அர்ச். தமதிரித்துவம்

14. (3) அவர் தேவசுபாவத்தில் ஒருவராயிருந்தாலும் ஆள் வகையிலே எப்படியிருக்கிறார்?

திரித்துவமாயிருக்கிறார்.

15. (4) திரித்துவமாயிருக்கிறார் என்பதற்கு அர்த்தமென்ன?

ஆள்வகையில் மூவராயிருக்கிறாரென்று அர்த்தமாகும்.

16. (5) இந்த மூன்றாட்களுக்கும் பெயர் என்ன?

பிதா, சுதன், இஸ்பிரீத்துசாந்து.


1. சுபாவம் என்னும் வார்த்தைக்குப் பதிலாய்ச் சரியயாத்த அர்த்த முள்ள வேறு மொழி சொல்லு.

தன்மை, இயல்பு.

2. சுபாவம் என்பதற்கு அர்த்தமென்ன?

ஒரு வஸ்து இன்ன வஸ்துவாயிருக்கும்படியாக அவசிய மான சுய குணங்களின் சேர்க்கையாம். அந்த குணங்கள் இந்த வஸ்துவுக்கும் மற்ற வஸ்துக்களுக்கும் இருக்கும் வித்தியாசத்தைக் காட்டும். இப்படியே பகுத்தறிவுள்ள ஆத்துமத்தினுடையவும் மனித சரீரத்தினுடையவும் சேர்க்கை மனித சுபாவமாம். அந்த இரண்டு குணங்கள் மனிதனுக்கு மாத்திரம் உரியதாயிருப்பது மல்லாமல், அவனுக்கும் மற்ற வஸ்துக்களுக்குமுள்ள வித்தியாசத் தைக் காட்டும்.

3. எல்லா வஸ்துக்களுக்கும் சுபாவம் உண்டா?

உண்டு. ஆத்தும சரீரம் கொண்டு புத்தி மனதுள்ள விதமாய் நடந்து கொள்ளும் சக்தியை மனித சுபாவம் என்பர். மிருகத் தன்மை கொண்டிருக்கும் பொருட்களுக்கு மிருக சுபாவம் உண்டு. ஒவ்வொரு பொருளின் தன்மையே அதன் சுபாவமாகும்.

4. தேவசுபாவம் என்றால் என்ன?

சர்வேசுரன் சர்வேசுரனாயிருப்பதற்கு அவசியமான குணங்கள் என்று அர்த்தமாம்.

5. சர்வேசுரன் சர்வேசுரனாயிருப்பதற்கு அவசியமானதென்ன?

1-வது--உன்னதமான வஸ்துவாயிருக்க வேண்டும்;

2-வது--சுயமாய் (தாமாய்) இருக்க வேண்டும்;

3-வது--சகல மேலான இலட்சணங்களையும் பூரண மாய்க் கொண்டிருக்க வேண்டும்.

6. அர்ச். திரித்துவம் என்னும் வார்த்தைக்கு அர்த்தமென்ன?

திரித்துவம் (திரி=மூன்று+துவம்=குணம்) ஒன்றில் மூன்று இருப்பது அல்லது மூன்று ஒன்றாகச் சேர்ந்திருப்பது என்று அர்த்தமாகும்.

7. ஆள் என்ற வார்த்தைக்கு அர்த்தமென்ன?

பேர் என்று அர்த்தமாகும்.

8. ஆள் என்றால் என்ன?

தன் சுபாவத்திற்குரியவைகளையெல்லாம் செய்து, அவைகளுக்கு உத்தரவாதியாயிருக்கும் ஓர் அறிவுள்ள வஸ்துவே ஆள் என்று சொல்லப்படும். இப்பேர்ப்பட்ட தன்மை மனிதர் களுக்கும் சம்மனசுகளுக்கும் இருக்கிறபடியால், அவர்களை ஆட்கள் என்று சொல்ல வேண்டும்.

9. அர்ச்சியசிஷ்ட திரித்துவத்தைப் பற்றி நாம் விசுவசிக்கிறதென்ன?

ஒரே சர்வேசுரன் மெய்யாகவே மூன்று தேவ ஆட்களா யிருக்கிறாரென்று விசுவசிக்கிறோம்.

10. பிரித்தறியக் கூடிய மூன்று ஆட்கள் என்பதற்கு அர்த்த மென்ன?

ஒரு ஆள் இன்னொரு ஆள் அல்ல என்று அர்த்தமாகும். அதாவது பிதா என்பவர் சுதனல்ல; சுதன், இஸ்பிரீத்துசாந்துவல்ல; இஸ்பிரீத்துசாந்து பிதா அல்ல, சுதனும் அல்ல என்று அர்த்தமாம்.

