போதித்து வந்தார் (அப். 19:9). ஆசியர்களான யூதர்களும், கிரேக்கர்களுமாகிய அனைவரும் ஆண்டவருடைய வார்த்தையைக் கேட்கும்படியாக, இது இரண்டு வருடங்கள் நீடித்தது (அப். 19:20).

இயல்பாகவே அங்கு அவர் எதிர்கொள்ள வேண்டிய துன்ப சோதனைகளும், மேற்கொள்ள வேண்டியிருந்த தடைகளும் இருந்தன. இவற்றில் சில தடைகள் சின்னப்பரைப் போலவே வீணாக பேயோட்ட முயன்ற யூதர்களின் பொறாமையால் உண்டாயின. வேறு சில, குறிப்பாக எபேசில் பரவியிருந்த அஞ்ஞான மாயவித்தைகளிலிருந்து எழுந்தன. ஆனாலும் இவற்றின் மீது மிக வலிமையான முறையில் அவர் வெற்றிகொண்டார். மாயவித்தைப் புத்தகங்கள் கொண்டு வந்து எரிக்கப்பட்டன. அவற்றின் மதிப்பு 50,000 வெள்ளி நாணயங்களாகும் (ஒரு வெள்ளி நாணயம் என்பது சுமார் ஒரு நாள் வேலைக் கூலிக்கு சமமானது.). இந்த முறை வேதகலாபனை புறஜாதியாரிடமிருந்து வந்தது. இது சுயநல நோக்கம் ஒன்றினால் தூண்டப்பட்டது. ஏனெனில் கிறீஸ்தவ வேதத்தின் வளர்ச்சி, தியானா தேவதைக் கோவிலின் வடிவமாய்ச் செய்யப்பட்ட வெள்ளிப் பிரதிமைகள், மற்றும் சிலைகளின் விற்பனையை அழித்துப் போட்டது. பொதுவாக, இந்த தேவதையின் கோவிலுக்கு வரும் பக்தர்கள் இவற்றை வாங்கிச் செல்வது வழக்கம். வெள்ளி வேலை செய்யும் கன்னான்களின் தலைவனாயிருந்த தெமேத்திரியு என்பவன் சின்னப்பருக்கு எதிராக மக்கள் கூட்டத்தைத் தூண்டி விட்டான். இதன் பிறகு அங்கிருந்த நாடக சாலையில் நடந்தேறிய காட்சிகள் அர்ச். லூக்காஸால் மனதில் எளிதாகப் பதியும் விதத்திலும், நம் பரிதாபத்தைத் தூண்டும் விதத்திலும் எழுதப்பட்டுள்ளன (அப். 19:23-40). அப்போஸ்தலர் இந்தப் புயலுக்கு அடங்கிப் போக வேண்டியதாயிற்று. இரண்டரை வருடம் அல்லது அதற்கு அதிக காலத்திற்கு எபேசில் தங்கியிருந்த பின்பு (20:31:மிrஷ்eமிஷ்ழிஐ), அவர் மக்கதோனியாவுக்கும் அங்கிருந்து கொரிந்துவுக்கும் சென்றார். அங்கே அவர் குளிர்காலத்தைக் கழித்தார். அடுத்த இளந்தளிர் காலத்தில் கடல் மார்க்கமாக, சந்தேகத்திற்கு இடமின்றி, பாஸ்காவுக்காக ஜெருசலேமுக்குப் போவது அவருடைய எண்ணமா யிருந்தது; ஆனால் யூதர்கள் தம்மைக் கொலை செய்யத் திட்டமிட்டிருக்கிறார்கள் என்பதை அறிந்து, கடல் மார்க்கமாகப் போய் தம் உயிருக்கு ஆபத்து விளைவிக்க அவர்களுக்கு வாய்ப்புத் தர அவர் விரும்பவில்லை. ஆகவே அவர் மக்கதோனியா வழியாகத் திரும்பி வந்தார். ஏராளமான சீடர்கள் இரண்டு குழுக்களாகப் பிரிந்து ஒன்றில் அவரோடு சேர்ந்து போனார்கள், அல்லது துரோவாவில் அவருக்காகக் காத்திருந்தார்கள். இவர்கள் பெரேயாவின் சோப்பாத்தர், அரிஸ்தார்க்கு, தெசலோ னிக்காவின் செக்குந்துஸ், தெர்பேயின் காயுஸ், திமோத்தேயு, திக்கிக்குஸ், ஆசியாவின் துரோபிமுஸ், கடைசியாக அப்போஸ்தலர் நடபடியின் வரலாற்று ஆசிரியரும், பிலிப்பி, துரோவா, ஆஸோஸ், மித்திலீன், சியோஸ், சாமோஸ், மிலேத்துஸ், காஸ், ரோட்ஸ், பட்டாரா, தீர், தோலமே, செசாரியா, ஜெருசலேம் ஆகிய இடங்களுக்கு சின்னப்பர் மேற்கொண்ட கடற்பயணங்களின் பல்வேறு நிலைகளை நுணுக்கமாக நமக்குத் தருபவருமான லூக்காஸ் ஆகியோர் ஆவர்.

