கிறீஸ்தவ ஒறுத்தலின் நோக்கம்

(கர்தினால் ஜோசப் மெர்சியர் (1851-1926) பெல்ஜியத்தில் உள்ள ஒரு நல்ல கத்தோலிக்கக் குடும்பத்தில் பிறந்தார். 1874, ஏப்ரல் 4-ம் தேதி மேற்றிராணியார் பட்டம் பெற்றார். திரு இருதய பக்தியை, குறிப்பாக குடும்பங்களில் திரு இருதய ஆண்டவரை அரசராக ஸ்தாபிக்கும் பழக்கத்தை தீவிரமாகப் பரப்பினார். முதல் உலகப் போரின் போது கத்தோலிக்கத் திருச்சபையின் உரிமைகளுக்காகப் போராடினார். இந்தச் சிற்றேடு விசுவாசிகள் பரிசுத்தமாக வாழ்வதற்காக எழுதப்பட்டது.)

கிறீஸ்தவ ஒறுத்தலின் நோக்கம்

ஞானஸ்நானம் நம் ஆத்துமங்களை மறுபிறப்படையச் செய்த பின்னரும், ஜென்மப் பாவம் தொடர்ந்து அவற்றின் மீது கொண்டிருக்கிற தீய பாதிப்புகளை எதிர்த்து நிற்பதே கிறீஸ்தவ ஒறுத்தலின் நோக்கமாகும்.

கிறீஸ்துநாதரில் நாம் மறுபிறப்பு அடைவது, நம்மில் பாவத்தை முற்றிலுமாகக் கழுவி அகற்றுகிற அதே வேளையில், ஜென்மப் பாவத்திற்கு முன் மனிதனிடம் இருந்த உத்தம நிலை, சமாதானம் ஆகியவற்றிலிருந்து அது நம்மை உண்மையில் வெகு தொலைவான ஓரிடத்தில் நிறுத்தி வைக்கிறது. இச்சை அதாவது, சரீர இச்சை , கண்களின் இச்சை, மற்றும் ஜீவியத்தின் அகங்காரம் ஆகிய மும்மடங்கு இச்சையானது, கிறீஸ்தவ ஜீவியத்தின் மகிமையுள்ள போராட்டங்களுக்கு நம்மைத் தூண்டியெழுப்பும்படி, ஞானஸ்நானத்திற்குப் பிறகும் கூட நம்மைப் பாதிப்பதை நாம் உணரும்படி செய்கிறது என்ற உண்மை திரிதெந்தீன் பொதுச்சங்கத்தால் அங்கீகரிக்கப்பட்டது. அது நம்மில் வாழ்கிற சேசுநாதரும், சேசுநாதரில் வாழ்கிற நாமுமாக இருக்கிற புதிய மனிதனுக்கு எதிராக பரிசுத்த வேதாகமத்தால் சில சமயங்களில் பழைய மனிதன் என்றழைக்கப்படுகிற இந்த மும்மடங்கு இச்சையாக இருக்கிறது; இது சில சமயங்களில் ஆவி, அல்லது சுபாவத்துக்கு மேலான வரப்பிரசாதத்தால் மறுபிறப்பு அடைந்த சுபாவத்திற்கு எதிரான மாம்சமாக, அல்லது வீழ்ச்சியடைந்த சுபாவமாக இருக்கிறது. இந்தப் பழைய மனிதனை, அல்லது இந்த மாம்சத்தை, அதாவது தார்மீக ஜீவியம், மற்றும் சரீர ஜீவியம் ஆகிய இருமடங்கு ஜீவியமுள்ள முழு மனிதனைத்தான் ஒருவன் அழித்து ஒழிக்க வேண்டும் என்று நான் சொல்ல மாட்டேன். ஏனெனில் நம் உலக வாழ்வு தொடரும் வரையிலும் அதற்கு சாத்தியமேயில்லை, மாறாக இந்த முழு மனிதனை ஒறுத்தலின் மூலமாகத் தான் ஒறுத்து அடக்க வேண்டும், அதாவது அது மரித்து போகச் செய்ய வேண்டும். அதை ஒரு பிரேதத்தின் பலமற்ற, செயலற்ற, மலடான கீழ்நிலைக்கு இறக்கிக் கொண்டுவர வேண்டும்; அது பாவமாகிய தனது கனியைப் பிறப்பிப்பதை ஒருவன் தடுக்க வேண்டும், நம் ஆன்ம ஜீவியம் முழுவதிலும் அது சிறிதளவும் செயல்படாதபடி செய்துவிட வேண்டும்.

ஆகவே கிறீஸ்தவ ஒறுத்தல் முழு மனிதனோடும் தொடர்புள்ளதாக இருக்க வேண்டும்; அது, நம் சுபாவம் செயல்படக்கூடிய ஒவ்வொரு செயல்பாட்டு நிலைக்கும் பரவ வேண்டும்.

ஒறுத்தலாகிய புண்ணியத்தின் நோக்கம் இத்தகையதே; நம் ஜீவியங்களில் அது தன்னை வெளிப்படுத்துகிற செயல்பாட்டின் பல வடிவங்களை ஒன்றன்பின் ஒன்றாக சுருக்கமாக ஆராய்வதன் மூலம், இந்த ஒறுத்தலைப் பயிற்சி செய்யும் விதத்தை நாம் விளக்கிக் கூறுவோம். இந்தச் செயல்பாட்டின் பல்வேறு வடிவங்கள் பின்வருமாறு:

1. சரீர ஒறுத்தல்.

II. புலன்கள், நினைவு மற்றும் ஆசாபாசங்களை ஒறுத்தல் 

III. மனதையும், சித்தத்தையும் ஒறுத்தல் 

IV. நம் வெளியரங்கச் செயல்களைப் பயிற்சி செய்வதற்கான ஒறுத்தல்கள். 

V. நம் அயலாரோடு நம் உறவுகளை அனுசரிப்பதில் ஒறுத்தல்கள்.

குறிப்பு: இங்கே நாம் ஒன்று திரட்டியுள்ள ஒறுத்தலின் எல்லா அனுசரிப்புகளும் அர்ச்சிஷ்டவர்களின் முன்மாதிரிகைகளிலிருந்து, விசேஷமாக அர்ச் அகுஸ்தீனர், அர்ச் தாமஸ் அக்வீனாஸ், அர்ச். தெரேசம்மாள், அர்ச். பிரான்சிஸ் சலேசியார், அர்ச் பெர்க்மான்ஸ் அருளப்பர் ஆகியோரின் முன்மாதிரிகைகளிலிருந்து பெறப்பட்டவையாகும். அல்லது இவை வணக்கத்துக்குரிய லூயி த ப்ளுவா, ரொட்ரீகஸ், ஸ்காராமெல்லி, மொன்சிஞ்ஞோர் கே, மடாதிபதி ஆல்மாண்ட், மடாதிபதி ஹாமோன், மடாதிபதி தூபுவா போன்ற திருச்சபையால் அங்கீகரிக்கப்பட்ட ஞான ஆசிரியர்களால் பரிந்துரைக்கப்பட்டவையாக இருக்கின்றன.