11. சர்வேசுரன் மூன்றாட்களாயிருக்கிறார் என்று நாம் எப்படி அறிவோம்?

இது வேத சத்தியம். மனித இரட்சணியத்திற்கு அவசியமான நான்கு சத்தியங்களில் இரண்டாவது.

(1) யூதர்கள் விக்கிரக ஆராதனைக்கு மிகவும் சார்புள்ளவர்களாயிருந்தமையால், சர்வேசுரன் தாம் மூன்றாட்களா யிருப்பதைப் பழைய ஏற்பாட்டில் விவரமாய் வெளிப்படுத்த வில்லை. ஆனாலும் அந்த வேத சத்தியத்தைப் பற்றிச் சாடையாய்ப் பேசியிருக்கிறார். (ஆதி.1:26; 3:22; 11:7; சங்.32:6).

(2) நமது திவ்விய ஆண்டவரே அந்த வேத சத்தியத்தை நமக்குத் தெளிவாய் அறிவித்திருக்கிறார். அவர் தமது பிதாவையும், இஸ்பிரீத்துசாந்துவையும் பற்றி அநேக சமயத்தில் பேசி, அவர்கள் தம்மோடு ஒரே சர்வேசுரனாயிருக்கிறர்கள் என்று விளக்கிக் காட்டியிருக்கிறார். மேலும் தமது அப்போஸ்தலர்களைச் சுவிசேஷத்தைப் போதிக்க அனுப்பும்போது “நீங்கள் போய், சகல சாதி சனங்களுக்கும் போதித்து: பிதாவுடையவும், சுதனுடையவும், இஸ்பிரீத்துசாந்துவுடையவும் நாமத்தினாலே அவர்களுக்கு ஞான ஸ்நானம் கொடுங்கள்” என்று கட்டளையிட்டார் (மத்.28:19). நாமங்களினாலே என்று சொல்லாமல் நாமத்தினாலே என்பதினால் அம்மூவரும் ஒரே சர்வேசுரனாயிருப்பதாக சேசுநாதர் தெளிவாய்ச் சொல்லியிருக்கிறார்.

(3) அர்ச். அருளப்பர் தமது முதல் நிரூபத்தில்: “பரலோகத்தில் சாட்சி கொடுக்கிறவர்கள் பிதா, வார்த்தையானவர், இஸ்பிரீத்துசாந்து ஆகிய மூவர். இம்மூவரும் ஒன்றாயிருக்கிறார்கள்” என்று எழுதினார் (1 அரு. 5:7).

(4) அர்ச். சின்னப்பர் கொரிந்தியருக்கு எழுதின இரண்டாம் நிரூபத்தில்: “ஆண்டவராகிய சேசுகிறீஸ்துவின் கிருபை யும், சர்வேசுரனுடைய அன்பும், இஸ்பிரீத்துசாந்துவின் ஐக்கிய வரமும் உங்கள் அனைவரோடேயிருப்பதாக” என்று வரைந்துள் ளார் (2 கொரி. 13:13).

12. இம்மூன்றாட்களும் தங்களைத் தாமே வெளிப்படையாய்க் காண்பித்ததில்லையா?

காண்பித்திருக்கிறார்கள். சேசுநாதர் சுவாமி யோர்தான் நதிக்கரையில் அர்ச். ஸ்நாபக அருளப்பர் கையால் தவ ஞான ஸ்நானம் பெற்றுக் கொண்ட சமயத்தில், பிதா,சுதன், இஸ்பிரீத்து சாந்துவாகிய தமத்திரித்துவத்தின் பரம இரகசியத்தைத் தெளிவாக அறிவிக்கச் சர்வேசுரன் திருவுளம் கொண்டார். சேசுநாதர் சுவாமி தண்ணீரை விட்டுக் கரையில் ஏறின மாத்திரத்தில், இஸ்பிரீத்து சாந்துவானவர் புறா ரூபமாயத் தோன்றி அவர் தலைமேல் இறங்கினார். அதே சமயத்தில் “என் நேச குமாரன் இவரே, இவர் பேரில் நான் பூரண பிரியமாயிருக்கிறேன்” என்னும் பிதாவின் குரலொலியும் வானத்தினின்று கேட்கப்பட்டது (மத். 3:16,17). இதனால் திரித்துவத்தின் மூன்றாட்களை எளிதாய் கண்டு கொள்ளலாம். பிதாவானவர் வானத்தினின்று பேசுகிறார். மனுஷாவதாரம் செய்த சுதனானவர் ஞானஸ்நானம் பெறுகிறார். இஸ்பிரீத்துசாந்துவானவர் புறா வடிவாய்ச் சுதன் தலைமேல் இறங்கினார்.