போகிற போக்கில், இன்னும் மூன்று குறிப்பிடத்தக்க நிகழ்வுகளை இங்கே குறிப்பிட வேண்டியுள்ளது. துரோவாவில் சின்னப்பர் ஒரு பின்னிரவில் போதித்துக் கொண்டிருந்த போது, மூன்றாவது மாடி ஜன்னலில் இருந்து விழுந்து இறநத இளம் யூதிக்கஸ் என்ற இளைஞனை அவர் உயிர்ப் பித்தார். மிலேத்துஸில் எபேசுஸ் மூப்பர்கள் முன்பாக மனதைத் தொடும் விதத்தில் பிரியாவிடை உரையாற்றினார். இந்தப் பிரசங்கம் அநேகரின் கண்களில் கண்ணீரை வரவழைத்தது (அப். 20:18-38). செசாரேயாவில் ஆகாபு என்பவரின் வாய்மொழியாக, அவர் கைது செய்யப்படப் போவதை இஸ்பிரீத்து சாந்துவானவர் தீர்க்கதரிசனம் உரைத்தார். ஆனால் இது ஜெருசலேமுக்குப் போகாதபடி அவரைத் தடுத்து விடவில்லை.

இந்த மூன்றாவது பயணத்தின்போதுதான் அர்ச். சின்னப்பருடைய நான்கு மாபெரும் நிருபங்கள் எழுதப்பட்டன. அவை: அவர் எபேசுஸிலிருந்து கொரிந்தியர்களுக்கு எழுதின முதல் நிருபம்: இதை அவர் அந்நகரத்திலிருந்து புறப்படுவதற்கு முன் ஏறத்தாழ பாஸ்குக் காலத்தில் எழுதினார்; மக்கதோனியா விலிருந்து கொரிந்தியருக்கு எழுதிய இரண்டாவது நிருபம்: இது அதே ஆண்டு கோடை காலத்தில், அல்லது இலையுதிர்காலத்தில் எழுதப்பட்டது; அதற்கு அடுத்த இளவேனிற் காலத்தில் கொரிந்துவில் இருந்து உரோமையருக்கு எழுதிய நிருபம்; கலாத்தியருக்கான நிருபத்தை அவர் எப்போது எழுதினார் என்பது சர்ச்சைக்குரியதாக இருக்கிறது. இந்த நிருபங்கள் அனுப்பப்பட்டது மற்றும், அவை எழுதப்பட்ட மொழிகள், அல்லது அவற்றை எழுதியபோது அப்போஸ்தலர், அல்லது அவர் சொல்லச் சொல்ல அவற்றை எழுதியவர்கள் இருந்த சூழ்நிலைகள் பற்றிய கேள்விகளுக்குப் பதில் காண, கொரிந்தியருக் கும், கலாத்தியருக்கும், உரோமையருக்கும் அவர் எழுதிய நிருபங்கள் காண்க.