61. (32) யாருக்காகப் பாடுபட்டார்?
நமக்காகப் பாடுபட்டார்.
1. சேசுகிறீஸ்துநாதர் சகல மனிதருக்காகவும் பாடுபட்டு மரித்தாரா?
மரித்தாரென்று வேத ஆகமத்தில் அனேகமுறை சொல்லியிருக்கிறது. “கிறீஸ்துநாதர் எல்லாருக்காகவும் மரித்திருக்கிறார்” (2 கொரி. 5:15), “இவர் எல்லாருக்காகவும் தம்மைத்தாமே இரட்சணியமாக ஒப்புக்கொடுத்தார்” என்று அர்ச். சின்னப்பர் வசனித்திருக்கிறார் (1 திமோ.2:6). ஆதலால் நமது ஆண்டவர் தம் மரணத்திற்குப்பின் உலகத்திலிருக்க வேண்டியவர்களும், தாம் மரிக்குமுன் இருந்தவர்களுமான விசுவாசிகள் அஞ்ஞானிகளாகிய சகலருக்காகவும் மரணமடைந்தார். “அக்கிரமிகளுக்காகக் கிறீஸ்து நாதர் மரித்தார்” (உரோ. 5:6).
2. சேசுகிறீஸ்துநாதர் சகல மனுஷரையும் இரட்சித்திருக்க எப்படி அநேகர் கேட்டுக்குள்ளாகின்றனர்?
சேசுகிறீஸ்துநாதர் தமது திருப்பாடுகளினாலும், மரணத்தினாலும், அடைந்த பேறுபலன்கள் கோடானுகோடி உலகங்களிலிருக்கக் கூடிய சகல மனிதரையும் இரட்சிக்கப் போது மாயிருந்த போதிலும், அவருடைய பாடுகளின் பேறுபலன்களில் பங்குள்ளவர்கள் மாத்திரம், இரட்சணியத்தைப் பெற்றுக் கொள் வார்கள். மனிதர்களுக்குள்ளே அநேகர் அவருடைய பாடுகளின் பேறுபலன்களுக்குப் பங்காளிகளாகாமல் அவைகளைப் பெற்றுக் கொள்ளுகிறதில்லை. ஆகையால் அவர்கள் மோட்சத்துக்குப் போக மாட்டார்கள்.
3. அநேகர் சேசுநாதருடைய பாடுகளின் பேறுபலன்களுக்குப் பங்காளிகளாகாமல் அவற்றைப் பெற்றுக்கொள்வதில்லையென்று சொல்வதேன்?
சேசுநாதருடைய பேறுபலன்கள் இரட்சணியம் அடைய விரும்புகிற சகலரையும் இரட்சிக்கப் போதுமாயிருந்த போதிலும், அவைகளை அடைய அவர் ஏற்படுத்தியிருக்கும் வழிகளை உபயோகிக்க வேண்டும். ஒரு வகையில் நாம் நம்முடைய சொந்தப் பேறுபலன்களால் அவைகளைப் பெற்று அடைய வேண்டும். அநேகர் அவருடைய தேவ வரப்பிரசாதங்களை எதிர்த்து, பேறு பலன்களைக் கொடுக்கும் தேவத்திரவிய அநுமானங்களைப் பெறாமலும், அல்லது தகுந்த ஆயத்தம் இல்லாமல் அவைகளைப் பெறாமலும், அல்லது தகுந்த ஆயத்தம் இல்லாமல் அவைகளைப் பெற்றுக்கொள்ளுவதாலும் சேசுநாதரின் மரணத்தின் பேறுபலன் களை அடையாமல் போகிறார்கள்.
4. இவ்விஷயத்தை ஒரு உவமையால் சொல்லிக் காட்டு.
சூரியன் ஒளியின் காரணமாயிருந்தாலும், அந்த ஒளி நமது அறைக்குள் வரும்படிக்கு சன்னலைச் சாத்தாமல் திறந்துவிட வேணும். இதுபோலவே ஒவ்வொரு மனிதனும் ஞானஸ்நானம் பெற்று, சுவாமி கட்டளைகளை நிறைவேற்றி, கிறீஸ்தவனுக்குரிய விதமாய் மோட்ச பாதையில் நடந்தால்தான், இவ்வழியாக சேசு நாதரின் பேறுபலன்களுக்குப் பங்காளியாகி, மோட்ச பாக்கியத்தை அடைவான்.
5. சேசுநாதர் தம்முடைய பேறுபலன்களையடைய ஏற்படுத்திய வழிகள் எவை?
முதலாவது ஞானஸ்நானத்தின் வழியாகவும், பின் மற்ற தேவதிரவிய அநுமானங்கள் வழியாகவும், அந்தப் பேறுபலன் களை நாம் அடைகிறோம்.